Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

தென் திருப்பதியாம் திருவடிசூலத்தில் பவித்ரோத்சவம் தொடங்கியது!

பவித்ரம் என்ற சொல்லுக்குத் தூய்மை என்று பொருள். பவித்ரோத்ஸ்வம் என்பதற்குத் தூய்மைப்படுத்தும் உற்சவம் என்று பொருள். பரம்பொருளான இறைவன் உறையும் ஆலயங்களில் செய்யும் சடங்கில் மந்திர லோபம், தந்திர லோபம், த்ரவ்ய லோபம், ஊனம், தேவை இல்லாத விரிவாக்கம், விபரீதச் செயல்பாடு, மறதி, விதிமீறல் ஏற்பட்டுவிட்டால் அவை பாவம் என்கிறது சாஸ்திரம். அப்படிப்பட்ட பாவங்கள் அகல வேள்வியில் பரிகாரமாக வ்யாஹ்ருதி ஹோமம் செய்வதுண்டு. ஆனால் இதைப் பரிகாரமாகப் பார்க்காமல் உற்சவமாகப் பார்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

திருவடிசூலத்தில் பவித்ரோத்சவம்

எனவே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் ஆண்டுதோறும் பவித்ரோத்சவம் சிறப்பாக நடைபெறும். அவ்வாறு தென் திருப்பதி என்று போற்றப்படும் செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் எனப்படும் ஸ்ரீ கரிமாரியம்மன் ஆரண்ய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவாரு வேங்கடாசலபதி பெருமாளுக்கும் திவ்ய க்ஷேத்திரப் பெருமாளுக்கும் இன்று (11.12.20) தொடங்கி 13.12.20 வரை பவிர்த்ரோத்சவம் நடைபெற இருக்கிறது.

இன்று காலை புண்ணியாக வாசனத்தோடு தொடங்கிய இந்த உற்சவம், கும்பப் பிரதிஷ்டை, பவித்ரப் பிரதிஷ்டை உட்பட மகா ஹோமங்களோடு தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. நாளை (12.12.20) அன்று காலை 8.30க்கு புண்ணியாக வாசனத்தோடு தொடங்கும் வைபவத்தில் பகல் 10.30க்கு ஸ்நபனத் திருமஞ்சனமும் பவித்ரம் சமர்ப்பித்தலும் நடைபெறும்.

திருவடிசூலத்தில் பவித்ரோத்சவம்

நிகழ்வின் இறுதி நாளான 13.12.20 அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை பல்வேறு ஆராதனைகளும் ஹோமங்களும் நடைபெற்று மகாபூர்ணாகுதி நடைபெறும். நிகழ்வில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் மூன்று நாள்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைபவத்தில் கலந்துகொள்ள வரும் பக்தர்கள் தவறாமல் முகக் கவசம் அணிந்துகொண்டு வந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/spiritual/temples/pavithrotsavam-started-at-thiruvadisoolam-perumal-temple-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக