Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

கடனை முடித்தும் ஆவணங்களைத் தராத வங்கி - மேனேஜரைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

வங்கியில் வாங்கிய கடன் தொகையை முழுமையாகத் திருப்பி செலுத்திய பிறகும், உத்திரவாதமாக வைக்கப்பட்ட வீட்டுப் பத்திரத்தைத் திரும்ப ஒப்படைக்காத ராமநாதபுரம் வங்கி மேலாளரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் வங்கி அதிகாரிகளுடன் ராதா கிருஷ்ணன்.

ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டையை அடுத்துள்ளது முதுனாள் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன். இவர் ராமநாதபுரத்தில் இயங்கி வரும் அரசுடமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில், மண்புழு உரம் வளர்ப்பதற்காக மானிய முறையில் கதர் கிராமத் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடனாக ரூ.4 லட்சம் பெற்றுள்ளார். இதற்கென வங்கி விதிகளின்படி தனக்குச் சொந்தமான வீட்டு பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை ஈடாக வங்கியில் கொடுத்துள்ளார். இதன் பின்னர் கடன் பெற்ற சில மாதங்களில், கடன் தொகையில் அரசால் வழங்கப்படும் மானியத் தொகையான ரூ.1.80 லட்சம் போக எஞ்சிய கடன் தொகையான ரூ.2.80 லட்சத்தை வங்கியில் முழுமையாகத் திரும்பச் செலுத்தி கடனை ராதாகிருஷ்ணன் கட்டி முடித்திருக்கிறார்.

கடன்பெற உத்திரவாதமாக வங்கியில் கொடுக்கப்பட்ட ஆவணங்கள், வீட்டுப் பத்திரத்தை திரும்பக் கேட்டுள்ளார் ராதாகிருஷ்ணன். ஆனால், வங்கியின் மேலாளர் சந்தோஷ் என்பவர் கடனுக்கு அறிவிக்கப்பட்ட மானியத் தொகையையும் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து பயனாளி ராதாகிருஷ்ணன், கடந்த 2017-ல் வங்கி மீது ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மானியத் தொகையைக் கட்டத் தேவையில்லை. எனவே வீட்டுப் பத்திரத்தைத் திரும்ப ஒப்படைக்குமாறு வங்கி மேலாளருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

வங்கியில் நீதிமன்ற ஊழியர்.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதிக்காமல் வங்கி மேலாளர் மீண்டும் பணத்தைக் கட்டவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால், ராதாகிருஷ்ணன் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். இது குறித்து விசாரித்த நீதிபதி முல்லை, வங்கி மேலாளரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர் அமீனா வங்கி மேலாளரைக் கைதுசெய்ய வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது வங்கி மேலாளர் அங்கு இல்லாததால் அவரைக் கைதுசெய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்களிடம் நீதிமன்ற உத்தரவு குறித்து தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை வங்கிக்குள் அனுமதிக்க மறுத்த வங்கி காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரப்பரப்பு நிலவியது.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/court-issues-arrest-warrant-for-ramnad-bank-manager

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக