மூன்று மாதத்தில் முடிவுக்கு வரும் ஆட்சி, நான்கு ஆண்டு தண்டனை காலம் முடிந்து வெளியேவரும் சசிகலா என பரபரப்பான சூழலிலுக்கு நடுவே நாளை அ.தி.மு.க வின் பொதுக்குழு கூட உள்ளது. தனது இருப்பைத் தக்கவைக்கவும், எதிர்வரும் தேர்தலில் தனது ஆளுமையைக் காட்டவும் இந்த பொதுக்குழுவை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. இந்த பொதுக்குழுவுக்குப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 2,500 பேர், சிறப்பு அழைப்பாளர்களாக சுமார் 1500 பேர் என கிட்டதட்ட 4,000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் இருப்பதால் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். பொதுக்குழுவுக்கான அனுமதி கடிதம் உள்ளவர்களுக்கு மட்டுமே மண்டபத்துக்குள் அனுமதி வழங்கப்படும். பொதுக்குழு ஏற்பாடுகளைச் சென்னை மாவட்ட அ.தி.மு.க வினர் தீவிரமாக மேற்கொண்டுவருகிறார்கள்.
அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்க உள்ள இந்தப் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் பேச இருக்கிறார்கள். அதோடு துணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் பேச இருக்கிறார்கள். பொதுக்குழுவில் யார் பேச வேண்டும் என்பதை எடப்பாடி தரப்பும், பன்னீர் தரப்பும் பட்டியலிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. பன்னீர் செல்வம் தேனியில் இருப்பதால் இன்று இரவு சென்னை வந்த பிறகு தீர்மானங்களை இறுதி செய்ய உள்ளனர். ஏற்கனவே அ.தி.மு.க வில் பதினோர் பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது அதற்கு இந்த பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்பட உள்ளது. அதே போல் கூட்டணி விவகாரங்கள் முதல், தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு வரை வழிகாட்டு குழு மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கான அதிகாரங்கள் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்பட உள்ளது. இதைத் தாண்டி மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.
இந்தநிலையில் இந்த பொதுக்குழுவில் சில விவகாரங்களுக்குக் கடைசி நேரத்தில் உயிர்கொடுக்க எடப்பாடி திட்டமிடுகிறார். அது அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் அ.தி.மு.க-வுக்கு நெருக்கமானவர்கள். “இந்த பொதுக்குழு கூடிய சில நாட்களில் சசிகலாவின் விடுதலையும் இருக்கிறது. அவர் எப்போது விடுதலையானாலும் அது அ.தி.மு.கவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதை எடப்பாடி நன்றாக உணர்ந்துள்ளார்.பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடர்கிறது என்று அ.தி.மு.க தலைமை அறிவித்தும்,அதை இதுவரை பா.ஜ.க அங்கீகரித்தாக தெரியவில்லை. அதோடு எடப்பாடியை முதல்வர் வேட்பாளராகவும் ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடிக்கிறார்கள். இதற்குப் பின்னால் பா.ஜ.க வின் அரசியல் ஆட்டம் இருக்கலாம் என்று எடப்பாடி நினைக்கிறார்.
குறிப்பாகத் தினகரன் அணியினர் சமீப நாட்களாகச் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். அதோடு தினகரன் தரப்புக்கும் பா.ஜ.கவுக்கும் இருந்த இறுக்கம் குறைந்துள்ளது. இதனால் பா.ஜ.கவுடன் கைகோர்க்கவும் தினகரன் தரப்பு தயாராக இருக்கலாம் என்கிறார்கள். இந்நிலையில் சசிகலாவின் விடுதலையும் நடப்பது எடப்பாடியை யோசிக்கவைத்துள்ளது. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை, தினகரன் உள்ளிட்ட பலரையும் அ.தி.மு.கவிலிருந்து நீக்கிய அ.தி.மு.க தலைமை இதுவரை சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து முறைப்படி நீக்கவில்லை. அவரது உறுப்பினர் கார்டு புதுப்பிக்கவிடாமல் இருப்பதால், அவர் கட்சியில் இல்லை என்று எடப்பாடி தரப்பு சப்பைக் கட்டுக் கட்டினாலும் ,கட்சியின் தலைமை அதிகாரப்பூர்வமாக நீக்காத வரை அ.தி.மு.கவில் சசிகலாவின் பங்கு இருந்துகொண்டே இருக்கும்.
Also Read: `கணக்கு தீர்க்கும் சிவாஜி குடும்பம்... தவிக்கும் சசிகலா தரப்பு’-முடிவுக்கு வரும் 4 ஆண்டு போராட்டம்!
அதே நேரம் சசிகலா விடுதலையாகும் அன்று பிரமாண்ட முறையில் வரவேற்பு அளிக்கத் தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளது.சுமார் 300-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சசிகலாவை வரவேற்கத் திட்டமிட்டுள்ளார்கள். வரவேற்பு குறித்து தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்திய போது “சின்னம்மாவுக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அழைத்து வந்து நேராக அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்குள் அவரை அழைத்துச் செல்லலாம். யார் நம்மைத் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசியிருக்கிறார்கள். இந்தத் தகவல் எடப்பாடி தரப்புக்குச் சென்றதும் உஷாராகிவிட்டார். கட்சி அலுவலகத்துக்குள் நுழைவதுகூட சாத்தியமில்லாத விசயம், ஆனால் எதிர்காலத்தில் கட்சிக்கு உரிமை கொண்டாட சசிகலா தயங்கமாட்டார். அது தனது முதல்வர் வேட்பாளர் கனவுக்கே சிக்கலாக வந்துவிடும் என நினைக்கிறார். இதனால் இந்த பொதுக்குழுவில் சசிகலாவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்தைக் கொண்டுவர எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது” என்கிறார்கள்.
ஆனால், இந்த தீர்மானத்துக்குப் பன்னீர் ஒப்புக்கொள்வது கடினம் என்கிறார்கள். ஏற்கனவே எடப்பாடியின் ஏதேச்சதிகாரம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தினகரன் தரப்பு அவ்வப்போது பன்னீருடன் பேசிவருகிறார்கள். சசிகலா வந்த பிறகு காட்சிகள் எப்படி மாறும் என்பது தெரியாத நிலையில், எடப்பாடியுடன் கைகோர்த்து எதற்காக சசிகலாவைப் பகைத்துக்கொள்ள வேண்டும் என்று பன்னீர் நினைக்கிறார். எனவே, இந்த தீர்மானத்துக்குப் பன்னீர் ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை. இன்று இரவு பன்னீர் சென்னை திரும்பியதும், இது குறித்து எடப்பாடி தரப்பிலிருந்து பேச இருக்கிறார்கள். பன்னீர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த தீர்மானத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, பொதுக்குழுவில் தனது ஆதரவாளர்கள் மூலம் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளார்” என்கிறார்கள் இருதரப்புக்கும் பொதுவானவர்கள்.
பொதுக்குழுவில் வெடிக்கப்போகிறது புதிய சர்ச்சை என்பது மட்டும் புரிகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/edappadi-may-go-against-sasikala-in-admk-general-body-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக