தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை தெற்குப் புதுத்தெருவைச் சேர்ந்த குருகார்த்திக், பாண்டி, ராமசாமி, செல்லராமன், இ.புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் மற்றும் கோவையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் நண்பர்கள். பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு அனைவரும் பெரியகுளத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, கல்லாற்றில் குளிக்கலாம் என திட்டமிட்டு, நேற்று மாலை 4 மணிக்கு பெரியகுளம் அருகே உள்ள கல்லாற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.
தொடர்மழை காரணமாக, கல்லாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில், குருகார்த்திக், பாண்டி, அய்யனார் ஆகிய மூவர் மட்டும் நீச்சலடித்து கரை சேர்ந்துள்ளனர்.
Also Read: தேனி: `எவ்வளவு நகையானாலும் விற்றுத் தருவேன்!' - 27 பவுன் நகையுடன் மாயமான நபர் கைது
செல்லராமன், ரமேஷ், ராமசாமி ஆகியோரை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றது. தப்பித்த மூவரும், இது தொடர்பாக தங்களது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
Also Read: முல்லைப் பெரியாறு மதுரை குடிநீர் திட்டம்... எதிர்க்கும் தேனி விவசாயிகள்... ஏன்?
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைத் தேடினர். இரவு நேரமானதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருந்த போதும், ஆற்றில் இறங்கி தொடர்ந்து தேடி வந்தனர். அப்போது, ராமசாமி, ரமேஷ் இருவரையும் மீட்டனர். படுகாயமடைந்த ராமசாமி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லராமனைத் தொடர்ந்து தேடிவந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை, பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் தடுப்பணையில் செல்லராமனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஏற்பட்ட துயரச் சம்பவம், பெரியகுளம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/death/one-died-in-periyakulam-kallaru-river-floods
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக