Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

காரைக்குடி: `வெடிகுண்டு வீசி விடுவேன்!’- முன்னாள் ஊராட்சித் தலைவரைப் பணம் கேட்டு மிரட்டிய நபர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பர்மா காலனியில் வசித்து வருபவர் மாங்குடி. சங்கராபுரம் பஞ்சாயத்தின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரான இவர், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரது மனைவி தேவி மாங்குடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் மற்றொரு பெண் வேட்பாளர் வெற்றிபெற்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல்

இதனால், சிவகங்கை மாவட்டத்தில் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டு, ஊராட்சிமன்றத் தலைவர் வெற்றி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாங்குடி வீட்டுக்குச் சென்ற தமிழ் தேசம் மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்குமரன் என்பவர், தான் கொண்டு வந்திருந்த டம்மி வெடிகுண்டு,கத்தி போன்றவற்றைக் காட்டி பணம்கேட்டு மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

Also Read: நாகர்கோவில்: அ.தி.மு.க எம்.பி விஜயகுமார் வீட்டுக்கு முன் கிடந்த வெடிகுண்டு! - அரசியல் பகை காரணமா?

``எங்களுக்கு பை நிறைய பணம் கொடு. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் பைப் வெடிகுண்டு வீசியது நாங்கள்தான்’’ என்று என்று கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார். சுதாரித்துக் கொண்ட மாங்குடி, காரைக்குடி காவல்நிலையத்தில் உடனடியாக செல்போன் மூலம் புகார் கொடுத்துள்ளார். புகாரையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தமிழ்குமரனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெடிகுண்டு மிரட்டல்

இது குறித்து டி.எஸ்.பி அருணிடம் கேட்டபோது, ``தமிழ் தேசம் மக்கள் இயக்கம் சார்பாக வெளியிடப்படும் இதழ்களை மாங்குடி, வாங்கி வந்திருக்கிறார். இதற்காக அவர் சந்தாவும் செலுத்தியுள்ளார். இந்தநிலையில், மாங்குடியிடம் அதிக பணம் இருக்கும் என்ற நோக்கத்தில், தமிழ்குமரன் அவரை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அப்போது, தானே தயாரித்த டம்மி பாம், கத்தி உள்ளிட்டவைகளை மாங்குடி வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். மாங்குடி, தகவல் கொடுத்ததன் அடிப்படையில் தமிழ்குமரனை ரிமாண்ட் செய்துள்ளோம். இவருக்கு வேறு நபர்களுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்திவருகிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/crime/karaikudi-police-arrest-man-over-bomb-threat

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக