Ad

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

சென்னை: `உங்க வீட்ல துப்பாக்கி இருப்பதா புகார் வந்திருக்கு!' - தொழிலதிபரை அதிரவைத்த கொள்ளை

சென்னை அசோக்நகர் 79-வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் (49). தொழிலதிபர். இவரின் வீட்டுக்கு கடந்த 9.12.2020-ம் தேதி பிற்பகலில் 8 பேர் காரில் வந்தனர். தங்களை போலீஸ் என வீட்டில் இருந்தவர்களிடம் அவர்கள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் வீட்டில் துப்பாக்கி உள்ளதாக எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. அதனால் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என போலீஸ் கெட்டப்பில் வந்த அவர்கள் கூறினார்.

வழக்கில் கைதான சிவா

பின்னர் பாண்டியன் மற்றும் அவரின் குடும்பத்தினரை அந்த நபர்கள், ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்தனர். அதன்பிறகு வீட்டிலிருந்து 43 சவரன் தங்க நகைகள், 12 லட்சம் ரூபாய், 3 செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டு அந்த நபர்கள் தப்பிச் சென்றனர். பூட்டிய அறைக்குள் சிக்கிய பாண்டியன் மற்றும் அவரின் குடும்பத்தினர் நீண்ட நேரத்துக்குப்பிறகு வெளியில் வந்தனர். அப்போதுதான் வீட்டில் தங்கநகைகள், பணம் ஆகியவை கொள்ளைப்போனது தெரியவந்தது.

இதையடுத்து பாண்டியன், கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் (தெற்கு) தினகரன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோரின் ஆலோசனை பேரில் அசோக் நகர் உதவி கமிஷனர் பிராங்க்டி ரூபன் மேற்பார்வையில் கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

Also Read: நெல்லை: இரவில் போலீஸ்; பகலில் கொள்ளை!- வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய ஏட்டு சிக்கிய பின்னணி

வழக்கில் கைதான சதீஷ்

தனிப்படை போலீஸார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தினர். பிறகு அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் எனக்கூறி பணம் நகைகளைத் கொள்ளையடித்தவர்கள் பயன்படுத்திய 3 கார்கள், ஒரு பைக் ஆகியவற்றின் பதிவு நம்பர்கள் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். மேலும் திருடர்கள் பயன்படுத்திய செல்போன் நம்பர்களை தி.நகர் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரின் தொழிற்நுட்ப உதவியோடு ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியவந்தது.

இதையடுத்து தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்களைப் போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சென்னை அசோக்நகரைச் சேர்ந்த சிவா(26), திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்கிற ரவி (40), திருவண்ணாமலை, வந்தவாசியைச் சேர்ந்த சதீஷ் (31), சேலம் எடப்பாடியைச் சேர்ந்த அஜித்குமார் (26) எனத் தெரியவந்தது. அவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்து 4 கார்கள், 4 செல்போன்கள், ஒரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சென்னையைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் தேடிவருகின்றனர். அவரைப் பிடித்தால் மட்டுமே திருடப்பட்ட நகைகள், பணத்தை மீட்க முடியும் என போலீஸார் தெரிவித்தனர்.

வழக்கில் கைதான ரூபன்

இந்தச் சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீஸார் கூறுகையில், ``கைதானவர்கள் அளித்த தகவலின்படி தொழிலதிபர் பாண்டியன் வீட்டில் அருகில் குடியிருக்கும் சிவா என்பவர்தான் இந்தக் கொள்ளைக்கு திட்டமிட்டிருக்கிறார். சிவா கொடுத்த தகவலின்படி குற்ற வழக்கில் தொடர்புடைய பூமிநாதன் என்பவர்தான் இந்தச்சம்பவத்துக்கு மூளையாக இருந்திருக்கிறார். திருவொற்றியூரில் உள்ள சலூன் கடையில்தான் திருடுவது குறித்து திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவர், முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரின் அண்ணன் மகன் என்ற தகவல் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

போலீஸ் போல நடித்த கொள்ளைக் கும்பல், அதற்கேற்ப காவல்துறையில் பயன்படுத்தும் வாகனத்தையே பயன்படுத்தியிருக்கின்றனர். சினிமாவைப் போல சென்னையில் பட்டப்பகலில்நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-police-team-in-robbery-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக