Ad

வெள்ளி, 8 ஜனவரி, 2021

28,450 ஆண்டுகள் பழைமையான கல்ப விக்ரகம்... உண்மைப் பின்னணிதான் என்ன? #FactCheck

கல்ப விக்ரகம் என்ற பெயரில் வலைத்தளங்களில் ஒரு சுவாரஸ்யமான தகவல் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

"1960-களில் சீனப் படைகள், திபெத்துக்குள் முன்னேறிக் கொண்டிருந்தன... லோ மாண்டேங்கில் உள்ள திபெத் துறவி ஒருவர், தன்னிடமிருந்த ஒரு மரப்பெட்டியை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ அதிகாரிடம் ஒப்படைத்தார். அந்த மரப்பெட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அந்த அதிகாரி, அதனை இந்தியாவில் உள்ள ஒரு ரகசிய விமானதளத்திற்கு அனுப்பினார். அங்குள்ள அதிகாரிகள் அந்த மரப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே ஓர் உலோக சிலையும் ஓர் ஓலைச்சுவடியும் இருந்தன.

உலோக சிலை

இது துவாபரா யுகத்தில் வடிக்கப்பட்ட சிவபெருமானின் கல்ப விக்ரகம் என்றும் இதுதான் உலகின் மிகப் பழைமையான உலோகச் சிலை எனவும் அதில் குறிக்கப்பட்டிருந்தது. இதன் துல்லியமான கால அளவை அறிந்துகொள்ள, அந்த கல்ப விக்ரகம், அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக கதிர்வீச்சு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு ரேடியோ கார்பன் சி-14 ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவு, சி.ஐ.ஏ அதிகாரிகளை மிகுந்த ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த கல்ப விக்ரகம், 28,450 ஆண்டுகள் பழைமையானது எனவும், மகாபாரத குருசேத்ரப் போருக்கு 23,300 ஆண்டுகள் முந்தையது எனவும் அந்த ஆய்வில் தெரியவந்தது. விலை மதிக்க முடியாத, உலகின் மிகப் பழைமையான அந்த கல்ப விக்ரகம், ஆய்வகத்திலிருந்து திருடு போய்விட்டது." இப்படியாக விரிகிறது அந்த வலைத்தளத் தகவல். அதில் ஒரு புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் போன, 28,450 ஆண்டுகள் பழைமையான கல்ப விக்ரஹம் இதுதான் எனப் பொருள்படும் வகையில் அந்தப் படம் இடம் பெற்றுள்ளது.

இது எந்தளவிற்கு உண்மை? இதில் இடம்பெற்றுள்ள தகவல்களை நம்புவதா, வேண்டாமா? இதில் இடம்பெற்றுள்ள கல்ப விக்ரஹம் 28,450 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டதா? இன்னும் பல கேள்விகளுடன் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியனைச் சந்தித்தோம்.

‘’இதில் காணப்படும் அத்தனை தகவல்களுமே பொய்யான, தவறான கூற்றுகளாகும். வரலாற்று ரீதியான, விஞ்ஞானப்பூர்வமான எந்த ஓர் ஆதாரமும் காட்டப்படவில்லை. உலகின் காலப் படிநிலையை... பழங்கற்காலம், புதிய கற்காலம், செம்பு உலோக காலம், இரும்பு காலம், கிறிஸ்து பிறப்புக்கு பிறகான வரலாற்றுக் காலம் என ஆய்வாளர்கள் பகுத்துள்ளார்கள். கி.மு. 3,500-லிருந்துதான் உலோக காலம் தொடங்குகிறது. அதாவது இந்த காலகட்டத்தில்தான் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கே வந்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால், 28,450 ஆண்டுகளுக்கு முன்பு உலோகச் சிலை இருந்திருக்க வாய்ப்பே இல்லை.

குடவாயில் பாலசுப்ரமணியன்

இது துவாபர யுகத்தில் படைக்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துவாபர யுகம் என்பதைக் கற்பனையான புராணமாக எடுத்துக்கொள்ளலாமே அன்றி, இதை வரலாறாக எடுத்துக்கொள்ள முடியாது. உலகின் மிகவும் பழைமையான நாகரிகமாக மெசபடோமியா நாகரிகம், கிரேக்க நாகரிகம், தென் அமெரிக்காவில் உருவான மாயன் நாகரிகம், சீன நாகரிகம், சிந்துசமவெளி நாகரிகம் ஆகியவை ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த நாகரிகங்களில் கிடைக்கக்கூடிய பழங்காலப் பொருள்கள்தான் தொன்மை நாகரிகத்திற்கான உண்மைச் சான்றாகக் கருதப்படுகின்றன. இந்த நாகரிகங்கள் அனைத்துமே அதிகபட்சம் 6 ஆயிரம், 7 ஆயிரம் ஆண்டுகள்தான் பழைமை வாய்ந்தவை. நாகரிக காலத்தில்தான் கலைப்பொருள்களின் உருவாக்கம் தொடங்கின. இந்த அடிப்படையில் பார்த்தால் 28,450 ஆண்டுகளுக்கு முன்பு, கற்சிலைகள்கூட இருந்திருக்காது. அந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் காட்டுமிராண்டிகளாகதான் இருந்திருப்பார்கள். இந்த வலைத்தள செய்தியில் இடம்பெற்றுள்ள சிலையின் படத்தில், மகுடம் அணிந்த ஆண் உருவம் மண்டியிட்டு அமர்ந்துள்ளது. இதன் ஒரு கையில் அம்பும், இன்னொரு கையில் வில்லும் உள்ளது. முதுகில் அம்புரா (அம்புகள் வைக்கக்கூடிய துணி) உள்ளது. இது சிவபெருமானின் வடிவம் என அதில் சொல்லப்பட்டுள்ளது. இதுவும் பொய்யான, தவறான தகவல்.

சிவபெருமானின் வடிவம் பற்றி, இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை உடைய நம்முடைய சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, அக்காலத்திற்கு உரிய கலை வடிவம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கி.பி. 6-ம், 7-ம் நூற்றாண்டுகளில் பல்லவர் காலத்திலான சிவவடிவங்கள்தான் கிடைத்துள்ளன. இந்திய அளவிலும் கி.பி 5-ம் நூற்றாண்டுக்கு பிறகுதான் தெளிவான சிவ வடிவங்களை நாம் காண முடிகிறது. 28,450 ஆண்டு பழைமையான காலகட்டத்தில் சிவ வழிபாடு இருந்ததற்கான எந்தத் தரவும் கிடையாது. கற்கால மனிதன் சிவனை வழிப்பட்டதற்கான எந்த ஓரு சான்றும் கிடையாது. இந்தப் படத்தில் உள்ள உருவம், பழைமையான கலையம்சம் அல்ல. சோழர் காலத்தின் செப்பு சிலைகளை அதன் கலையம்சத்தின் அடிப்படையில் முற்காலச் சோழர், இடைக்காலச் சோழர், பிற்காலச் சோழர் காலம் என மூன்று பகுப்புகளாகப் பிரிக்கிறார்கள். இதுபோல், இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் காணப்படக்கூடிய சிற்பங்களையும் செப்பு சிலைகளையும்... அவற்றின் கலையம்சத்தின் அடிப்படையில், உரிய காலப் பகுப்பில் அடக்கிவிட முடியும்.

குடவாயில் பாலசுப்ரமணியன்

எனவே இந்த வலைத்தள செய்தியில் இடம்பெற்றுள்ள உருவம், எந்த ஒரு பழைமையான கலைப்பாணியிலும் அமையவில்லை. குறிப்பாக திபெத் நாட்டின் கலைப்பாணியை காட்டுவதாகவும் இது அமையவில்லை. இந்த சிலையின் கலையம்சத்தைப் பார்க்கும்போது, சமீபகாலமாக காசியில் விற்பனை செய்யப்படும் கலைப்பொருள்கள் போல் உள்ளன. 'தரா' என அழைக்கப்படும் மிகவும் மலிவான கலப்பு உலோகத்தால் செய்யப்பட்டு, தங்க மூலாம் அல்லது தங்க நிறத்திலான வண்ணம் பூசப்பட்ட கலைப்பொருள் இது. அதாவது நடப்பு நவீன காலத்தில் செய்யப்பட்ட கலைப்பொருள்.

நான் சமீபத்தில் காசி சென்றபோது, அன்னப்பூரணி உருவம் கொண்ட சிலையை 20 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். தற்போது வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் கல்ப விக்ரகம் எனப் பொய்யாக சொல்லப்படும் உருவம், அதுபோலவே உள்ளது. இந்தச் சிலை 28,450 ஆண்டுகள் பழைமையானது என அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா கதிர்விச்சு ஆய்வகத்தில், ரேடியோ கார்பன் சி-14 ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக, வலைத்தள செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

அன்னப்பூரணி சிலை

இது உண்மையாக இருந்தால், அதற்கான ஆய்வறிக்கையை வெளியிட்டிருப்பார்கள். அப்படி எந்த ஓர் ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை. தொல்லியல், கலையம்சம், வரலாறு, அறிவியல்... எந்த அடிப்படையில் பார்த்தாலும் இது முழுக்க முழுக்க பொய்யான கட்டுக்கதை. ஏமாற்று வேலை. இதை மக்கள் நம்பக்கூடாது. பழைமையான கலைப்பொருள்கள் என்ற பெயரில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் நிறைய வலம் வருகின்றன. கோயில் கலசத்தைத் திருடி, அதில் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாக மோசடிகள் நடந்தன. அதுபோல்தான் கல்ப விக்ரகம் என்ற பெயரில் பொய்யான தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து சிஐஏ மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தரப்பில் ஏதாவது தரவுகள் இருக்குமா என்று இணையதளங்களிலும் தேடிப் பார்த்து, இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வந்துவிட்டாலே, மக்கள் அதை உண்மை என நம்பிவிடும் நிலை உள்ளது. ஆராய்ந்து பார்த்தே முடிவுக்கு வர வேண்டும். கல்ப விக்ரகம் குறித்த விறுவிறுப்பான இந்த கட்டுக்கதையே ஓர் ஆணித்தரமான உதாரணம்.


source https://www.vikatan.com/spiritual/news/a-viral-post-about-kalpa-vigraham-and-the-truth-behind-it

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக