Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

ஆரியின் துல்லிய கணிப்பு; ஷிவானியின் ஷார்ப் அப்சர்வேஷன்... ஆனா டாஸ்க் ஏன் இப்படி? பிக்பாஸ் – நாள் 95

பிரைம் டைமில் இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் நேர மாற்றம் ஏற்படுகிறது என்றால் அது சுவாரஸ்யத்தை இழந்து TRP தடுமாற்றத்தை அடைந்திருக்கிறது என்று பொருள். பிக்பாஸூம் அந்த விபத்தை சந்தித்திருக்கிறதா என்று தெரியவில்லை. நேரம் தள்ளிப் போடப்பட்டதால் இப்போதெல்லாம் தூக்கக் கலக்கத்தோடுதான் பிக்பாஸைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

எனில் நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நிகழ்ச்சியை சுவாரஸ்யத்தைக் கூட்டுவதற்காக அதிகம் மெனக்கெட்டிருக்க வேண்டும். அதிலும் இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் நெருப்பு பறக்க வேண்டும்... அல்லவா?

ஆனால் இவர்கள் இன்று செய்த விஷயம் பொங்கலில் விளக்கெண்ணைய் ஊற்றி சாப்பிட்ட மாதிரி நம்மை டயர்ட் ஆக்கி விட்டது. ‘நீதி வாக்கியம்’ என்பதை ஒவ்வொரு போட்டியாளருக்கும் பொருத்தும் டாஸ்க்கில்... பேசினார்கள்... பேசினார்கள்... விடிய விடியப் பேசினார்கள். நல்ல வேளை 1330 திருக்குறள்களையும் சொல்லி அதற்கு ஏற்ற நபரைச் சொல்ல வேண்டும் என்று சொல்லாமல் போனார்கள். அதற்குள் 106 நாளே முடிந்திருக்கும்.

அனிதாக்கா போனவுடனே TRP-ம் கூடவே போயிடுச்சு... (ஹ...ஹ...ஹ...ஹ… அனிதாக்காவின் சிரிப்புச் சத்தம் கேட்கிறதா?!).

நாள் 95-ல் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

பிக்பாஸ் – நாள் 95

ரஹ்மானின் பிறந்தநாள் என்பதாலோ என்னமோ அவர் இசையில் யுவன் பாடிய பாடலைப் போட்டார்கள். (ஆடாத கால்களும் ஆடுமய்யா) இந்தப் பாடலின் சூழல்படி, கடத்தப்பட்ட தனுஷ் தனது துயரத்தோடு பாடுவதுதான் சீன். இப்போது நம்மையும் அந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டார்கள். அழுது கொண்டேதான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

டாஸ்க் 7 துவங்கியது. இந்த டாஸ்க்கை யோசித்தவர் சமீபத்தி்ல் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து தனது வேண்டுதலை முடித்திருக்கிறார் போலிருக்கிறது. எனவே அதையும் இதில் நுழைத்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டார். அதன்படி இரண்டு போட்டியாளர்கள் தரையில் உருண்டு உருண்டு பந்துகளை இரண்டு புறமும் மாற்றி வைக்க வேண்டும். முதலில் வைப்பவர் வெற்றியாளர்.

கோழி டாஸ்க்கில் வென்ற பாலாஜிக்கு ‘சிறப்பு ஷக்தி’ தரப்படும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். அது இறுதிக்கட்ட ஆட்டத்தைத் திசை திருப்பும் சக்தியாக இருக்குமோ என்று பயங்கரமாக எதையோ எதிர்பார்த்தால் ஒன்றுமில்லை. முந்திரிப்பருப்பிற்குப் பதிலாக உடைத்த கடலையைத் தந்து விட்டார்கள்.

இந்த டாஸ்க்கில் யாருடன் போட்டியிடுவது என்பதை பாலாஜி மட்டும் அவராக தீர்மானித்துக் கொள்ளலாமாம். ஆனால் பாலாஜி இதிலும் சொதப்பினார் என்பது வேறு விஷயம். மற்றவர்கள் அதிர்ஷ்ட சீட்டு வழியாக போட்டியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முதல் ஜோடி ஷிவானி மற்றும் சோம். இதில் சோம் ஜெயித்தார். என்றாலும் கடைசி வரை நெருக்கடி தந்த ஷிவானிக்குப் பாராட்டு. அடுத்த ஜோடி ரம்யா – ஆரி (ஆரியின் மனதிற்குள் ‘லா...லா…லா’ சத்தம் கேட்டிருக்க வேண்டும்). இதில் பந்துகளை வைக்கும் போது ரம்யா சொதப்பி விட்டார். எனவே அவர் தோற்றுப் போக வேண்டியிருந்தது. என்றாலும் ஆரியுடன் மோதி ஜெயிப்பதென்பது சிரமம்தான். தலைச்சுற்றலோடு கவிழ்ந்திருந்த ரம்யாவை நிமிர்த்தி ‘ஆர் யூ ஓகே பேபி?' என்று விஜய்சேதுபதி மாதிரி கேட்டார்கள்.

பிக்பாஸ் – நாள் 95

ரியோவிற்கும் கேபிக்கும் நடந்த போட்டியில் கேபி வென்றார். கேபியின் அசைவுகள் துரிதமாகவும் லாகவமாகவும் இருந்தன. முதல் சுற்றின் இறுதியில் கடைசியாக வந்த ரம்யாவிற்கு ஏழாவது இடம் கிடைத்தது. எனவே ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்கான போட்டி நடந்தது. இதில் ஷிவானியும் ரியோவும் மோதி முறையே ஆறாவது மற்றும் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்கள்.

இப்போது பாலாஜிக்கான சிறப்பு ஷக்தியை உபயோகிக்கும் தருணம் கிடைத்தது. அவர் கேபியைத் தேர்ந்தெடுத்தது ஒருவகையில் சொதப்பல். கேபி சிறப்பாக விளையாடுவதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். பெண் என்பதால் எளிதில் ஜெயித்து விடலாம் என்று நினைத்து விட்டார் போல. ஆனால் போட்டி போட்டு கேபி ஜெயித்து விட்டார். பாலாஜி ஒரு பந்தைத் தவற விட்டதும் முக்கிய காரணம்.

இந்த டாஸ்க்கின் இறுதிக்கட்டத்தில் முதல் இரண்டு இடங்களுக்கான போட்டியில் சோமுவும் கேபியும் மோதினார்கள். இருவருமே மிகச்சரியாக ஒரே நேரத்தில் கடைசி பந்தை வைத்ததால் ‘மூன்றாவது அம்பயர்’ பார்த்து சொல்லுமளவிற்கு ஆகியது நிலைமை. ‘மூன்றாவது அம்பயர்’ இன்றும் கண்ணாடி போட மறந்து விட்டாரோ என்னமோ... இரண்டு பேரும் ஒரே நேரத்தில்தான் வைத்ததாக அவர் தெரிவிக்க மீண்டும் அந்தப் போட்டி நடந்தது. ‘மறுபடியுமா?’ என்று மலைத்துப் போனார் கேபி. பாவம். இதில் சோம் முதல் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

வெற்றியை, மகிழ்ச்சியைக் கொண்டாடும் போதெல்லாம் ‘அன்பு’ அணி மட்டும ஒன்றாக இணைந்து கைகோத்து கொண்டாடுகிறது. தங்களின் வெற்றியை தலைவி அர்ச்சனாவிற்கு நெகிழ்ச்சியோடு சமர்ப்பணம் செய்கிறது. (ஆனால், குருப்பிஸம்-னா என்னது? என்று ரியோவிடம் கேட்டால் ‘அது தூத்துக்குடியிலோ, திருநெல்வேலியிலோ இருக்கிறது’ என்றுதான் இப்பவும் சொல்வார்).

இந்த டாஸ்க்கில் அனைவரும் சிறப்பாக விளையாடியதாக சொல்லி பாராட்டிய பிக்பாஸ், சோமுவும் கேபியும் மிகக் குறைவான நேரத்தில் (59 விநாடிகள்) விளையாடியதாக சொல்லி மகிழ்ச்சியடைந்தார்.

பிக்பாஸ் – நாள் 95
அடுத்ததாக ‘ஒற்றுமையின் தருணம்’ என்றொரு டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இன்னொரு போட்டியாளருடன் ‘ஒற்றுமையாகவும் நட்பாகவும்’ உணர்ந்த தருணங்களை தின்பண்டங்களை மொக்கிக் கொண்டே சொல்லலாமாம்.

“ஆயிரம்தான் சொல்லுங்க. ஆரிதான் என்னோட முதல் பிரண்ட். கொஞ்ச நாள் கேப் விட்டாலும் கூட உடனே வந்து நெருக்கமாயிடுவான்" என்று ஆரியைப் பற்றி சொல்லி நெகிழ்ந்தார் சோம். ‘தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி... பாசம் வெச்சேன் என் அன்பு தங்கச்சி’ என்று டி.ராஜேந்தர் கணக்காக கேபியைச் சொல்லி உருகினார் ரியோ. "எங்கள் மொக்கை க்ளப்பின் முக்கிய உறுப்பினர் ஷிவானி" என்று மகிழ்ச்சியடைந்தார் ரம்யா.

ஷிவானியைத்தான் பாலா சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஷிவானியின் அம்மாவின் நினைவு பாலாவிற்குள் வந்து மிரட்டியிருக்க வேண்டும். எனவே ரம்யாவைக் குறிப்பிட்டு எஸ்கேப் ஆனார். ‘என்னது? பாலா என் பிரண்டா?’ என்று முன்பு கேபியிடம் மறுத்த ரம்யா, இப்போதோ, சர்காஸ்டிக்காக ‘தாங்க்யூ பிரெண்ட்’ என்று பாலாஜியை நோக்கி புன்னகை பூத்தார். (பயபுள்ள... என்ன சாமர்த்தியமா ஷிவானியை அவாய்ட் பண்ணிட்டு என்னை கோத்து விடுது பார்த்தியா?!)

'முதல்ல மோதல்ல ஆரம்பிச்சு அப்புறம் காதல்ல முடிஞ்சது’ என்று ரம்யாவுடனான நட்பை விவரித்தார் ஷிவானி. கூடவே சுற்றும் மக்குப் பையன் திடீரென்று பாஸ் ஆகி விட்டால் நமக்கு எவ்வளவு திகைப்பாக இருக்குமோ... அவ்வளவு திகைப்பு ஷிவானிக்கும் ஏற்பட்டதாம். "திடீர்னு பார்த்தா... ரம்யா Strong Contestant-ன்னு சொல்றாங்க.. நான் அப்படியே ஷாக்காயிட்டேன்" என்று வியந்து போனார். (பாலாஜி செய்ததைப் போலவே இவரும் அவரை அவாய்ட் செய்தது புத்திசாலித்தனம். மறுபடியும் அதேதான். ‘எதுக்குடி இங்க வந்தே?’ என்ற அம்மாவின் குரல் ஒலித்திருக்கலாம்).

சோமு மற்றும் ரியோவின் பெயரைச் சொன்னால் அது கிளிஷேவாகி விடும் என்று கேபிக்குத் தெரிந்திருந்தது. எனவே ‘எனக்கு வெட்கம். வெட்கமா வருது’ மோடில் பாலாஜியைப் பற்றி தலை குனிந்து, கால் விரலில் வட்டம் வரைந்து எதையோ சொன்னார். அதென்னமோ... அம்மணி இன்று முழுக்க பாலாஜியுடனான ‘குட் ஃபீலிங்க்ஸை’ மீள்நினைவு செய்து கொண்டேயிருந்தார்.

பிக்பாஸ் – நாள் 95

ரியோவைச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார் ஆரி. சிறைப்பறவைகளாக இருந்தபோது இவர்கள் மிக நெருக்கமாகி விட்டார்களாம். (கவுண்டமணியும் செந்திலும் ஒரு நகைச்சுவைக் காட்சியில் ஜெயிலில் சந்திக்கும் காட்சிதான் நினைவிற்கு வருகிறது). இவர்கள் புழங்கிய காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது இன்ப அதிர்ச்சியில் மக்கள் மகிழ்ந்து போனார்கள்.

"நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க ஆரி. அடிக்கடி சிரிங்க" என்று ரம்யா சொல்லியவுடன் ‘எனக்கு வெட்கம் வெட்கமா வருது’ என்பது போல் தலைகுனிந்து புன்னகைத்தார் ஆரி. (கல்லுக்குள் ஈரம் இருக்கலாம். ஆனால் ரம்யாவின் மூலமாக இந்தப் பாறாங்கல்லுக்குள் இருந்து ஒரு பெரிய ஊற்றே இருப்பது தெரிகிறது).

TASK 8 என்கிற நெடும்தொடர் ஆரம்பித்தது. இதைக் கொடும் தொடர் என்றே சொல்லலாம். பேசிப் பேசியே சாகடித்தார்கள். இதைச் சுருக்கமாக அமைத்து விட்டு உடனே இன்னொன்றிற்கு நகர்ந்திருக்கலாம். விடிய விடியப் பேசியும் ‘இந்த டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. நாளை தொடரும்’ என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் பிக்பாஸ். (உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா பாஸ்?!).

இந்த டாஸ்க்கில் வந்த நீதி வாக்கியங்கள் ஒளவையாரின் ஆத்திச்சூடி, பாரதியாரின் புதிய ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டிருந்தன.

சில வாக்கியத் துண்டுகள் இருக்கும். ஒவ்வொரு போட்டியாளரும் அதை எடுத்து வாசித்து அது யாருக்குப் பொருந்தும் என்று சொல்ல வேண்டும். அதிகமான வாக்குகளைப் பெற்றவரின் புகைப்பட கட்அவுட்டில் அதை ஒட்ட வேண்டும்.

‘ரூபம் செம்மை செய்’ என்று வந்த முதல் வாக்கியத்தை மெஜாரிட்டியாக பாலா பெற்றார். ‘உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களை இன்னமும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி முதலில் வந்த ரியோ, ரம்யாவிற்கு இந்த வாக்கியத்தை அளித்தார். கேபியும் ரம்யாவையே தேர்ந்தெடுத்தார். பிறகு வந்த வாக்குகள் பாலாவிற்கு வந்தன. பாலாவும் ரம்யாவும் சமமாக இருந்ததால் மறுவாக்கெடுப்பு நடந்தது. இதில் பாலா தேர்ந்தெடுக்கப்பட்டார். (உள்ளுக்குள் பல ரூபங்கள் இருக்கு. பின்லேடன்ட்ட பேசறியா?!).

பிக்பாஸ் – நாள் 95

‘கூடிப் பிரியேல்’ என்பது அடுத்த திருவாசகம். ‘நல்லவரோடு நட்பு செய்த பின் அவரைப் பிரியாதே’ என்பது பொருள். இதில் பாலாவும் கேபியும் முதலில் நட்பாக இருந்து பின்னர் பிரிந்த கதை சூசகமாக அலசப்பட்டது. பாலா – ஷிவானி – கேபி என்று ஒரு நுட்பமான முக்கோண காதல் கதையும் உள்ளே இருந்ததைப் போல்பட்டது. பாலாவைப் பற்றி பேசும் போதெல்லாம் கேபியின் கண்கள் பிரகாசம் அடைந்தன. மூக்கில் வெட்கம் வந்தது.

‘கூடிப்பிரியேல்’ தலைப்பில் சோமுவைப் பற்றி பேசிய ஆரி, ‘மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் பிரிந்தன. அவை மீண்டும் சந்தித்த போது...‘ என்கிற ரேஞ்சிற்கு புன்னகையுடன் பேசி அமர்ந்தார். "அடேங்கப்பா. உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக... ஆரி ப்ரோ ஒருத்தரைப் பற்றி சிரிப்பாகவும் ஸ்வீட்டாகவும் பேசி அமர்ந்திருக்கிறார். இந்தத் தருணத்தைக் கொண்டாடுவோம்" என்று சொல்லி குதூகலித்தார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 95

உண்மைதான். ஆரி சிரித்துப் பேசினால் பார்க்க நன்றாகவே இருக்கிறது. ஆனால் புதுப்பேட்டை தனுஷ் மாதிரி அவரால் கத்தியை கீழேயே வைக்க முடியவில்லை. அண்ணன் சற்று ரொமான்ஸ் மூடில் இறங்கினால் கூட அடுத்த ஆக்ஷன் பிளாக்கிற்கான நேரம் வந்து தொலைத்து விடுகிறது. (ஆனால் அவர் சும்மா இருந்தாலும் கூட அவரது ரசிகாஸ் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. 24x7 கொலைவெறியுடன்தான் சோஷியல் மீடியாவில் சுற்றுகிறார்கள். ஆரி சிரிக்கும் போது மட்டுமாவது அவர்களும் கூட சேர்ந்து சற்று சிரிக்கலாம்.)

“டேய்... நான் கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்துடக்கூடாதா. உடனே எந்த பிரச்னையையாவது வந்து சொல்லி அந்த ரொமான்ஸ் மூடை உடனே கெடுத்துடணுமா. எப்பவும் நான் கத்தி எடுத்துட்டு சுத்திட்டே இருக்கணுமா?" என்று தனுஷ், புதுப்பேட்டை திரைப்படத்தில் பொங்கும் காட்சியானது பிரபலம். ஆரியின் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது. ‘கூடிப்பிரியேல்’ பொன்மொழி கேபிக்கு வழங்கப்பட்டது.

‘காலம் அழியேல்’ (காலத்தை வீணாக்காதே) என்கிற பொன்மொழி ஆரிக்கும் ஷிவானிக்கும் அதிகமாக வழங்கப்பட்டது. வாக்கெடுப்பில் ஆரி வெற்றி பெற்று இந்தப் பட்டத்தை வேறுவழியின்றி சூட்டிக் கொண்டார். ஷிவானி சோம்பேறித்தனமாக இருப்பதால் அவரைச் சிலர் சொன்னார்கள். ‘மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணி உங்க நேரத்தை வீணாக்காதீங்க’ என்கிற காரணத்தை ஆரிக்கும் சொன்னார்கள்.

தன் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்கள் சரியாக இருந்தால் அதை நேர்மையாகவும் முகச்சுளிப்பு இன்றியும் ஏற்றுக் கொள்வது ஆரியின் நல்ல வழக்கம். எனவே இந்த டாஸ்க்கின் பல சமயங்களில் தன் மீது சொல்லப்பட்ட விமர்சனங்களை முகச்சுளிப்பின்றி ஏற்றுக் கொண்டார்.
பிக்பாஸ் – நாள் 95

‘சுமையினுக்கு இளைத்திடேல்’ - 'பொறுப்பைக் கண்டு ஓடாதே’ என்பது அடுத்த வாக்கியம். இதில் பாலா மற்றும் ஷிவானியின் பெயர்கள் வந்தது மிகப் பொருத்தமே. தன் பெயர் குறிப்பிடப்பட்ட சமயங்களில் ஷிவானியின் முகம் சுருங்கியது. இறுதியில் அவருக்குத்தான் இது சூட்டப்பட்டது. ("சப்பாத்தி திறந்தே கிடக்கே... யாரும் பார்க்கலையா?" – ஆரி. “நான் பால் மட்டும்தான் மெயினா பார்க்கறேன்" – ஷிவானி)

‘துன்பத்திற்கு இடம் கொடேல்’ என்கிற வாக்கியத்திற்குப் பொருத்தமானவர் என்று பெரும்பான்மையாக ரியோவைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர் அவ்வப்போது டல்லாகி மூலையில் அமர்ந்துவிடுவதால் பொருத்தமான தேர்வுதான். டாஸ்க்குகளில் தனக்கு நிகராக போட்டியிட்ட ரியோவைப் பாராட்டினார் பாலாஜி. (இதைப் பற்றி நானும் குறிப்பிட்டிருக்கிறேன்.)

‘நன்றி மறவேல்’ என்கிற வாக்கியத்திற்கு சோமிற்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அந்த வெற்றியை தனது பாட்டிக்கு சமர்ப்பித்தார் சோம்.

‘துன்பம் மறந்திடு’ – இதில் பெரும்பாலோனோர் பாலாஜியை குறிப்பிட்டார்கள். "கமலிடம் பாராட்டு ஒருபக்கம் வாங்கினாலும் திட்டும் வாங்கியவர் பாலாஜிதான். ஆனால் அதிலிருந்து அவர் மீண்டெழுவது நல்ல குணாதிசயம்" என்று பாலாவைப் பாராட்டினார் ரம்யா. ‘துன்பம்தான் படிப்பினை’ என்று பாலாஜிக்கு தத்துவம் சொன்னார் ஆரி. ‘எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாரு. அவ்ளோ நல்லவரு’ என்று பதிலுக்கு ஆரியைப் பாராட்டினார் பாலாஜி.

இந்த இடத்தில் ஆரியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். வீடே ஒருவரை வெறுத்து ஒதுக்கும் போது அல்லது இவர் அவர்களை ஒதுக்கி தனியாக நிற்கும் போது அப்படிப்பட்டவருக்கு மனவுளைச்சல் நிச்சயம் ஏற்படும். முதல் சீஸனில் பரணி அடைந்த மனவுளைச்சல் காட்சிகளை நினைவுகூருங்கள். ஆனால் ஆரி அனைத்தையும் சமாளித்து மனஉறுதியுடன் எதிர்கொள்வது சிறப்பான விஷயம். கூடவே ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பதையும் அவர் நினைவுகொள்ள வேண்டும்.

பிக்பாஸ் – நாள் 95
‘துன்பம் மறந்திடு’ வாக்கியத்தை ஷிவானிக்கு ரியோ சமர்ப்பணம் செய்தது உண்மையிலேயே நெகிழ்ச்சியானது. ஷிவானியின் அம்மா புயல் போல் வந்து விட்டுப் போன தருணத்தை எவராலும் மறக்க முடியாது. சாதாரண நபர்களே இதில் மனது ஒடிந்து விடுவார்கள். அதிலும் ஷிவானி போன்ற சென்சிட்டிவ் ஆசாமிகளின் பாடு மிகச்சிரமம். என்றாலும் அதிலிருந்து மீண்டு எழுந்திருக்கும் ஷிவானிக்குப் பாராட்டு.

கேட்பதற்கு தகாத வார்த்தை போல் இருந்தாலும் இதன் அர்த்தம் அருமையானது. பிக்பாஸிற்கு பொருத்தமானதும் கூட. ‘கோதாட் டொழி’ (குற்றமான விளையாட்டை விட்டு விடு). இதன் விளக்கத்தைக் கேட்டதுமே பலருக்கும் பாலாவின் நினைவுதான் வந்திருக்கும். ‘Out of the box thinking’ என்கிற பெயரில் பல சேஷ்டைகளைச் செய்தவர் அவர். எனவே பாலாஜி இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. இதன் ஏற்புரையில் "இதை மாத்திக்க முடியாது... ஆனா மத்தவங்க பாதிப்பு அடையாம இனி பார்த்துக்கறேன்" என்று பாலாஜி சொன்னதை சக போட்டியாளர்கள் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

‘தேசத்தோடு ஒட்டி வாழ்’ - இந்தத் தலைப்பிற்கு பலருக்கும் ஆரியின் நினைவு வந்திருக்கும். எனவே அனைவருமே ஆரிக்குத்தான் இதைக் கொடுத்தார்கள். "யாரும் அவரை கார்னர் பண்ணலை. அவராத்தான் ஒதுங்கியிருக்கார்" என்று விளக்கம் தந்தார் ரம்யா. "இப்பத்தான் தெரியுது. அவருக்கு சிரிக்கவே தெரியும்னு" என்றார் சோம். தன் முறை வந்த போது பாலாஜியைக் குறிப்பிட்டார் ஆரி. "ஆரி ஜெயிச்சா எனக்கு சந்தோஷமில்ல. வெளில வாங்க பார்க்கலாம்" என்று கோபத்தில் பாலாஜி சொன்னதையெல்லாம் இப்போது மேற்கோள் காட்டினார் ஆரி.

‘ஒளவியம் பேசேல்’ (பொறாமை கொண்டு பேசுவது கூடாது) என்ற நீதி வாக்கியத்தை ரம்யாவிற்கு வழங்கினார் ஆரி. ‘Character Assassination’ செய்கிறார் என்று சொல்லி ஆரிக்குக் கொடுத்தார் பாலாஜி. “துணி துவைக்கறதையெல்லாம் ஒரு காரணமா சொல்லணுமா ப்ரோ?” என்று சொல்லி ஆரிக்குக் கொடுத்தார் கேபி. (ஆரியின் புகார் சரியானதுதான்).

பிக்பாஸ் – நாள் 95
“நீங்கள்லாம் வெளியே போய் கேமை பாருங்க.. அப்புறம்தான் தெரியும். நான் பொறாமை கொண்டவனா... இல்லையான்னு. பொறாமை இருந்திருந்தா... என் கேமே வேற மாதிரி இருந்திருக்கும்" என்று பன்ச் வசனம் பேசினார் ஆரி. உள்ளே இருந்து கொண்டு வெளியுலக நிலைமையை துல்லியமாக அவர் கணிப்பது ஆச்சர்யமாகவே இருக்கிறது.

‘தீயினாற் சுட்ட புண்’ என்கிற திருக்குறள் வாக்கியம் கடைசியில் வந்தது. இது பாலாவிற்குத்தான் அதிகம் பொருந்தும். ஆரியும் இதை வழிமொழிந்தார். ஆனால் பதிலுக்கு ஆரிக்கு இதை வழங்கினார் பாலாஜி. (இதுவும் சற்று பொருத்தம்தான்) "‘இந்தப் போட்டிக்கு தகுதியில்லாதவர்’ என்று ஆரி என்னைச் சொன்னது என்னைப் புண்படுத்தியிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார் கேபி. "எனக்கு அதிகமா கோபம் வந்தது... ஆரியுடன் விவாதித்த தருணங்களில்தான். நான் ஒன்சைடா விளையாடினதில்லை" என்று ஆரியுடன் முரண்பட்ட தருணங்களை நினைவுகூர்ந்தார் ரம்யா. ரியோவும் ஷிவானியும் பாலாஜியின் மீது குற்றம் சாட்டினர்.

பிக்பாஸ் – நாள் 95

இதில் ஷிவானியின் அப்சர்வேஷனை மறுபடியும் கேட்டுப் பாருங்கள். அத்தனை ஷார்ப். இது போன்ற தருணங்களில் ஷிவானி ஆச்சர்யப்படுத்துகிறார். தன் மீது சுமத்தப்பட்ட வாக்கியத்தை பாவமன்னிப்புக் கோரலுடனும் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு இனி மனம் மாறுவதாக வாக்களித்திருக்கிறார் பாலாஜி. (பார்க்கலாம் அமாவாசை!).

இந்த நீதிவாக்கிய டாஸ்க் முடிந்தவுடன் கொலைவெறியுடனும் பொங்கி வரும் அழுகையுடனும் பிக்பாஸிற்கு ஒரு பதில் நீதிவாக்கியம் சொல்ல வேண்டியிருந்தது. அது –

‘பார்வையாளர்களுக்கு டார்ச்சர் தரேல்!’



source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/boring-tasks-continue-bigg-boss-tamil-season-4-day-95-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக