கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் குமரேசன், இவரின் மனைவி கனிமொழி. இந்தத் தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை பவ்யா. இந்த நிலையில் கனிமொழி வைட்டமின் மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். வைட்டமின் மாத்திரைகளை குழந்தை பவ்யாவின் கைக்கு எட்டும் இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அதை எடுத்த பவ்யா, அதில் சில மாத்திரைகளை சாப்பிட்டிருக்கிறார். அதன்பிறகு அவருக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது.
உடனடியாக பவ்யாவை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குமரேசன், கனிமொழி ஆகியோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை அளவுக்கு அதிகமாக மாத்திரகளைச் சாப்பிட்டதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். ஆனால் குழந்தையின் உடல் நலம் மோசமானதால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கும் அதன்பிறகு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனைக்கும் பவ்யா கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பவ்யாவுக்கு ரத்தக்கசிவு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னை டாக்டர்கள், பவ்யாவுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு பவ்யாவின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது பவ்யா நலமாக இருப்பதாக சென்னை டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை பவ்யாவைக் காப்பாற்றிய சென்னை எழும்பூர் குழந்தைகள் நல டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறது.
Also Read: `இரண்டு உயிர்கள்... திக் திக் நிமிடங்கள்... தாயின் ஆனந்தக் கண்ணீர்!' - டாக்டரான ஆச்சர்ய குழந்தை
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ``இரும்பு சத்து மாத்திரைகளை குழந்தை பவ்யா, அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 4 மருத்துவமனைகளில் பவ்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. சென்னை அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் பவ்யாவை கொண்டு வந்தார்கள். சரியான எதிர்ப்பு மருந்தை பவ்யாவுக்கு கொடுத்து அவரைக் காப்பாற்றியிருக்கிறோம்" என்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/chennai-doctor-saves-kids-from-danger-situation
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக