Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

`#TooMuchDemocracy: இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்வது கடினம்' - நிதி ஆயோக் சி.இ.ஓ சொன்னது என்ன?

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது `நிதி ஆயோக்' அமைப்பு. இந்த அமைப்பின் தலைமைச் செயலதிகாரியாக இருந்துவருபவர் அமிதாப் காந்த். இவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று தனியார் பத்திரிகை நடத்திய ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது மிகப்பெரிய சர்ச்சையானது.

அமிதாப் காந்த்

Also Read: எட்டுவழிச் சாலை திட்டம்: `பாரத்மாலா பரியோஜனா' டு உச்ச நீதிமன்ற தீர்ப்பு! - இதுவரை நடந்தது என்ன?

மேலும் பேசிய அவர், ``முதன்முறையாக ஓர் அரசாங்கம் பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, தைரியத்துடனும் முனைப்புடனும் இருக்கிறது. சுரங்கம், தொழிலாளர்கள், நிலக்கரி, வேளாண்மை ஆகிய துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் மிகக் கடினமான சீர்திருத்தங்கள். இது போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசியல் உறுதியும், நிர்வாகத் திறனும் வேண்டும்'' என்று பேசியவர், வேளாண் சட்டங்கள் குறித்தும் பேசியிருக்கிறார்.

``வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் வேண்டும். விவசாய மண்டிகளும், குறைந்தபட்ச ஆதார விலையும் தொடரும். இந்தப் புதிய சீர்திருத்தங்கள் மூலம் விவசாயிகளுக்கு, தங்கள் பயிர்களை விற்க ஒன்றுக்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கிடைக்கும். குறைந்தபட்ச ஆதார விலையைவிட, ஒருவர் அதிகமாகத் தரும்போது, அதை ஏன் விவசாயிகள் பெறக் கூடாது?'' என்று பேசியிருந்தார்.

இதில், ``இந்தியாவில், அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதால்தான் சீர்திருத்தங்களை மேற்கொள்வது கடினமாக இருக்கிறது'' என்று அமிதாப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. `மக்களுக்கு எதிரான திட்டங்களை நிறைவேற்றிவிட்டு இது போன்ற கருத்துகளைச் சொல்கிறார்கள்', `அதிகப்படியான ஜனநாயகம் உள்ள இந்தியாவில் எப்படி அதிரடியாகப் பண மதிப்பிழப்பு போன்ற பெரிய நடவடிக்கைகளைச் செய்தார்கள்?', `ஜனநாயக நாடாக இருக்கும் இந்தியாவை ஜனநாயகமற்ற நாடாக மாற்ற நினைக்கிறார்கள்' என்று அமிதாப்பின் பேச்சுக்குப் பல எதிர்ப்புகள் கிளம்பின.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார்...

ராகுல் காந்தி

Also Read: `ராகுல் காந்தி குறித்து ஒபாமாவின் கருத்து வெறுக்கத்தக்கது!’ - சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்

இதையடுத்து செய்திகளில் அமிதாப் பேசிய தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்புத் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார் அமிதாப். தான் அவ்வாறு பேசவில்லை என்றும், உற்பத்தித்துறையில் உலக சாம்பியனாவது குறித்துத்தான் பேசினேன் என்றும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, இந்தச் செய்தியை வெளியிட்ட சில ஆங்கில ஊடகங்கள் அந்தச் செய்தியைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தன.

அதன் பிறகு, அவர் ஜனநாயகம் குறித்து அவ்வாறு பேசினாரா என்பதிலேயே குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் சிலவற்றில், அவர் `ஜனநாயகம்' குறித்துப் பேசியதற்கான காணொலி ஆதாரத்தோடு செய்தி வெளியிடப்பட்டது. அவர் இரண்டு இடங்களில், இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவானது.

மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த், இந்தியாவில் அதிகப்படியான ஜனநாயகம் இருப்பதாகக் கூறுகிறார். இதனால் கடுமையான சீர்திருத்தங்களான வேளாண் மற்றும் சுரங்கத்துறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியவில்லை என்கிறார். பின்னர் எதிர்ப்புகள் வந்ததும் நான் இதைச் சொல்லவில்லை என்று மறுத்தார். பா.ஜ.க ஆதரவு மீடியாக்கள், அவர் பேசியதாக வெளியிட்ட செய்தியைத் திரும்பப் பெற்றன. ஆனால் அவர்கள் இந்த வீடியோவை நீக்க மறந்துவிட்டனர்!'' என்று அமிதாப் ஜனநாயகம் குறித்துப் பேசிய வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் #TooMuchDemocarcy என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, அமிதாப்பின் கருத்துக்கு எதிராகப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுவந்தனர். அமிதாப் பேசிய வீடியோவும் அதிக அளவில் பகிரப்பட்டுவந்தது.
ரவி சங்கர் பிரசாத்

Also Read: `ரூ.971 கோடி; 543 எம்.பிக்களுக்கு 888 இருக்கைகள் ஏன்?’ - புதிய நாடாளுமன்றம்... சுவாரஸ்யத் தகவல்கள்

இதையடுத்து மத்தியமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் அமிதாப்பின் கருத்து குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ``இந்தியாவின் ஜனநாயகத்தில் நாங்கள் பெருமைகொள்கிறோம். நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேசிக்கிறார்கள். அவர்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இதனால் கிராமங்களில்கூட பா.ஜ.க வெற்றி பெறுவதைக் காணமுடிகிறது. நாங்கள் ஜனநாயகத்தின் மூலம் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம்'' என்று பதிலளித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/what-is-going-on-in-niti-ayog-ceo-too-much-democracy-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக