Ad

வியாழன், 10 டிசம்பர், 2020

`எங்க பயிர்களுக்கெல்லாம் காப்பீடு கிடையாதா?' - பல ஆண்டுகளாக தவிக்கும் குத்தகை விவசாயிகள்

மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளாலோ பூச்சி, நோய்த் தாக்குதல்களாலோ பயிர்களில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது விவசாயிகள் மகசூல் இழப்பைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பால், விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதை ஈடு செய்ய, தங்களது பயிரை காப்பீடு செய்வது மிகவும் அவசியமாகிறது. ஆனால் அனைத்து விவசாயிகளாலும் எளிதாக பயிர் இன்சூரன்ஸ் செய்யமுடியாத நிலை உள்ளது. குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது பயிரை காப்பீடு செய்ய கடும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் இவர்கள் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள்.

டெல்டா

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி ‘தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள்ல குத்தகை நிலங்கள் அதிகம். இந்த பகுதிகள்ல உள்ள மொத்த விளைநிலங்கள்ல 3-ல் 2 பங்கு நிலங்கள் கோயில்கள், ஆதின மடங்கள், வக்பு வாரியங்கள், கிறிஸ்துவ தேவாலயங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமானது. குத்தகை விவசாயிகளால்தான் இந்த நிலங்கள் காலம் காலமாக உயிர்ப்போடு இருக்கு. நாட்டின் உணவு உற்பத்தியில குத்தகை விவசாயிகளோட பங்கு மிகவும் முதன்மையானது.

மிராசுதாரர்களுக்கு சொந்தமான தனியார் நிலங்கள்லயும், ஏராளமான ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள், குத்தகைக்கு சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்காங்க. மற்ற விவசாயிகள் மாதிரிதான் குத்தகை விவசாயிகளும் கடுமையாக உழைச்சி, பயிர் சாகுபடி செய்றாங்க. விவசாயத்துல உள்ள கஷ்ட நஷ்டங்கள் எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், குத்தகை விவசாயிகள், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் தங்களோட பயிருக்கு ப்ரீமியம் செலுத்த முடியலை. காரணம், குத்தகை சாகுபடியாளர்களுக்கு நடப்பு சாகுபடி சான்று கொடுக்க, கிராம நிர்வாக அலுவலர்கள் மறுக்குறாங்க. இந்த சான்றிதழ் இருந்தால்தான் பிரிமியம் செலுத்தமுடியும். கடந்த பல ஆண்டுகளா இந்த பிரச்னை இருக்கு. இதனால் மழை, வெள்ளம், வறட்சி மாதிரியான இயற்கை இடர்பாடுகளாலூம் பூச்சி நோய்த் தாக்குதல்களாலும் பயிர்கள் பாதிக்கப்படும்போது, பயிர் இன்சூரன்ஸ் திட்டத்துல இழப்பீடு பெற முடியுறதில்லை. நடப்பு சாகுபடி சான்றிதழ் கிடைக்காததுனால, அரசு நிவாரணங்களும் கூட குத்தகை விவசாயிகளுக்கு கிடைக்கமாட்டேங்குது.

மாசிலாமணி

குத்தகை விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்துல எளிதாக, ப்ரீமியம் செலுத்தும் வகையிலும் அரசு நிவாரணத்தை பெறும் வகையிலும் வருவாய்த்துறை பதிவேடுகள்ல, குத்தகை விவசாயிகள் பெயர்களைச் சேர்க்கணும். முதல்கட்டமாக, குத்தகை விவசாய நிலங்களுக்கு, பயிர் காப்பீடு செய்ய, உரிய சான்றிதழ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கணும். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிட்ட கோரிக்கை மனு கொடுத்திருக்கோம்.

நடப்பு சாகுபடியாளர் சான்றிதழ் கொடுக்குறதுங்கறது சலுகை அல்ல. இது சட்டப்படியான உரிமை. அரசாங்கம் விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய பயிர் இன்சூரன்ஸ், நிவாரணம் உள்ளிட்ட எல்லாவிதமான பலன்களும், குத்தகை பதிவு சட்டத்தின்படி, குத்தகை சாகுபடியாளர்களுக்கு வழங்கப்படணும். 20 வருசத்துக்கு முன்னாடி இந்த சட்டம் தீவிரமாக நடைமுறையில இருந்துச்சு. காலப்போக்குல அரசு அதிகாரிகள் இந்த சட்டத்தை கண்டுக்காமல் விட்டுட்டாங்க. மறுபடியும், குத்தகை பதிவு சட்டத்தை நடைமுறைப்படுத்தி, ஆண்டுதோறும் சாகுபடியாளர்களோட விவரங்களை வருவாய்த்துறை ஆவணங்கள்ல பதிவு செய்யணும்” என வலியுறுத்துகிறார்.



source https://www.vikatan.com/news/agriculture/tenant-farmers-didnt-able-to-get-crop-insurance-benefits-due-to-policy-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக