Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

சசிகலா: 27-ம் தேதிக்குப் பிறகும் சிகிச்சையில் இருந்தால்... சட்டம் என்ன சொல்கிறது?

`சசிகலா உயிருக்கு ஆபத்து' என்று திவாகரன் சந்தேகம் கிளப்பிய நொடியிலிருந்து, சசிகலாவின் உடல்நிலை குறித்த செய்திகள் படபடக்க ஆரம்பித்திருக்கின்றன. வருகிற 27-ம் தேதி, சிறையிலிருந்து விடுதலையாகி தமிழ்நாடு வரும் சசிகலாவை வரவேற்க தடபுடல் ஏற்பாடுகளை செய்துவந்த அவருடைய அபிமானிகள் `மூச்சுத்திணறல், கொரோனா தொற்று' என சசிகலாவின் உடல்நிலை குறித்த அடுத்தடுத்த செய்திகளால் அதிர்ந்துபோயினர்.

`சசிகலாவைத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்; உறவினர்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்; சசிகலாவின் உடல்நிலை குறித்த மருத்துவத் தகவல்களை வெளியிட வேண்டும்' என்று சசிகலாவின் உறவினர்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப, தற்போது சசிகலா சிகிச்சை பெற்றுவரும் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனை நிர்வாகம் சசிகலாவின் உடல்நிலை குறித்த மெடிக்கல் ரிப்போர்ட்டை வெளியிட்டிருக்கிறது.

வீல் சேரில் சசிகலா

அதில், சசிகலாவுக்குத் தீவிர நுரையீரல் தொற்றுடன் உயர் ரத்த அழுத்தம், தைராய்டு குறைபாடு, சர்க்கரைநோய்ப் பிரச்னைகளும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, நடப்பு அரசியலோடு சசிகலாவின் உடல்நிலையை இணைத்து சமூக வலைதளங்களில் சந்தேகக் கேள்விகள் அலையடிக்க ஆரம்பித்துள்ளன.

இது குறித்து விளக்கமாகப் பேசும் சசிகலாவின் ஆதரவாளர்கள், ``எங்கள் சின்னம்மா சசிகலா, வரும் 27-ம் தேதி விடுதலையாகிறார். கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டு எல்லைக்குள் அவர் வரும்போது பிரமாண்ட வரவேற்பு கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். ஓசூரிலிருந்து ஆயிரக்கணக்கான கார்கள் புடைசூழ, சென்னைக்குள் சசிகலாவை அழைத்து வர முடிவுசெய்து பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு காவல்துறையிடம் முன் அனுமதியும் பெற்றிருந்தோம்.

அரசியல்ரீதியாக, சசிகலாவின் வருகையை விரும்பாத ஆளுங்கட்சியினர் எங்களுக்குப் பல்வேறு வகையிலும் தொல்லை கொடுத்துவருகின்றனர். குறிப்பாக, சசிகலா விடுதலையாகும் நாளில் அவரைப் பற்றிய செய்திகளை இருட்டடிப்புச் செய்யும் வகையில், வேண்டுமென்றே 'அம்மா நினைவகம் திறப்பு விழா'வை 27-ம் தேதியில் நடத்துகின்றனர். இன்னும் குறிப்பாக அந்த விழாவில், சசிகலா கலந்துகொள்ளக் கூடாது என்பதிலும் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர் துரோகிகள்.

சசிகலா இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாலும்கூட, சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் இப்போதும் அவர் இருந்துவருகிறார். உள்துறை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ்தான் சிறை நிர்வாகம் வருகிறது. கர்நாடக பா.ஜ.க தரப்பு தலைவர்கள் சிலர் சந்தித்ததாகவும் சொல்கிறார்கள். உடனடியாக சசிகலா, தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது. முடிந்தவரை தள்ளிப்போட வேண்டும் என தமிழ்நாட்டிலிருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படுகிறது'' என்று கொதிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

தொடரும் இந்தச் சர்ச்சைகள் மற்றும் சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் ஏற்படுத்தவிருக்கும் மாற்றங்கள் குறித்துப் பேசுகிற அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளருமான ப்ரியன், ``அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வோடு ஒன்றிணைத்து சசிகலா தலைமையில் தேர்தலைச் சந்தித்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நினைப்பில் பா.ஜ.க இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்தநிலையில், சசிகலா, விடுதலையாகி வெளியே வரும்போது தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு சலசலப்பு உருவாகும். இந்தச் சூழலில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். வெளியே வந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது, `சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பு 100 % இல்லை' என்று பேட்டி கொடுக்கிறார்.

ஆக, `பா.ஜ.க தலைமைக்கே சசிகலாவைப் பிடிக்கவில்லை... பாருங்கள்' என்று மறைமுகமாக உணர்த்துகிற நோக்கமாகத்தான் எடப்பாடி பழனிசாமி, டெல்லிக்கே வந்து இப்படியொரு பேட்டி கொடுக்கிறார். காரணம், தானே ஒரு தலைவராக உருவாகிவிட்டோம். நம் சாதனைகளைச் சொல்லியே தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றெல்லாம் பழனிசாமி நம்புகிறார். ஆனால், எந்த சசிகலா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டேன் என்று சொல்லி முதல்வர் பதவியைத் துறந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது, அதே சசிகலாவை கட்சியில் இணைத்துக்கொள்ளும் முடிவில் இருந்துவருகிறார்.

இப்படி சசிகலாவை முன்வைத்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில்தான் திடீரென 'சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு' என்று சொல்லி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கடந்த நான்கு வருடங்களாக நல்ல உடல்நிலையில் இருந்துவந்தவருக்கு, விடுதலையாக வேண்டிய நேரத்தில், திடீரென உடல்நிலை மோசமானது எப்படி... சிறையில் பாதுகாப்பு விஷயங்கள் அவ்வளவு பலவீனமாகவா இருக்கின்றன... அப்படியென்றால், இதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் துரோகங்கள் இருக்கின்றனவா என்றெல்லாம் சசிகலாவின் ஆதரவாளர்கள் கொதிக்கின்றனர்.

ப்ரியன்

சிறைக்கூடத்தின் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அவர்கள் எழுப்புகிற கேள்விகள் நியாயமாக இருந்தாலும், அரசியல் நகர்வுகளுக்கும், சசிகலாவின் உடல்நிலை பாதிப்புக்கும் நேரடிச் சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனவே, விரைவில் அவர் உடல்நலம் சரியாகி தமிழக அரசியலில் ரீ என்ட்ரி கொடுப்பார் என்று நம்பலாம்.

இயல்பாகவே, சசிகலா வயதானவர், உடல்நலப் பிரச்னைகளுக்காக ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவருபவர் என்ற சூழலில், அவருக்கு கொரோனா தொற்று எளிதில் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. காய்ச்சல், சளி என கடந்த சில நாள்களாகவே கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருந்தபோதும் சிறை நிர்வாகம் இது குறித்து அலட்சியமாக இருந்தது எப்படி... பாதுகாப்பு மிகுந்த சிறைக்குள் கொரோனா தொற்று யார் மூலம் பரவியது... சசிகலாவோடு சேர்த்து வேறு யார் யாருக்கெல்லாம் தொற்று இருக்கிறது என்பதெல்லாம் முக்கியமான கேள்விகள்.

சசிகலா இன்றி அ.தி.மு.க தேர்தலைச் சந்தித்தால், என்னுடைய கணக்குப்படி சுமார் 60 இடங்களில் அ.தி.மு.க நிச்சயம் தோற்கும். ஏனெனில், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.ம.மு.க பல தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலில், அவர்களுக்கான குக்கர் சின்னமும் கிடைத்திருக்கிறது. ஆக, சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் இடம் இல்லை என்ற நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களின் வாக்குகள் மற்றும் சமுதாய வாக்குகள் மற்றும் அ.ம.மு.க கட்சித் தொண்டர்களின் வாக்குகளும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க-வுக்கு பெரியதொரு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.

இதை உணர்ந்திருப்பதால்தான், சசிகலாவை அ.தி.மு.க-வில் இணைப்பதற்கு பா.ஜ.க ஆர்வம் காட்டிவருகிறது. ஆனால், சசிகலா விவகாரத்தில் எடப்பாடி தன் பிடிவாதத்தைத் தொடர்ந்தால், அவரைத் தனித்து விட்டுவிட்டு ஓ.பி.எஸ் தலைமையில் அ.தி.மு.க-வைப் பிரித்து பா.ம.க., அ.ம.மு.க., தே.மு.தி.க என தனியே ஓர் அணி அமைத்து தேர்தலைச் சந்திக்கவும் பா.ஜ.க தயங்காது!'' என்கிறார் அழுத்தமாக.

ஆதரவாளர்களை நோக்கிக் கையசைக்கும் சசிகலா

சசிகலாவின் தற்போதைய உடல்நிலை பாதிப்பு மற்றும் அதற்கான காரணங்கள் குறித்துப் பேசுகிற அவரது உறவினர்கள், ``பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவோடு சேர்த்து இன்னும் பலருக்குக் கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்திருக்கின்றன. சசிகலாவுக்குக் காய்ச்சலோடு தலைச்சுற்றல் பிரச்னையும் இருந்திருக்கிறது. இதற்காக சிறைக்குள் இருக்கும் மருத்துவமனையிலேயே சிகிச்சையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்னையும் சேர்ந்துகொள்ள, அதன் பிறகுதான் பெங்களூரு சிவாஜி சாலையிலுள்ள பவ்ரிங் மருத்துவமனையில் சசிகலாவை அனுமதித்திருக்கிறார்கள்.

Also Read: நீலகிரி: காட்டு யானைக்கு தீ வைத்து சித்ரவதை! - கொடூரர்களைக் கண்டறிய களமிறங்கிய வனத்துறை

அங்கேயும் தொற்று பாதிப்பைக் கண்டறியும் சி.டி.ஸ்கேன் பழுதாகியிருந்ததால், பாதிப்பைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு குறைபாடு ஆகியவை இருக்கின்றன. எனவே, `சசிகலாவைச் சந்தித்துப் பேச எங்கள் மருத்துவர்களை அனுமதிக்க வேண்டும்; உடனடியாக அவரைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்' என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதன் பிறகுதான் எங்கள் தரப்பிலிருந்து இரண்டு மருத்துவர்களை அவரை சந்தித்துப் பேச அனுமதித்தனர். இப்போது விக்டோரியா மருத்துவமனை சிகிச்சையில், சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டு நுரையீரல் தொற்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்'' என்கின்றனர்.

சசிகலா - மருத்துவ அறிக்கை

சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு அவரது விடுதலைத் தேதியில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துப் பேசும் சட்டத்துறை வல்லுநர்கள், ``27-ம் தேதிக்குப் பிறகும் சசிகலா மருத்துவச் சிகிச்சையில் இருக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அமைந்திருக்கும் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரிடம் சசிகலாவை சிறை நிர்வாகம் ஒப்படைத்துவிடும். பின்னர் இது குறித்த விவரங்கள் தமிழ்நாடு காவல்துறைக்கும் தெரிவிக்கப்படும். அதாவது, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களைக் காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து, கையெழுத்து பெற்றுக்கொள்வதோடு கூடவே, சசிகலா உறவுகளிடமும் சாட்சிக் கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள்'' என்கின்றனர்.

Also Read: திருவள்ளூர்: `நான் காரில்தான் செல்வேன், கன்ட்ரோலாகத்தான் இருக்கேன்' - போதையில் அடம்பிடித்த இளம்பெண்

இதற்கிடையே, ``விடுதலையாகக்கூடிய காலகட்டத்திலுள்ள சிறைக் கைதி ஒருவர் திடீரென மிக மோசமான அளவில் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளானால், உடனடியாக அவரை விடுதலை செய்துவிட சிறை நிர்வாகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் அதிகாரம் இருக்கிறது.

சசிகலா

அதேசமயம் உயிருக்கு ஆபத்தான நோய் என்றால் மட்டுமே இந்த விதி பொருந்தும். தற்போது சசிகலா கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். தொற்றுநோய் என்றால், அதன் பாதிப்பு முழுவதுமாக நீங்கும்வரை சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில்தான் சசிகலா இருக்க வேண்டி வரும்'' என்ற மாறுபட்ட கருத்தையும் சில வழக்கறிஞர்கள் முன்வைக்கின்றனர்.

இந்தநிலையில், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை இன்று (24-01-2021) காலை 9 மணிக்கு வெளியிட்டிருக்கும் மருத்துவ அறிக்கையில், சசிகலா உடல்நலம் தேறிவருவதாகத் தெரிவித்துள்ளது. உணவை அவரே எடுத்துக் கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/what-happen-if-sasikala-continued-to-be-treatment-after-jan-27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக