Ad

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

வெளியேறிய `அன்பு'... `சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ' பாலாஜி! பிக்பாஸ் - நாள் 77

பிக்பாஸ் வீட்டிலிருந்து ‘அன்பு’ வெளியேறி விட்டது. இது ஒரு சுவாரஸ்யமான டிவிஸ்ட். அர்ச்சனாவை பெரும்பாலான போட்டியாளர்கள் ‘கோழி’ என்று பாசத்துடன் கூப்பிட்ட காரணத்தால் மக்கள் அந்தக் கோழியை ஆசையாக பிரியாணி போட்டு விட்டார்கள் போல. ஆஜீத், சோம், ஷிவானி போன்ற சுமாரான போட்டியாளர்கள் தொடர்ந்து நீடிப்பதும் அர்ச்சனா போன்ற ஆக்டிவ்வான போட்டியாளர்கள் வெளியேறுவதும் மர்மமான போக்காகவே தெரிகிறது.

ஆனால் இதற்கு இடையில் ஒரு நல்ல விஷயத்தையும் பார்க்கிறேன். ஒருவர் திறமையான போட்டியாளர் என்பதை விடவும் அவர் பாரபட்சமில்லாமல் இருக்கிறாரா, நேர்மையாக விளையாடுகிறாரா என்பதைத்தான் மக்கள் முதலில் கவனிக்கிறார்கள். சமூகத்திடம் இருந்து தன்னிச்சையாக வெளிப்படும் இந்த ஆதாரமான அறவுணர்வு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

பாலாஜியும் ஒரு க்ரூப்தான். ஆனால் ‘அன்பு’ அதை விடவும் பெரிய க்ரூப் என்பதால் அதிலிருந்து ஒவ்வொருவரையாக மக்கள் காலி செய்கிறார்கள் போல. மக்களின் வாக்கு உண்மையாகவே பரிசிலீக்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டால் கமல் சொன்னதைப் போல போட்டியாளர்கள் ஆடும் ‘நம்பர் கேமை’ விடவும் மக்கள் ஆடும் ‘நம்பர் கேம்’ சுவாரஸ்யமாக இருக்கிறது.

பிக்பாஸ் - நாள் 77

‘சங்கம் முக்கியமில்ல... சோறுதான் முக்கியம். பசிக்குமில்ல’ என்று ஒரு சிறுவன் வெள்ளந்தியாக கதறிய வீடியோ ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வைரலாக சுற்றிக் கொண்டிருந்தது. எனக்கென்னமோ அந்தப் பையன்தான் வளர்ந்து பாலாஜியாக போட்டிக்குள் வந்திருக்கிறார் போலிருக்கிறது. "அர்ச்சனா போயிட்டாங்க. சரி. பாவம்தான். ஆனா நாம இனிமே சோத்துக்கு என்ன பண்றது? நாமளும்தான் பாவம்ல" என்று பாலாஜி பேசிக் கொண்டிருந்தது அநியாயத்திற்கு ரொம்ப ப்ராடிக்கல். சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

பாலாஜி இப்படி ஒருபக்கம் அநியாயக் குறும்புகள் செய்து கொண்டிருந்தால் என்றால் இன்னொரு பக்கம், ‘அந்த வானத்தைப் போல மனம் படைச்ச நல்லவரே’ என்று அர்ச்சனா குறித்து ரியோ கேங் அனத்திக் கொண்டிருந்தது எரிச்சலான காட்சி.

இதுவொரு போட்டி. எந்தவொரு போட்டியாளரும் வெளியேறுவது தவிர்க்கவே முடியாதது. எழுபது நாள் இணைந்து இருந்த ஒரு பிரியமான நபரை விட்டுப் பிரிவது என்பது சோகத்தைத் தரக்கூடியதுதான். ஆனால், ‘அய்யோ... அவர் போயிட்டாரே... நாங்க இனி என்ன பண்ணுவோம்’ என்று பால்வாடி பிள்ளைகள் போல் ரியோவும் சோமுவும் இணைந்து கலங்கியது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ஒருவரைச் சார்ந்து வாழ்வது என்பதே முதலில் முறையானதல்ல. அதிலும் ஒரு விளையாட்டுப் போட்டியில் இன்னொருவரைச் சார்ந்திருப்பது ஆரோக்கியமான மனநிலையே கிடையாது.

ஓகே... 77-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.

‘International human solidarity day’ என்று இன்றைய தினத்தை நினைவுகூர்ந்தார் கமல். மனித குலம் பகிர்ந்துண்டு வாழ வேண்டியதின் அவசியத்தை திருவள்ளுவர், பாரதி, கண்ணதாசன் போன்றோரின் சொற்களைக் கொண்டு வழிமொழிந்தார்.

‘காலர் ஆஃப் தி வீக்கில் வந்தவர் மதுரை அருண். “சோம் கிட்ட கேள்வி கேட்கறதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒரு கேள்வி சார்... இத்தனை சாதிச்ச நீங்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள்ள ஏன் வந்தீங்க?” என்பது அவர் கமலிடம் கேட்ட கேள்வி.

பிக்பாஸ் - நாள் 77

‘இருமலுக்கு விக்ஸ் என்பதை சுற்றி சுற்றி எழுதும் மருத்துவர்’ போல இதற்கு நீண்ட பொழிப்புரையை வழங்கினார் கமல். ‘இதுல நிறைய மைலேஜ் கிடைக்குது’ என்பதே அதன் சுருக்கம். "நடிகன் என்பதைத் தாண்டி ‘நான் நானாக இருப்பதை’ கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் வாய்ப்பு. சின்னப்பிள்ளைங்க கூட ‘பிக்பாஸ்’ன்னு கூப்பிடறாங்க" என்று மகிழ்ந்தார் கமல். இனி, ‘பிக்பாஸூ... யாருன்னு கேட்டா சின்னக்குழந்தையும் சொல்லும்’ என்று பாட்டை மாற்றிப் பாட வேண்டியதுதான்.

போனில் அழைத்தவர் சோமிடம் கேள்வி கேட்க வந்தார். "நல்லாத்தான் விளையாடறீங்க. ஆனா உங்க தனித்துவம் தெரியலையே" என்று அவர் கேட்டது முக்கியமான அப்சர்வேஷன். அந்த அளவிற்கு சோம் அர்ச்சனாவின் நிழலில் கரைந்துவிட்டார். ஆனால் இதை ஏற்காத சோம், "நான் சரியாத்தான் விளையாடறேன் பிரதர்... நீங்க சரியாப் பார்க்கலை" என்பது போல் விட்டேற்றியாக பதில் சொன்னது நெருடல். ஒரு பார்வையாளனின் நோக்கில் அந்தக் கேள்வியில் உள்ள கனத்தை சோம் யூகித்திருக்க வேண்டும்.

"தனித்துவம்-ன்னு சொன்னவுடன்தான் ஞாபகத்திற்கு வருது. ஆஜீத்தை டெஸ்ட் பண்ணிப் பார்த்ததில் ‘நாடி இருப்பது’ தெரியவந்தது" என்று கமல் சொல்லியது ‘சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது’ என்கிற மாதிரியே இருந்தது. "பாலாஜி திடீர்னு வாலைப் பிடுங்கினதுல கோபம் வந்தது. நானும் ‘கோல்மால்’ கேம் ஆடலாம்னு ஒரு கணம் யோசிச்சு அப்பறம் அதுக்கு ஃபீல் பண்ணி அழுதேன்" என்று விளக்கம் தந்தார் ஆஜீத். அம்பி ஒரு கணம் அந்நியனாக மாற முடிவு செய்த குற்றவுணர்ச்சி அவர் முகத்தில் தெரிந்தது.

வாக்குமூல அறையே மூழ்கிப் போகுமளவிற்கு அழுது தீர்த்த ஷிவானியை கமல் இன்று ஆற்றுப்படுத்திய விதம் இருக்கிறதே... அபாரம்! ஒருவர் மனஅழுத்தத்தால் துயருகிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற மருந்தை அற்புதமாக தந்துவிட்டார் கமல். ஷிவானி உண்மையிலேயே இதற்கு மனம் மகிழ்ந்து போனார். பிறகு ஷிவானி காப்பாற்றப்பட்ட செய்தியை கமல் முதலில் சொன்ன போது... "அழுதே சாதிச்சிட்ட போல" என்று பாலாஜி கிண்டல் செய்தவுடன், "அப்படியல்ல. அது அவரின் தனித்திறமைக்கானது” என்று கமல் தெளிவுப்படுத்தினார். (அது என்ன திறமை?!).

பிக்பாஸ் - நாள் 77

"நாம் ரொம்பவும் நம்புற ஒருத்தர் கிட்ட சொல்ற மாதிரி பிக்பாஸ் கிட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதுட்டேன். இப்ப நான் ஹாப்பி அண்ணாச்சி" என்று கமலுக்கு நன்றி கூறினார் ஷிவானி. தன் பெயரை கமல் சொல்லவில்லை என்று ஷிவானிக்கு இருந்த குறையைப் போக்குவதற்காக ‘மைக் டெஸ்டிங் 1 2 3’ பாணியில் ஷிவானியின் பெயரை கமல் பல முறை சொல்லி குதூகலப்படுத்தியது ஒரு நல்ல குறும்பு.

ஓர் இடைவேளைக்குப் பின்னால் திரும்பி வந்த கமல் தனது முட்டையை டைனோசர் போல் பாதுகாத்த அர்ச்சனாவை மிகவும் பாராட்டினார். (‘கமல் நிச்சயம் பாராட்டுவார்’ என்று இதைப் பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன்). ‘ஆனால் அதில் ஒரு ஸ்ருதி பேதம் நிகழ்ந்ததே’ என்று கமல் குறிப்பிட்டது அர்ச்சனாவிற்கும் சோமிற்கும் இடையில் நிகழ்ந்த சண்டையைப் பற்றி. “அதுல என் ஃபோட்டோ இருந்தது சார்" என்று சின்னக்குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார் அர்ச்சனா. "போட்டோவெல்லாம் முன்ன எரிச்சீங்க.. அது என்ன கதை?” என்று மடக்கினார் கமல். (இது பற்றியும் முன்னர் எழுதியிருந்தேன்... ஹிஹி).

‘புன்னகை மன்னி’ என்று புதுப்பட்டத்தை வழங்கி ரம்யாவை கமல் அழைத்த போது அம்மணிக்கு பெருமை தாங்கவில்லை. "ரம்யாவோட கேப்டன்சி எப்படியிருந்தது?” என்று மற்றவர்களிடம் கேட்ட போதும் ரம்யாவிற்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. "ஓகேதான் சார்... ஆனா..." என்று சில குறைகளை மக்கள் சொன்னார்கள்.

"கிச்சன் கேப்டனான என் கிட்ட கேட்காம முடிவு எடுத்தாங்க" என்று ‘வித்தியாசமாக’ குற்றம் சாட்டினார் கேபி. ரியோவை முன்பு இதே போல் ரம்யா குறை சொன்னதால் இப்போது கேபி பழிவாங்குகிறாராம். அர்ச்சனா டீமிடம் தன் விசுவாசத்தை சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் காட்டுகிறார் கேபி.

ஆனால் ரம்யா மிக ஜாக்கிரதையாக ஒரு மினிமீட்டிங் ஏற்பாடு செய்து அனைவரின் கருத்தையும் கேட்டு விட்டுத்தான் அந்த முடிவை பொதுவில் அறிவித்தார். எனவே கேபியின் குற்றச்சாட்டு போலித்தனமானது என்பது நிருபணமானது. இந்த விஷயத்தை வழிமொழிந்த ஆரி, “வாலண்டியர்ஸ் யாருன்னு முடிவு பண்ணிட்டுதான் ரம்யா வந்தாங்க. அதுதான் எனக்கு குறையா பட்டது. என்னை ஒரு முறை திட்டிட்டு அப்புறம் சாரி சொன்னாங்க" என்று தன் பிரச்சினையைச் சொன்னார். "சாரி சொல்லிட்டாங்கள்ல... அப்புறம் என்ன? அந்த கேஸ் செல்லாது” என்று ரம்யாவிற்கு சாதகமாக தீர்ப்பு சொன்னார் கமல்.

பிக்பாஸ் - நாள் 77

ரம்யாவை பாராட்டிய கையோடு கூடவே அவருக்கு ஒரு ஆப்பையும் வைத்தார் கமல். “ஏம்மா... நீங்கதானே தலைவர்... உங்களுக்கே விதிமுறைகள் புரியலைன்னா என்ன அர்த்தம்? மத்தவங்களுக்கு புரிய வைக்க வேண்டிய பொறுப்புல இருந்துக்கிட்டு எப்படி?” என்று கமல் கேட்க, "சார்... வெச்சிக்கிட்டா வஞ்சனை பண்றோம். உண்மையிலேயே புரியலை. ரைட் இண்டிகேட்டர் போட்டு லெஃப்ட்ல கை காண்பிச்சு நேராப் போற மாதிரி… இவியிங்க டிஸ்கஷன்ல ஒண்ணு பேசிட்டு டாஸ்க்ல வேற ஒண்ணா செஞ்சி மாத்திக்கிட்டே இருந்தாங்க...” என்று ரம்யா பரிதாபமாக சொன்னவுடன்... "சரி... ஓகே! ஓகே!" என்று விட்டு விட்டார் கமல்.

ஆரி, ரியோ, ஷிவானி ஆகியோர் ஏற்கெனவே காப்பாற்றப்பட்டதில் மீதமுள்ளவர்கள் நான்கு பேர். அங்கு நான்கு தங்க முட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. அதை ஒவ்வொன்றாக உடைத்துப் பார்த்ததில் ஒன்றில் அனிதாவின் பெயர் இருந்தது. வாயை ‘ஓ’ வடிவத்தில் வைத்துக் கொண்டு அனிதா ஆச்சர்யப்பட்டதை கமல் கிண்டலடித்தார். (வேட்டையாடவே வெறியோட சுத்தறான்!).

மீதமிருந்தது ஒரு முட்டை. "அதை என் பாணில உடைக்கட்டுமா?” என்று ஆசைப்பட்ட பாலாஜியை அனுமதித்தார் கமல். குஷன் சேரில் அமர்வதுபோல் பாலாஜி ஏறி அதில் அமர்ந்தவுடன் ‘பொதேர்’ என்று முட்டை உடைந்தது. உள்ளே ‘சோமு’வின் பெயர் இருக்கும் என்பதை சரியாக யூகித்தார் பாலாஜி. அப்படியே நடந்தது. சோமு காப்பாற்றப்பட்டதற்கு அர்ச்சனா உண்மையிலேயே மகிழ்ச்சியடைந்தது போல்பட்டது.

கமல் இடைவேளையில் சென்றிருந்த போது ‘தான்தான் வெளியேறப் போகிறோம்’ என்பதை அர்ச்சனா எப்படியோ உணர்ந்து விட்டார். அவருடைய உள்ளுணர்வு சொல்லியிருக்க வேண்டும். எவிக்ஷன் போட்டி முடிவுகள் நிகழ்ச்சியில் வருவதற்கு முன்பே இணையத்தில் லீக் ஆகி விடுவதால் இது சார்ந்த சுவாரஸ்யத்தை நாம் இழந்து விடுகிறோம். இல்லையெனில் ‘ஆஜீத்’தான் வெளியேறக்கூடும் என்றே பலர் நம்பியிருப்பார்கள்.
பிக்பாஸ் - நாள் 77
பிக்பாஸ் - நாள் 77
பிக்பாஸ் - நாள் 77

"ஆஜீத் இந்த வாரம் முழிச்சிக்கிட்டதால மக்கள் அவனை விட்டுவைக்கலாம்" என்று அனிதாவும் ரம்யாவும் பேசிக் கொண்டார்கள். ரியோவும் கேபியும் இப்போதே கலங்கத் துவங்கி விட்டார்கள். "இன்னமும் ரிசல்ட்டே வரலை. அப்புறம் என்ன?” என்று எக்ஸாமிற்கு பயப்படாத மாணவன் மாதிரி அசால்ட்டாக சொன்னார் பாலாஜி.

மேடைக்கு திரும்பி வந்த கமல், இந்த வாரம் அறிமுகப்படுத்தியது ‘ஜே ஜே சில குறிப்புகள்’ என்கிற நாவல். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளியான சுந்தர ராமசாமி எழுதியது.

வடிவ சோதனை, உள்ளடக்கம், சொற்சிக்கனம், தத்துவ விசாரணை, நுட்பமான பகடி உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்த நாவல் தமிழ் இலக்கிய உலகில் மிகுந்த பரபரப்பை வெளிவந்த சமயத்தில் ஏற்படுத்தியது. பல விமர்சனங்களை எதிர்கொண்டது. மிகுந்த கவனத்திற்கு உள்ளானது.

ஜே.ஜே: சில குறிப்புகள் | சுந்தர ராமசாமி
நினைவின் நதியில் | ஜெயமோகன்

சுந்தர ராமசாமியையும் தன்னையும் சந்திக்க வைத்து அந்த உரையாடலை வெறுமனே வேடிக்கை பார்த்த கவிஞர் ஞானக்கூத்தனை நினைவுகூர்ந்தார் கமல். சுந்தர ராமசாமி நூலுடன் கூடவே பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய ‘நினைவின் நதியில்’ நூலையும் அறிமுகப்படுத்தினார் கமல்.

சு.ராவை தனது ஆசான்களில் ஒருவராக கருதுபவர் ஜெயமோகன். சு.ரா... இறந்த செய்தியை அறிந்தவுடன் அவருடன் தான் பழகிய அனுபவங்கள், மகிழ்ச்சி, முரண், விவாதம் என்று பல ஆழமான விஷயங்களை அந்த நூலில் ஜெயமோகன் கொட்டி தீர்த்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றே நாளில் ஒரு நினைவுப்பதிவு நூலை எழுதி முடிப்பது என்பது ஒரு சாதனை. ஜெயமோகன் இப்படி பல சாதனைகளை அநாயசமாக நிகழ்த்தியவர். ‘வெண்முரசு’ ஒரு பிரமாண்ட உதாரணம்.

திகில் படம் பார்ப்பது போல் இருக்கை நுனியில் நகர்ந்து வந்த ஆஜீத்தை மெலிதாக கிண்டலடித்த கமல், "யார் காப்பாற்றப்படுவார்?" என்று போட்டியாளர்களிடம் கேட்டதற்கு, பாலாஜியும் ஆரியும் ‘ஆஜீத்’ என்று அழுத்தம் திருத்தமாக தங்களின் யூகத்தைச் சொன்னார்கள். எனவே அதிக சஸ்பென்ஸ் வைக்காமல் அதை உடைத்தார் கமல். ‘எவிக்ஷன் பெயராக ‘அர்ச்சனா’ என்று எழுதியிருந்தது.

பிக்பாஸ் - நாள் 77

‘நான்தான் போவேன்’ என்று அர்ச்சனா ஏற்கெனவே யூகித்திருந்தாலும் அது வெளிப்பட்ட போது அவர் ஏமாற்றம் அடைந்தது போல்தான் தெரிந்தது. எனவே அதை மறைத்துக் கொள்வதற்காக மிகையான உற்சாகத்தில் இருப்பது போல் நடித்தாரா? "நல்லா விளையாடினீங்க. கடுமையான போட்டியாளரா இருந்தீங்க" என்று மனம்திறந்து பாலாஜி பாராட்டியதை ஏற்றுக் கொண்டார் அர்ச்சனா. திருவிழாவில் தொலைந்து போன பிள்ளைகள் மாதிரி சோம், ரியோ, கேபி ஆகிய மூவரும் பரிதாபமாக அமர்ந்திருக்க, "தே... ச்சீ... எழுந்திருங்க. சந்தோஷமா வழியனுப்புங்க" என்று அவர்களை அதட்டி எழ வைத்தார் அர்ச்சனா.

பிக்பாஸ் - நாள் 77

சோமுவிற்கும் அர்ச்சனாவிற்கும் இடையே உள்ள பாசமும் அன்பும் உண்மையானதுதான் போல. ‘நிபந்தனையற்ற அன்பை வழங்குகிறேன்’ என்பதை சோமிடம் அடிக்கடி சொன்னார் அர்ச்சனா. போலவே வெளியில் சொல்லும் போது ‘சோம் ஐ லவ் யூ’ என்று கத்தியதிலும் போலித்தனம் தெரியவில்லை. ஆனால் ரியோவிடம் ‘நீ கப் அடிச்சிட்டு வரணும்’ என்று ரகசியமாக காதில் வாழ்த்தினார். (எனில், ‘சோம் லாயக்கில்லை’ என்று அவருக்கே தெரிந்துவிட்டது போல).

“டேய் பசங்களா... என் பொருட்களை பேக் பண்ணி அனுப்பிச்சிடறீங்களா?” என்று அந்த சமயத்திலும் கெத்து காட்டினார் அர்ச்சனா. அவருடைய அலட்டலான ‘ஆங்க்கர்’ குரல் மீண்டும் வந்துவிட்டதைப் போல் இருந்தது. முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்த தனது டீமை ‘No tears’ என்று எச்சரித்தார். உண்டியலை உடைத்த பிறகு அதை அவரே சுத்தம் செய்தது நல்ல முன்னுதாரணம்.

அர்ச்சனா மீடியா துறையில் நீண்ட அனுபவம் உள்ளவர். எனில் மக்களின் ‘பல்ஸ்’ என்ன என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் அந்தத் திறமையை பிக்பாஸ் வீட்டில் தவற விட்டது ஏன் என்பது புரியவில்லை. ‘அன்பே சிவம்’ என்பதில் அவருக்கு உண்மையாகவே நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அந்த அன்பை அவர் பிக்பாஸ் வீட்டில் பாரபட்சமின்றி வழங்கினாரா என்பதுதான் முக்கிய கேள்வி. தனது அணிக்காக அவர் பலமுறை பாரபட்சத்துடன் நடந்து கொண்டதாலும், பலவற்றிற்கும் ‘அன்பு.. அன்பு’ என்று மிகையாக முழங்கியதாலும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார். இதை அவர் யூகித்திருக்க வேண்டும்.

பிக்பாஸ் - நாள் 77
‘உங்களை மாதிரி துணிச்சலான பெண்ணை நான் பார்த்ததேயில்லைக்கா’ என்று அர்ச்சனா போகும் போது ஐஸ் வைத்தார் அனிதா. ‘Virtual hug’ஐ பிக்பாஸ் வழங்கியது சிறப்பு.

அர்ச்சனா சென்ற பிறகு அதிகம் உடைந்து போனது சோம்தான். "அவங்க என்ன தப்பு பண்ணினாங்க? அர்ச்சனா ஏன் போகணும்?" என்றெல்லாம் சோம் புலம்பியது அபத்தம். தங்கள் அணி செய்யும் தவறுகளை அவர்களே உணரவில்லையா, உணராதது போல் பாவனை செய்கிறார்களா என்று தெரியவில்லை.

பிக்பாஸ் - நாள் 77

வெளியேறுவதன் ஏமாற்றத்தை தனது மிகையாக உற்சாகத்தால் மறைத்துக் கொண்ட அர்ச்சனாவின் திறமையை ‘உடனே bounce back’ ஆயிடறாங்க’ என்று பாராட்டினார் ஆரி. ‘அவங்களுக்காக விளையாடி இருக்கலாம்’ என்று அனிதா இந்தச் சமயத்தில் சொன்னது திருவாசகம். ரியோ, சோமை பால்வாடி பிள்ளைகள் போல் சீராட்டிக் கொண்டிருக்காமல் தன் சுய விளையாட்டை அர்ச்சனா ஆடியிருந்தால் நிராகரிக்க முடியாத போட்டியாளராக நீடித்திருப்பார்.

"தான் நேசிக்கறவங்களுக்காக பெண்கள் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வாங்க" என்று ஆரி சொன்னது அருமையான உளவியல் கருத்து. "அன்பெல்லாம் ஓகேதான். நல்ல விஷயம். ஆனா பிக்பாஸிற்கு செட் ஆகாது" என்று இன்னொரு முத்தை உதிர்த்தார் அனிதா. (சூப்பர்மா!).

‘அர்ச்சனா போனது வருத்தம்தான். இல்லேங்கலை.. ஆனா சோத்துக்கு இப்ப என்ன பண்றது?” என்று முக்கியமான விஷயத்திற்கு வந்தார் பாலாஜி. போலித்தனம் மிகுந்த அந்தச் சூழலில் வெளிப்படையான இந்தக் கேள்வி சிரிக்கவும் மகிழ்ச்சியடையவும் வைத்தது. அர்ச்சனாவைப் போலவே பாலாஜியும் ‘குரூப்பிஸ’ கொள்கையை பின்பற்றுபவர்தான். ஆனால் மினி குரூப். ஆனால் அர்ச்சனா அளவிற்கு மக்கள் ஏன் பாலாஜியை வெறுக்கவில்லை என்றால் பாலாஜி செய்யும் குறும்புகளும் அவரிடம் உள்ள வெளிப்படைத்தன்மையும்தான் பிரதான காரணங்கள் என்று தோன்றுகிறது.

பிக்பாஸ் - நாள் 77

மேடைக்கு வந்த அர்ச்சனாவை வரவேற்றார் கமல். “நான் உள்ள வந்தப்ப உங்களைச் சந்திக்க முடியாமப் போச்சு. இப்ப சந்திச்சதுல சந்தோஷம் சார்" என்று மகிழ்ந்தார் அர்ச்சனா. "பதினோறாவது நாள்ல உள்ளே வந்தீங்க. உங்க மேல நிறைய எதிர்பார்ப்பு இருந்தது" என்று கமல் தனது ஆதங்கத்தை தெரிவிக்க, "நாற்பது நாளைக்கு மேல தாங்க மாட்டேன்னு நெனச்சேன். மத்த ஷோல எல்லாம் ஆங்கரா இருந்திருக்கேன். போட்டியாளரா இருந்தது இந்த ஷோல மட்டும்தான். "அன்பு–ன்னா அர்ச்சனா’ன்னு அவங்ககிட்டயே பேர் வாங்கிட்டேன். எனக்கு அது போதும்" என்று நெகிழ்ந்தார் அர்ச்சனா.

“ஆனா அந்த அன்பை நீங்க உத்தியா பயன்படுத்தினீங்கன்னு நெனக்கறாங்களே" என்று ஊசியை வலிக்காமல் கமல் குத்திய போது, "சொல்லிட்டுப் போகட்டும் சார். ‘அன்பே கடவுள்’ன்னு சொன்னதே நீங்கதானே சார்” என்று அந்த ஊசியை சாமர்த்தியமாக திருப்பிவிட்டார் அர்ச்சனா. ‘Overshadowing’ என்கிற குற்றச்சாட்டிற்கு ‘தவறாக வெளிச்சம் காட்டப்பட்டிருக்கலாம்’ என்று அர்ச்சனா சொன்னதும் சாதுர்யமான பதில்.

பிக்பாஸ் - நாள் 77

அகம் டிவி வழியாக உள்ளே வந்த அர்ச்சனா அனைவரையும் வாழ்த்தி விட்டு, "என்னைப் பார்த்து வெட்கப்படறவங்க ரம்யா மட்டும்தான். ஆம்பளைங்களை பார்த்துக் கூட வெட்கப்படறதில்லை" என்று ஜாலியாக கலாய்த்தார்.

பிறகு தனது கேப்டன் பொறுப்பை பாலாஜிக்கு வழங்கினார் அர்ச்சனா. உண்மையில் போட்டியில் இரண்டாவதாக வந்த ரம்யாவிற்குத்தான் அது வழங்கப்பட்டிருக்க வேண்டும். அர்ச்சனாவின் விருப்பத்திற்கு அது விடப்பட்டது. பாலாஜி கேப்டன் ஆகாமல் மிக ஏங்கிப் போயிருந்ததால் ‘சரி... வெச்சுக்க போ’ என்று அர்ச்சனா கொடுத்துவிட்டார். பாவம் பாலாஜி... தர்மம் போட்டது போல் இப்படியொரு கேப்டன்ஷிப் தேவைதானா?

அர்ச்சனாவின் பயண வீடியோவைப் பார்க்க உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை முகபாவங்கள்? குறிப்பாக வீட்டிற்குள் வந்த முதல் நாளில் "அனிதா ஏன் என்னை குறுகுறுன்னு பார்க்கறா?” என்று அர்ச்சனா செய்து காட்டிய எக்ஸ்பிரஷன் வீடியோவில் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். கடைசி தருணத்தில் அது வந்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

பிக்பாஸ் - நாள் 77

"கோவிட் காலத்துல அன்பை ஸ்பிரே மாதிரி அடிச்சிட்டீங்க. ஆல் தி பெஸ்ட்" என்று அர்ச்சனாவை வழியனுப்பி வைத்துவிட்டு தானும் விடைபெற்றுக் கொண்டார் கமல். நிகழ்ச்சி இத்துடன் முடிந்துவிடும் என்று நாம் ஆறுதல் அடைந்தால் பிறகு ஆரம்பித்தது அந்த சோக டிராமா.

ரியோ, சோமு, கேபி ஆகிய மூவரும் இணைந்து அழுதார்கள். கலங்கினார்கள். ‘இனிமே என்ன செய்யப் போறோம்’ என்று அனத்தினார்கள். எதிரணியைத் தூற்றினார்கள். "நாம இத்தனை நல்லவயிங்களா இருக்கோம். அவங்க ஏம்ப்பா இப்படி இருக்காங்க" என்று அநாவசியமாக புலம்பினார்கள்.

பிக்பாஸ் - நாள் 77
இந்த விளையாட்டு அடல்ட்டுக்களான போட்டி என்று நினைத்திருந்தேன். ஆனால் கூட்டத்தில் அம்மாவைத் தொலைத்து விட்டு அழும் பிள்ளைகள் போல் இந்த டீம் புலம்புவதைப் பார்த்தால் இமான் அண்ணாச்சி நடத்தும் ‘குட்டி சுட்டீஸ்’ நிகழ்ச்சியோ என்று தோன்றி விட்டது. அந்த அளவிற்கு ‘அன்பு’ கேங்கின் புலம்பல் நீண்டது. (இனிமேல் இந்த குழுவை ‘அன்பு கேங்’ என்று அழைக்க முடியுமா? அன்புதான் வெளியே சென்று விட்டதே?!).

இவர்கள் இந்தப் பக்கம் இப்படி நொந்து போய் புலம்பிக் கொண்டிருக்க பாலாஜியின் தலைமையில் ஷிவானியும் ஆஜீத்தும் தலையணையால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டிருந்தது ஜாலியான காட்சி. இதுவே ரியோ டீமை கொலைவெறி ஏற்றியிருக்கும்.

குறும்புக்கார மாணவனிடம் வகுப்பறையை ஒப்படைத்தது போல கேப்டன் பொறுப்பை ஜாலியாக ஹாண்டில் செய்தார் பாலாஜி. "இனிமே மீட்டிங்கை பெட்ரூம்லயே வெச்சுக்கலாம். சோறுதான் நமக்கு முக்கியம். அதற்குண்டான வேலையை முதல்ல பாருங்க. வீடு சுத்தமா இருக்கறதெல்லாம் ரெண்டாம் பட்சம்தான். வயிறுதான் முக்கியம்" என்று தீனிப்பண்டாரமாக பிரசங்கம் செய்தார். வைஸ் கேப்டனாக சோமை நியமித்த பாலாஜி, எந்தப் பிரச்னையென்றாலும் அவர் கேட்டு இவரிடம் சொல்ல வேண்டுமாம். இவர் கேட்டுவிட்டு காற்றில் விட்டுவிடுவாராம்!

பிக்பாஸ் - நாள் 77

ஆக... சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ அமாவாசை கணக்காக, அதிர்ஷ்டத்தில் கேப்டன் ஆகியிருக்கும் பாலாஜியின் கேப்டன்ஷிப் எப்படியிருக்கப் போகிறது என்பதை இனிதான் பார்க்க வேண்டும். ஆரம்பமே அதிரிபுதிரியாக இருக்கிறது. இன்னமும் என்னென்ன சேஷ்டைகளை பார்க்கப் போகிறோமோ?!

‘இவிய்ங்க கிட்ட எப்படிடா நாம் குப்பை கொட்டப் போறோம்’ என்று ரியோ டீம் சோகத்துடன் அனத்திக் கொண்டிருக்க சோம் அம்போவென்று கார்டன் ஏரியாவில் அமர்ந்திருக்கும் சோகக்காட்சியுடன் எபிஸோட் நிறைவடைந்தது.

பிக்பாஸ் - நாள் 77

ஆக... அர்ச்சனாவின் ஆதாரமான பலத்தில்தான் ‘அன்பு’ கேங் இயங்கிக் கொண்டிருந்தது என்கிற உண்மையை தங்களின் சோகத்தின் வழியாக ரியோ டீம் தானாகவே இப்போது ஒப்புக் கொள்கிறது. இந்த லட்சணத்தில் ‘குரூப்பிஸம்’ இல்லை என்று வேறு ரியோ சாதித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒருவரைச் சார்ந்து விளையாடுவது ஆரோக்கியமானதல்ல.

தங்க முட்டை போல் அன்பு கேங் சிதறி விட்டது. இனி வரும் நாட்களை இவர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? (பிக்பாஸ் வாய்ஸ் ஓவரில் இந்த வரிகளை வாசித்துக் கொள்ளவும்).


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/archana-evicted-balaji-new-captain-bigg-boss-tamil-season-4-day-77-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக