முதல் நாளில் சந்தித்த பின்னடைவினைப் பொருட்படுத்தாது வெகுண்டெழுந்து, இந்தியாவைத் திரும்பவும் போட்டிக்குள் கொண்டு வந்திருக்கின்றனர், ஜடேஜாவும் பும்ராவும். ரோஹித்தும், ஷுபம் கில்லும் வலுவான அடித்தளத்தை அமைக்க, இந்தியாவின் நாளாக மாறியிருக்கிறது சிட்னி டெஸ்ட்டின் இரண்டாம் நாள்.
கையில் கிடைத்த ஆட்டத்தின் பிடியை இறுகப் பற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு ஆஸ்திரேலியாவும், விரைவான விக்கெட்டுகளால் அதைத் தங்கள் பக்கம் கொண்டு வரும் நோக்கத்துடன் இந்தியாவும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கி இருந்தனர்.
நேற்று, மழையின் காரணமாக ஆட முடியாமல் போன 35 ஓவர்களை ஈடு செய்யும் விதமாக, இன்றைய போட்டி அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கப்பட்டது. பேட்டிங் செய்ய இறங்கினர் லாபுசேனும், ஸ்மித்தும். கடந்த இரண்டு போட்டிகளாக, எந்த பூதம் வெளியே வரக் கூடாது என இந்தியா பயந்து கொண்டிருந்ததோ, அது வெளியே வந்து கர்ஜிக்கத் தொடங்கியது. விட்டுக் கொடுக்காத அதே உறுதியை, ஸ்மித்தின் இன்றைய ஆட்டத்திலும் தொடக்கம் முதலே பார்க்க முடிந்தது.
தங்களது ஃபீல்டிங் வியூகங்களில் சில மாறுதல்களைக் கொண்டு வந்திருந்தது இந்தியா. ஒரே ஒரு ஸ்லிப்புடன், ஸ்கொயர் லெக், பேக்வேர்ட் ஸ்கொயர் லெக், ஷார்ட் மிட் விக்கெட் மற்றும் மிட் ஆன் ஃபீல்டிங் பொசிஷன்களில் ஃபீல்டர்களை நிறுத்தி நாளைத் தொடங்கினர். எனினும் கடந்த போட்டியில் கண்ட அட்டாக்கிங் பெளலிங் இந்தியாவின் தரப்பில் ஒட்டு மொத்தமாய்க் காணாமல் போய் இருந்தது.
பும்ராவாலும், சிராஜாலும் இந்தியாவுக்குத் தேவையான திருப்புமுனையை தொடக்கத்திலேயே ஏற்படுத்த முடியாமல் போக, எட்டாவது ஓவரிலேயே ஜடேஜாவை உள்ளே கொண்டு வந்தார் ரஹானே. 11 ஓவர்கள் முடிவில் மழை குறுக்கிட, ஆட்டம் சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டு பின் தொடர்ந்தது. அதன்பின் ஜடேஜா - அஷ்வின் சுழல் கூட்டணியை உபயோகிக்கத் தொடங்கி பொறி வைத்தார் ரஹானே. அதற்குக் கைமேல் பலனாய், ஜடேஜா வீசிய பந்தில் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் லாபுசேன். சதத்தை 9 ரன்களில் தவற விட்டிருந்த லாபுசேனின் விளையாடும் திறன், கடந்த போட்டிகளை விட மேம்பட்டிருந்தது கண்கூடாய்த் தெரிந்தது. 6/1, 106/2, 206/3 என விக்கெட்டுகளுக்கிடையே 100 ரன்கள் பார்டனர்ஷிப் வந்து கொண்டே இருந்தது, சற்று கிலியை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியா மிகப்பெரிய ஸ்கோரைப்பதிவு செய்யப்போகிறது என ரசிகர்கள் பதற லாபுசேனைத் தொடர்ந்து உள்ளே வந்த மேத்யூ வேட் அடித்து ஆடும் நோக்கத்தில் இருந்தார். அவர் அடித்த பந்து நான்கு முறை விஹாரியைப் பதம் பார்த்து காயமேற்படுத்த முயன்றது. தொடக்கம் முதலே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது போலவே ஆடிக் கொண்டிருந்த வேடை, ஜடேஜா வெளியேற்றி, விஹாரியை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்தார். ஆஸ்திரேலியா நான்காவது விக்கெட்டை இழக்க, கேமரூன் கிரீன் உள்ளே வந்தார். இந்தியாவிற்குத் தேவையான பிரேக்கை இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் வாயிலாக ஜடேஜா கொடுத்தார்.
அடுத்த சில ஓவர்களில், புதுப்பந்து எடுக்கப்பட, பும்ரா - சிராஜ் கூட்டணி தங்களது பெளலிங் அட்டாக்கைத் திரும்பத் தொடங்கியது. போட்டியின் 85-வது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. அந்த ஓவரில் பேட்ஸ்மேனை, எப்படி வலையில் விழவைத்து அவுட் ஆக்கவேண்டும் என்று பாடம் எடுத்தார். தொடர்ந்து பவுன்சர்களையும், அவுட் ஸ்விங்கையும் வீசிக் கொண்டிருந்தவர் அந்த ஓவரின் 5வது பாலை இன்ஸ்விங் மூலமாக மிடில் ஸ்டம்புக்கு வீச, அதைச் சற்றும் எதிர்பாராத கிரீன் எல்பிடபிள்யூ ஆகி, டக் அவுட்டானார். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல் செஷனை மொத்தமாய்த் தன் கட்டுக்குள் கொண்டு வந்தது இந்தியா.
உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடர்ந்தது. ஸ்மித்துடன் கை கோத்தார் பெய்ன். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், களத்தில் இன்னும் ஸ்மித் நிற்பது இந்தியாவுக்கு ரெட் சிக்னல் போடுவதைப் போலவே இருந்தது. புதுப் பந்தை பும்ராவை விட யாரால் திறம்பட கையாண்டு விட முடியும். எனவே அவரே தொடர்ந்தார். ஸ்மித் - பெயின் கூட்டணி, நிலைத்து விடும் பட்சத்தில், இந்தியாவின் நிலைமை பரிதாபகரமானதாய் மாறி விடும் என பயம் கவ்வும் நேரத்தில், அந்தக் கூட்டணியைத் தகர்க்கும் வேலையையும் பும்ராவே செய்தார். துல்லியமான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசி, பெய்னை கிளீன் பௌல்ட் ஆக்கினார்.
மறுபக்கமோ, ஸ்மித் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் நிற்க, இப்போது போட்டி, இந்தியா வெர்ஸஸ் ஸ்மித் என மாறியது. தந்திரோபாயத்தை மாற்றி இந்தியா மறுமுனையில் உள்ள பேட்ஸ்மேனான கம்மின்ஸைத் தாக்கத் தொடங்கியது. விளைவு, ஜடேஜாவின் சுழலில், சிதறியது ஸ்டம்ப். ரன் எதுவும் எடுக்காமல் கம்மின்ஸ் வெளியேறினார்.
அடுத்ததாக உள்ளே வந்தது ஸ்டார்க். இந்தத் தருணத்தில்தான் ஸ்மித் தன்னுடைய 27-வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். அதன்பின் அவருடைய சதத்துக்கான கொண்டாட்டமும் ஆக்ரோஷம் நிறைந்ததாகவே இருந்தது! கேலிகளுக்கும் விமர்சனங்களுக்குமான பதிலாக அடித்திருக்கும் சதமென்பதால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியர் ஒருவர் அடித்த முதல் சதம் இது என்பதும் ஸ்மித்துக்கான பெருமையைப் பறைசாற்றுகிறது!
எஞ்சி இருக்கும் டெயில் எண்டர்களுக்கு இந்தியாவின் திட்டம் என்ன, ஏற்கெனவே ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் கிட்டத்தட்ட 300ஐ எட்டி உள்ள நிலையில், டெய்ல் எண்டர்களைக் காலி செய்யுமா, இல்லை வழக்கம் போல, கடைசி விக்கெட்டுகளை எடுக்கத் திணறி, 400+ ஸ்கோரை ஆஸ்திரேலியாவை எட்ட விடுமா என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன. இந்தியாவோ டெயில் எண்டர்களை வீழ்த்துவதில் தங்களுக்குரிய பாரம்பர்யம் மாறாமல் தாமதப்படுத்த, ஸ்டார்க், ஸ்மித்துக்கு ஆதரவாக ஒரு கேமியோ இன்னிங்ஸ் ஆடி 24 ரன்களைக் குவிக்க, 300ஐ தாண்டியது ஸ்கோர்.
ஆனால், நல்லவேளையாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஸ்டார்க்கின் விக்கெட்டை, புல் ஷாட்டாய் மாற்றும்படி ஆசை காட்டி, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தின் மூலமாக சைனி வீழ்த்தினார்.
அடுத்த ஓவரிலேயே லயானையும் தன் சுழலில் சிக்க வைத்து எல்பிடபிள்யூ ஆக்கி அனுப்பி வைத்தார் ஜடேஜா! கடைசியாக உள்ளே வந்தார், ஹேசில்வுட். அணியின் ஸ்கோரோ 315ஐ எட்டியிருந்தது. இப்போது ஹேசில்வுட்டிடம் ஸ்ட்ரைக்கைத் தராமல் அடித்து ஆடத் தொடங்கினார் ஸ்மித். ரன்கள் மளமளவென உயரத் தொடங்க, "எப்படித்தான் இவரை அனுப்புவது?" என விழிகள் விரிய ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரம், வழக்கம் போல, ஆபத்பாந்தவனாய் மீட்புக்கு வந்தார் ஜடேஜா. பும்ரா வீசிய பந்தை ஸ்மித் ஸ்கொயர் லெக்கில் அனுப்பி ரன் எடுக்க ஓடினார். ஸ்ட்ரைக்கைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, இரண்டாவது ரன் ஓட முற்பட, பந்து தஞ்சம் புகுந்ததோ, டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த இந்தியா வார்த்தெடுத்த தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவின் கையில்! விட்டு விடுவாரா அவர்?! குறி பார்த்து பந்தை ஸ்டம்ப்பை நோக்கி எறிய, தோட்டாவாய் அது ஸ்டம்ப்பை சிதறடிக்க, 131 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. உண்மையில் இந்த விக்கெட்டும், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதம் நிகழ்த்திய ஜடேஜாவின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியதுதான்!
ஒருகட்டத்தில் 206 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என இருக்க, பேட்டிங் பேரடைஸான சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா எளிதாக 400 ரன்களை கடந்துவிடுவார்கள் என எண்ணியபோது அதை மாற்றி மொத்தமாய் ஆறு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்கச் செய்து 338 ரன்களுக்குள் சுருட்டியதே இந்திய பெளலிங்கின் சாதனைதான்.
நேற்றைய நாளை மொத்தமாய் ஆஸ்திரேலியா இந்தியாவிடமிருந்து அபகரித்திருந்தாலும், தளராமல் இந்தியாவும் இன்று எட்டு விக்கெட்டுகளை இரண்டு செஷன்களுக்குள் சுருட்டி இருந்தது. எனினும் 338 என்பது மோசமான ஸ்கோர் இல்லை என்பதால், இந்திய பேட்ஸ்மேன்களின் கையில்தான் இனி எல்லாமே உள்ளது என்பது தெளிவானது.
அதனைத் தொடர்ந்து இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது. ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் கால் பதிக்கும் ரோஹித் ஓப்பனராக கில்லுடன் களமிறங்கினார். அதுவும் வெளிநாடுகளில் ஓப்பனராக ரோஹித் களம் காண்பது இதுவே முதன் முறை.
கொஞ்சம் கூடப் பதற்றமின்றி, வலிமையான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினர் இந்த இந்திய ஓப்பனர்கள். கம்மின்ஸ், ஹேசில்வுட் மற்றும் ஸ்டார்க் மாறி மாறி மிரட்டியும் அசரவில்லை. தேநீர் இடைவேளையின்போது இந்தியா விக்கெட் இழப்பின்றி, 26 ரன்களை எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப்பிறகு, இந்தியாவின் பாணியில் ஸ்பின்னரான லயானைக் கொண்டு வந்தார் பெய்ன். எனினும் இம்மி கூட அசைக்க முடியவில்லை இந்த இந்தியர்களை! அதுவும் ரோஹித் ஷர்மா லயான் ஒவரில் ஒரு சிக்ஸரும், பவுண்டரியும் விளாச இந்திய அணி ஒப்பனர்கள் நல்ல அடித்தளத்தை அமைக்கப் போகிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. சிறப்பாக விளையாடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைத் தொட்டனர். 2010-ம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய கண்டத்துக்கு வெளியே, இந்திய இணை ஒன்று, 20 ஓவர்களுக்கு மேல் இணைந்து விளையாடி இருப்பது இதுவே முதல் முறை. இவர்கள் இருந்திருந்தால் அடிலெய்டு அவமானத்தைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்ற வைக்கும் அளவுக்கு அட்டகாசமாக ஆடியது இந்தக் கூட்டணி.
இன்றைய நாள் முழுவதும் இவர்கள் நின்றால், இந்தியாவால் நல்ல ஸ்கோரை எட்ட முடியும் என ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாட, அதை நிராசையாக்க, ஹிட்மேன் ரோஹித்தை காலி செய்தார் ஹேசில்வுட். அனுபவம் வாய்ந்த புஜாரா உள்ளே வந்தார்.
மறுபக்கம் கில் அதே உத்வேகத்துடன்தான் ஆடிக் கொண்டிருந்தார், புகோவ்ஸ்கியின் இந்திய வெர்ஷனாக! கம்மின்ஸ், தான் வீசிய முதல் எட்டு ஓவர்களின் அத்தனை பந்துகளையும் கில்லுக்குதான் வீசி இருந்தார். எல்லாவற்றையும் நேர்த்தியாக நேர் கொண்ட கில், லயானின் பந்தில் அடித்த ஒரு ரன் மூலமாக, டெஸ்ட் அரங்கில், தன்னுடைய முதல் அரைசதத்தைத் தொட்டார். அங்கிருந்து பெரிய இன்னிங்ஸாக இதை மாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு சில நிமிடங்களே நீடித்தது. கம்மின்ஸின் பந்திலேயே கிரினிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில். இந்தியாவின் ஸ்கோர், 85/2 ஆனது.
அடுத்ததாய் கேப்டன் ரஹானே உள்ளே வந்தார். எஞ்சி இருக்கும் ஓவர்களை, விக்கெட் இழப்பின்றி சமாளித்து விட்டாலே போதும், நாளைய ஆட்டத்தை புத்துணர்வோடு தொடங்கலாம் என்ற மைண்ட் செட்டோடே ஆடத் தொடங்கிய புஜாரா- ரஹானே கூட்டணி மேலும் எந்தவித விக்கெட்டும் விழாமல் பார்த்துக்கொண்டு, 96 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலைமையில் இன்றைய ஆட்டத்தை முடித்துள்ளது.
ஓப்பனர்கள் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை, பின்வரும் இந்திய வீரர்கள் பெரிய ஸ்கோராக மாற்றும் பட்சத்தில் போட்டி ஆஸ்திரேலியாவின் கைகளில் இருந்து இந்தியாவின் கைக்கு நாளைக்கு மாறும்.
இன்னும் 242 ரன்கள் பின்தங்கி இருக்கும் நிலையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா, இல்லை, ஆஸ்திரேலியா ஷாக் கொடுக்குமா என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.
source https://sports.vikatan.com/cricket/steve-smith-scored-a-century-but-the-day-belongs-to-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக