புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் மேற்கில் தனியாக வசித்து வரும் மூதாட்டி, சுப்புலட்சுமி. சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.2,500 மற்றும் பொங்கல் பரிசை வாங்க, மூதாட்டி கட்டாயம் நேரில் செல்லவேண்டும் என்பதால், ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ரேஷன் கடைக்கு நடந்தே சென்றார். பாதி தூரத்தில், அடுத்து ஓர் அடிகூட வைக்க முடியாமல் மயங்கி அங்கிருந்த மர நிழலில் படுத்துவிட்டார்.
பாட்டியைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணியின் மகன்களான நிதின், நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள், அவருக்கு உதவ தங்கள் வீட்டிலிருந்த இழுவை வண்டியை எடுத்து வந்தனர்.
அந்த வண்டியில் மூதாட்டியைப் படுக்க வைத்து, இழுத்துச் சென்று, பரிசு பொருள்களை வாங்கிக்கொடுத்து மீண்டும் அவரை அவரது வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தனர்.
சிறுவர்களின் இந்தச் செயல் குறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். செய்தியைப் பார்த்த பலரும் சிறுவர்களின் செயலைப் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் சர்ப்ரைஸாக, சிறுவர்களின் வீட்டுக்கு வந்த கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு போலீஸார் சிறுவர்களைப் பாராட்டியதுடன் ரொக்கப்பணம் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்தனர்.
இதுபற்றிப் பேசிய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், "இந்தச் சின்ன வயதிலேயே இந்தச் சிறுவர்கள் மனித நேயத்தோடு, மூதாட்டிக்கு உதவி செய்தது பெரும் பாராட்டுக்குரியது. இதில், பெற்றவர்களின் வளர்ப்பும் ஒரு முக்கிய காரணம். அந்த சிறுவர்களுக்கு மேலும் உற்சாகம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே நேரடியாக வந்து பாராட்டினோம். சிறுவர்களின் செயலை போன்று பலரும் இயலாதவர்களுக்கு உதவி செய்யவேண்டும்" என்றார்.
சிறுவர்களிடம் பேசினோம். "தப்பு பண்ணினவங்க வீட்டுக்குத்தான் போலீஸ்காரங்க வருவாங்கன்னு நெனச்சுக்கிட்டு இருந்தோம். ஆனா, அந்த பாட்டிக்கு உதவி பண்ணதுக்கு அவங்க எங்களை வாழ்த்த வந்தப்போ, சர்ப்ரைஸ் ஆகிட்டோம். சந்தோஷம் தாங்கல. நீங்க எழுதினதைப் படிச்சுட்டு பக்கத்து வீட்டுக்காரங்க, வெளியூர்கள்ல இருந்தெல்லாம் பலரும் பாராட்டுறாங்க. இப்போ, இதுபோல இன்னும் பலருக்கு நிறைய உதவிகள் செய்யணும்னு ஆசை வந்திருக்கு" என்றனர் குழந்தைத்தனம் நிறைந்த உற்சாகத்துடன்.
இந்த இளம் திரிகளுக்கு தூண்டுகோல்களாக வந்த காவலர்களுக்கும் வாழ்த்துகள்!
source https://www.vikatan.com/news/common/inspector-appreciated-kids-who-helped-an-old-lady-in-pudukkottai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக