Ad

வியாழன், 7 ஜனவரி, 2021

நீலகிரி: தண்ணீர் தொட்டிக்குள் மகள்; மகனுக்கு விஷம்! - அடுத்தடுத்து கிடந்த 4 உடல்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள கொலக்கொம்பை பகுதியில் உள்ளது கிரேக்மோர் தனியார் தேயிலைத் தோட்டம். இந்த தேயிலைத் தோட்டத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் தோட்ட தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கான குடியிருப்பும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியிலேயே உள்ளன.

சுமதி

இதே தேயிலைத் தோட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஷோக்பகத் (30), சுமதி(28) தம்பதியர் தோட்ட தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு அபய் என்ற 9 வயது மகனும், ரேஷ்மா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.

இந்த நிலையில்,நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்ததேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அருகில் உள்ள கொல்க்கொம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் விசாரணை

விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்ததில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

அடுத்த அதிர்ச்சியாக அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் சுமதியின் மகள் ரேஷ்மா இறந்து கிடந்தார். 9 வயது மகன் அபயும் பக்கத்து அறையில் இறந்து கிடந்தார். தொழிலாளி அஷோக் பகத்தின் சடலமும் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டது.

அபய்

ஒரே இடத்தில் அடுத்தடுத்து 4 உடல்கள் கிடந்தது மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சோக நிகழ்வு குறித்து கொலக்கொம்பை காவல்துறையினர், "குடும்ப தகராறு காரணமாக அஷோக்பகத் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, மகனுக்கு விஷம் கொடுத்தும் மகளை தண்ணீர் தொட்டியில் போட்டு கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் அடுத்தக்கட்ட விசாரணைக்குப் பின்னரே உரிய காரணம் தெரியவரும்" என்றனர்.

அஷோக்

கடந்த 21 ஆம் தேதி இதே பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மாயமாகி தற்போது வரை கண்டறிய முடியாமல் திணறி வருவதும் குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/murder-and-suicide-in-private-tea-estate-near-coonoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக