Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`சித்ரா திருமணம் தொடர்பாக சில மிரட்டல்கள்?!’ - சிசிடிவி வீடியோவுடன் புகாரளித்த ஹேமந்த் தந்தை

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி நட்சத்திர விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து காவல்துறையும், ஆர்.டி.ஓ-வும் விசாரணை மேற்கொண்டுவந்தனர். டிசம்பர் 9-ம் தேதி முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை சித்ராவின் கணவர் ஹேமந்த்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்தநிலையில், டிசம்பர் 16-ம் தேதி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஹேமந்த் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சித்ரா - ஹேமந்த்

இந்தநிலையில் சென்னை அமைந்தகரை, அய்யாவு காலணி, விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த ரவிசந்திரன் (ஹேமந்த்தின் தந்தை), சென்னை காவலர் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார், அதில். ``நான் மேற்கண்ட முகவரியில் வசித்துவருகிறேன். எனது ஒரே மகன் ஹேமந்த். அவர், சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, சில தனியார் கல்லூரிகளுக்கும் மற்றும் பல இடங்களுக்கும் பிரின்டிங் பொருள்களை சப்ளை செய்யும் தொழில் செய்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ஹேமந்த்தின் நண்பர்கள் மூலம் நடிகை சித்ரா அறிமுகமானார்.

பின்னர் இருவரும் காதலிப்பதாக வீட்டில் கூறினார். அதன் பிறகு இரண்டு வீட்டாரும் முறைப்படி ஜாதகம் பார்த்து, அதில் சில தோஷங்கள் இருந்ததால், சித்ராவின் குடும்பக் கோயிலான நீலாங்கரை முத்துமாரியம்மன் கோயிலில் முறைப்படி பரிகாரங்கள் செய்துவிட்டு திருமண ஏற்பாடுகளைச் செய்தோம். நாங்கள் 35 சவரன் தங்க நகைகளைப் போட்டு ஆடம்பரமாக நிச்சயதார்த்தம் செய்வதென்றும், பெண் வீட்டினர் சித்ராவுக்கு 50 சவரன் மற்றும் என் மகனுக்கு 20 சவரன் போட்டு ஆடம்பரமாகத் திருமணம் செய்வதென்றும் முடிவு செய்தோம். கடந்த 24.8.2020-ல் பிரமாண்டமாக சென்னை திருவேற்காட்டிலுள்ள ஜி.பி.என் மண்டபத்தில் 35 சவரன் நகை போட்டு நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கான புகைப்படங்கள் உள்ளன.

அதன்பின்னர் திருமணத்தையும் மிகவும் பிரமாண்டமாக நடத்த, திருமண மண்டபங்களைத் தேடிக்கொண்டிருந்தோம். சித்ராவின் தாயாருக்கு சித்ராவின் புகழ் நாளுக்கு நாள் அதிகமாகி வந்ததால், அவர் மகளுக்குத் திருமணம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதனால் சித்ரா தன் தாயிடம், `ஏற்கெனவே ஒரு திருமணத்தைக் கெடுத்து விட்டாய்’ என்று சண்டையிட்டு, பின் என்னிடம், `உடனடியாக எங்களுக்குப் பதிவு திருமணம் செய்ததால்தான் என்னுடைய வீட்டார் முழு ஒத்துழைப்பு தருவார்கள்’ என்று கூறினார். அதனால் நான், சித்ராவின் தாயாரிடம் பேசினேன். அவரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க, கடந்த 19.10.2020-ல் சென்னை கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்தோம்.

அதன் பின்னர் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சித்ராவின் தாயார் ஆடம்பரமாகத் திருமணம் செய்யப் பண வசதியில்லை என்று கூறினார். திருமண செலவுக்காக ஐந்து லட்சம் ரூபாய்தான் இருக்கிறது என்றும் தெரிவித்தார். நானும், `அதற்கென்ன... நான் என்னுடைய வீட்டின் மீது லோன் போட்டிருக்கிறேன். பார்த்துக்கொள்ளலாம்' என்று பேசி முடிவெடுத்து, கடந்த 7.12.2020-ல் அம்பத்தூரிலுள்ள திருமண மண்டபத்தை இரு வீட்டினரும் பார்த்து 10.2.2021-ம் தேதிக்கு 5,000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்து ரசீதும் பெற்றோம். சித்ராவின் குடும்பத்தாரும் சந்தோஷமாக எங்கள் வீட்டுக்கு வந்து உணவு அருந்திவிட்டுச் சென்றனர். அதற்கான சிசிடிவி. பதிவுகள், ரசீதுகள் உள்ளன.

மண்டபம் முன்பதிவு செய்த ரசீது

`குடும்பத்துக்காக உழைத்த என்னுடைய கல்யாணச் செலவுக்குப் பணம் இல்லை என்று அம்மா கூறுவது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது’ என்றும், `அம்மா, அப்பா 60-வது திருமணத்தை என் செலவில் சிறப்பாகச் செலவு செய்து நடத்தினேன்’ என்றும் வருத்தத்துடன் என்னிடம் சித்ரா தெரிவித்தார். `திருமணச் செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இந்த வீட்டில் நான் வந்து வாழ்வதைப் பெருமையாக நினைக்கிறேன்’ என்றும் சித்ரா கூறினார். அப்போது நான் சித்ராவிடம், `சரி விடும்மா பார்த்துக கொள்ளலாம்’ என்று சமாதானப்படுத்தினேன்.

அதன் பிறகு இரண்டு குடும்பங்களும் சந்தோஷமாகத் திருமண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில் 9.12.2020-ன் அன்று அதிகாலை 2:58 மணிக்கு என் தொலைபேசிக்குத் தொடர்பு கொண்ட என் மகன், சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினார். உடனே நான் சித்ராவின் தாயாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தேன். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு குடும்பத்தினரும் துக்கத்தை சகஜமாகப் பரிமாறிக்கொண்டோம். அதன் பின்னர் என் மகனை நசரத்பேட்டை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அதற்குப் பின் சித்ராவின் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்ற சித்ராவின் தாயார், என் மகன் மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார் என்று தெரியவந்தது.

Also Read: போன் ஆடியோவால் கைதான ஹேமந்த் - நடிகை சித்ரா தற்கொலைக்கு என்ன காரணம்?

அதைத் தொடர்ந்து என் மகனை 9.12.2020 முதல் 14.12.2020 வரை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் தினமும் காலை 8:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை விசாரணை செய்துகொண்டிருந்தார்கள். இதற்கிடையில் என்னையும், என் மனைவியையும் விசாரணை செய்தார்கள். அவ்வாறு ஆறு நாள்கள் விசாரணை சரியான முறையில் சென்றுகொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் சித்ரா என்பவர் சின்னத்திரையில் பிரபலமான நடிகை என்பதால், அவருடன் தொடர்பில் உள்ளவர்களையும் விசாரணை செய்துவருவதாகக் கூறினார்கள்.

நானும் விசாரணையில் உண்மையான குற்றவாளி மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் வெளிவரும் என்று நம்பி இருந்த தறுவாயில், எனது மகனைக் கடந்த 14.12.2020 அன்று இரவு சுமார் 9:30 மணியளவில் அவசர அவசரமாக, `கைதுசெய்கிறோம்’ என்று கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துவிட்டு, இரவு 11:30 மணிக்கு பூந்தமல்லி நீதித்துறையில் ஆஜர்படுத்தி, நள்ளிரவில் பொன்னேரி சப்ஜெயிலில் அடைத்தனர். அதன் பின்னர்தான் தெரியவந்தது ஏதோ திருமணம் முடிந்து எந்த விதமான பணியும் செய்யாத குடும்பப் பெண் இறந்த மாதிரியும், கணவரின் சித்ரவதை போன்றும் வழக்கு திசைதிருப்பி விசாரிக்கப்பட்டு வந்திருக்கிறது என்று.

சித்ரா நிச்சயதார்த்த அழைப்பிதழ்

சித்ரா என்பவர் தற்போது டி.ஆர்.பி. ரேட்டிங்கில் சின்னத்திரை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான நடிகை என்பதும், அவர் நடிப்பு மட்டுமன்றி விளம்பரம், கடை, பெரிய மால்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும், ஒரு சில சினிமாவில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவராகவும் உள்ளார். அதைத் தெரிந்துதான் நாங்கள் சம்மதம் தெரிவித்தோம். திரையில் நடிக்கிறார் என்பதைத் தெரிந்துதான் திருமணத்துக்கு நானும் என் மகனும் சம்மதம் தெரிவித்தோம். ஆகையால் அதனடிப்படையில் எவ்விதச் சண்டையும் வந்தது இல்லை.

சித்ராவின் தொழில் விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம். அவர் கடந்த ஆண்டு சென்னை திருவான்மியூரில் சுமார் 1.50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதாகவும், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடி கார் வாங்கியதாகவும் அதற்கான முதலீடுகளை அவருக்குத் தெரிந்த நபர்கள் உதவியதாகவும் தெரியவந்தது. மீதமுள்ள தொகையை மாதத் தவணையாக அடைத்தும் வந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவருக்குப் பல பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எல்லாம் தெரியும் என்பதாலேயே திருமணத்தை மிக பிரமாண்டமாக நடத்த சித்ரா முடிவு செய்தார் என்பதும் தெரியும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மண்டபம் முன்பதிவின் போது சித்ரா மற்றும் குடும்பத்தினர்.

தொடந்து அந்த மனுவில், சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு விஷயங்கள் தனக்குத் தெரியவந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்குத் திருமணம் தொடர்பாக சில மிரட்டல்கள் இருந்ததாகவும் தெரியவந்ததாக கூறும் ரவிசந்திரன், ``இந்தச் சூழலில், `சித்ரா கடந்த மாதம் என்னிடம் சில கடன்களை உடனடியாக அடைத்துவிட்டு சுதந்திரமாக இருக்க வேண்டும்’ என்று கூறியது நினைவுக்கு வருகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``திருமணம் நடந்தால் அவரின் பிரபலம் குறையத் தொடங்கிவிடும் என்பதால், ஒரு சில நபர்கள் மிரட்டி வந்திருக்கலாம் என்று நான் சந்தேகப்படுகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு சில சமூக வலைதளங்களில் சித்ரா தங்கியிருந்த Pleasant Stay ஹோட்டலிலுள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகள் அழிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஆகையால், அது சம்பந்தமாகவும் எனக்குச் சந்தேகம் வந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார் ரவிசந்திரன்.

மேலும், `சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் அனைத்தையும் உண்மைக்குப் புறம்பானவை என்று விட்டுவிட முடியாது. எனக்கு ஏற்படும் சந்தேகங்களையும் என்னுடைய கருத்துகளையும் உங்களிடம் புகாராகக் கொடுக்கிறேன்" என்று ஹேமந்த்தின் தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நகை வாங்கியதற்கான ரசீது

மேலும், சித்ரா மரணத்துக்குச் சில தினங்களுக்கு முன்னர் திருமண வரவேற்புக்குக் குடும்பத்தோடு திருமண மண்டபம் பார்க்கச் சென்ற சிசிடிவி வீடியோவையும் ஆதாரமாகக் கொடுத்திருக்கிறார். அந்தக் காணொலியில் அனைவரும் மிகச் சகஜமாக இருப்பதையும் குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, 35 சவரன் நகை வாங்கியதற்கான ரசீது, பதிவு திருமணத்துக்கான ரசீது என்று சில ஆவணங்களையும் இணைத்துள்ளார்.

சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில், ஹேமந்த் தந்தை சில ஆதாரங்களை வழங்கியிருப்பதால், இந்த வழக்கு விசாரணை மேலும் விரிவடையும் என்று கூறப்படுகிறது.



source https://www.vikatan.com/news/crime/mystery-continues-in-chitras-death-complaint-filed-by-hemants-father-with-video

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக