Ad

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

4 கிலோ `புல்லட் சாப்பாடு’ ; முடித்தால் புத்தம் புது புல்லட்! - புனே உணவகத்தின் பலே ஐடியா

புனேயில், மும்பை செல்லும் சாலையில் வட்காவ் பகுதியில் உள்ள சிவ்ராஜ் ஹோட்டலில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெண்ணிலா கபடிக் குழுவில் புரோட்டா சாப்பிட போட்டி வைத்தது போல், புதுமையான போட்டியை ஓட்டல் உரிமையாளர் அதுல் வாய்கர் அறிவித்துள்ளார். கொரோனாவால் ஏற்கனவே ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.

போட்டியில் பங்கேற்ற வாடிக்கையாளர்

இதனால் வாடிக்கையாளர்களை இழுக்க என்ன செய்யலாம் என்று ஆலோசித்த அதுல் மனதில் நொடிப்பொழுதில் உதித்ததுதான் இந்த புல்லட் திட்டம். இதற்கு `புல்லட் சாப்பாடு’ என்றே பெயரிட்டுள்ளார். அதாவது இந்தியில் `புல்லட் தாலி’. இந்த சாப்பாடு முழுக்க அசைவ உணவுகளை கொண்டதாக இருக்கும். புல்லட்டை வெல்ல வேண்டுமானால் ஓட்டல் நிர்வாகம் கொடுக்கும் 4 கிலோ அசைவ சாப்பாட்டை ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதில் பல்வேறு வகையான பொறித்த மீன் மற்றும் குழம்பு, அடுப்பில் சுட்ட கோழி, கோழிக்கறி, ஆட்டு இறைச்சி என மொத்தம் 16 வகையான சாப்பாட்டு வகைகளை வைக்கின்றனர். இந்த சாப்பாட்டின் விலை 2,500 ரூபாயாகும்.

`பலரும் புல்லட்டை வெல்ல வேண்டும் என்ற ஆர்வக்கோளாறில் சாப்பாடு ஆர்டர் செய்து விடுகின்றனர். ஆனால் அவர்களால் பாதிச்சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை’ என்று அதுல் தெரிவித்தார். இந்த ஓட்டல் குறித்த செய்தியை கேள்விப்பட்டு மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமானோர் புனே நோக்கி படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இப்போட்டியில் வெல்ல ஓய்வு பெற்ற மும்பை உதவி போலீஸ் கமிஷனர் அசோக் ஜாதவ் கூட தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இச்சவாலை ஏற்று போட்டியில் கலந்து கொண்டு புல்லட்டை வெல்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

ஓட்டல் உரிமையாளர் அதுல் தலா ரு.1.70 லட்சம் செலவில் 5 பைக் வாங்கி தனது ஓட்டல் முன்பாக நிறுத்தி வைத்துள்ளார். தினமும் புல்லட்டிற்கு ஆசைப்பட்டு 60 பேர் வரை புல்லட் சாப்பாட்டை சாப்பிடுகின்றனர் என்று அதுல் பெருமையுடன் கூறுகிறார். ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து இப்போட்டி தொடங்கிய போதிலும் எளிதில் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் சோலாப்பூரை சேர்ந்த சோம்நாத் பவார் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் அனைத்து சாப்பாட்டையும் சாப்பிட்டு முதல் ராயல் எல்பீல்டு புல்லட்டை தட்டிச்சென்றுள்ளார். வாங்கிய புல்லட் முடியும் வரை இப்போட்டி தொடரும் என்று அதுல் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களுக்காக நிறுத்தப்பட்டுள்ள புல்லட்

இதனால் போட்டியில் கலந்து கொள்ள பலர் வீட்டில் சாப்பிட்டு பழகிக்கொண்டிருக்கின்றனர். புல்லட் தாலியைப்போன்று சிக்கன் தாலி, மட்டன் தாலி, ராவணன் தாலி, பஹல்வான் மட்டன் தாலி, மால்வானி மீன் தாலி போன்றவையும் கிடைக்கிறது. அனைத்துமே தலா ரு.2,500 ஆகும். இதனை தயாரிக்க 50 சமையல்காரர்கள் இருக்கின்றனர். இதற்கு முன்பு 8 கிலோ ராவணன் தாலியை இந்த ஓட்டல் நிர்வாகம் அறிமுகம் செய்தது. அதில் வெற்றி பெறுபவருக்கு 5 ஆயிரம் பரிசு அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் அதுல். இந்த ஓட்டலுக்கு மும்பை, தானே, பால்கர், புனே, நாசிக், ஒளரங்காபாத், சதாரா உட்பட பல பகுதியில் இருந்து விடுமுறை நாட்களில் தங்களது உறவினர்களுடன் மதிய சாப்பாட்டிற்கு வருவதை அதிகமானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று கூறும் அதுல் இந்த ஓட்டலை 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.



source https://www.vikatan.com/food/food/bullet-prize-if-you-win-the-dining-competition-people-invading-pune-hotel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக