Ad

திங்கள், 21 டிசம்பர், 2020

`இந்தியாவுடனான மோதல் போக்கு... அதிகரித்த அதிகாரப் போட்டி!’ - கலைக்கப்பட்டது நேபாள நாடாளுமன்றம்

முன்னாள் நேபாள் பிரதமர் புஷ்பா கமல் தஹால் பிரசந்தா உடனான அதிகார மோதல் காரணமாக, நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி ஷர்மா ஒலி நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரைத்தார். `நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது, அரசியலமைப்பிற்கு முரணானது’ என்று சட்ட வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டியதோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு நேபாளத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (Nepal Communist Party - NCP) வெற்றி பெற்று 275 உறுப்பினர்களோடு ஆட்சிக்கு வந்தது. என்.சி.பி. கட்சியின் தலைவர் கே.பி. ஷர்மா ஒலி (K P Sharma Oli ) பிரதமரானார். முன்னாள் பிரதமரான புஷ்ப கமல் தஹால் பிரசந்தா (Pushpa Kamal Dahal Prachanda) என்.சி.பி. கட்சியின் நிர்வாகக் குழு தலைவராக இருந்தார்.

Also Read: இந்தியா - நேபாளம்... கசக்கும் உறவு!

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இந்தியா - நேபாளம் உடனான எல்லைப் பிரச்னை பதற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்தியாவும் நேபாளமும் சுமார் 1,800 கி.மீ-க்கும் அதிகமான எல்லையைப் பகிர்ந்துகொள்கின்றன. அதில், இந்திய பகுதிகளான காலாபாணி, லிம்பியாதுரா, லிபுலேக் ஆகிய பகுதிகள் 1818-ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட சுகாலி என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்களுடையது என உரிமை கோரி வந்த நேபாளம், கடந்த மே மாதம் மானசாரவர் சாலையை இந்தியா அடிக்கல் நாட்டிய பிறகு, இந்திய பகுதிகளை உள்ளடக்கிய புதிய நேபாள அரசியல் வரைபடத்தை வெளியிட்டது.

மேலும் அந்த பகுதிகளை இந்தியா ஆக்கிரமித்திருப்பதாக நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தெரிவித்தார். அதே நேரத்தில் நேபாள பிரதமர் சீனாவுடன் நெருக்கம் காட்டியதோடு, இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டது, இந்தியாவுடனான மோதலுக்கு வழி வகுத்தது.

அதையடுத்து, நேபாளத்தின் புதிய அரசியல் வரைப்படத்திற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அந்த சட்டதிருத்த மசோதாவுக்கு நேபாள நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரதமர் ஒலியின் இந்த செயலை ஆளும் என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழு வன்மையாக கண்டித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ஒலிக்கும், என்.சி.பி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசந்தாவுக்கும், இடையே நேரடியாக மோதல் வெடித்தது.

அதைத்தொடர்ந்து, கே.பி. ஷர்மா ஒலி உடனடியாக பிரதமர் பதவியில் இருந்தும் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலக வேண்டுமென பிரசந்தாவின் ஆதரவாளர்கள் ஷர்மா ஒலிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். ``அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் பிரசந்தா திட்டமிடுகிறார்" என்று பிரதமர் ஒலி குற்றம் சாட்டினார். இருவருக்கும் இடையேயான இந்த மோதல் அதிகாரப் போட்டியை மேலும் வலுவாக்கியது.

இந்நிலையில், நேபாள பிரதமர் ஒலி தலைமையில் நேற்று காலை தலைநகர் காத்மாண்டுவில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. கடந்த எட்டு மாதங்களாக நடைபெற்ற ஆளுங்கட்சியின் அதிகார மோதல்கள் முடிவு பெறாத நிலையில், புஷ்பா கமல் தஹால் பிரசாந்தாவுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் ஒலியின் இல்லத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் ஒலி நேபாள நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்து அதற்கான ஒப்புதலையும் பெற்றார். என்.சி.பி.யின் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையற்ற தீர்மானத்தை தாக்கல் செய்த பின்னர் அதிபர் பித்யா தேவி பந்தாரி (Bidhya Devi Bhandari) நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் அளித்தார்.

இது தொடர்பாக நேபாள அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேபாள அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 30-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம் தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்து ஆளும் என்.சி.பி. கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயன்காஜி ஸ்ரீஸ்தா, “பிரதமர் ஒலியின் முடிவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சர்வாதிகாரப் போக்கை காட்டுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

என்.சி.பி. கட்சி மீதான அதிருப்தியினை பிரதான எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் போராட்டங்கள் மூலம் வீதிகளில் இறங்கி தெரிவித்து வருகிறது. பிரதமர் ஒலி, தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசர சந்திப்பை நடத்தி, சட்டம் ஒழுங்கை பராமரிக்க கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். சட்ட வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும் ஒலியின் இந்த நடவடிக்கையை அரசியலமைப்பிற்கு முரணானது என்று குற்றம் சாட்டியதோடு சபை கலைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது எதிராக பல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, பிரதமருக்கு பெரும்பான்மை இருந்தால், நாடாளுமன்றத்தை கலைக்கப் பரிந்துரை செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்றும் ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர்கள் மாறலாம், ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாது என்றும் சட்ட வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய பகுதிகளை இணைத்து நேபாள பிரதமர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய அரசியல் வரைபடம் ஆளுங்கட்சிக்குள் அதிகார மோதலை ஏற்படுத்திய நிலையில் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/international/nepal-political-pm-kp-oli-recommends-dissolution-of-parliament

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக