Ad

திங்கள், 7 டிசம்பர், 2020

புதிய நாடாளுமன்றக் கட்டம்: `அடிக்கல் நாட்ட அனுமதி; பணிகள் தொடங்கக் கூடாது!’ - உச்ச நீதிமன்றம்

தற்போதைய நாடாளுமன்றத்துக்கு அருகிலேயே முக்கோண வடிவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது குறித்த அறிவிப்பு கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்டது. சுமார் 900 - 1200 எம்.பிக்களுக்கான இருக்கை வசதிகளுடன் கட்டப்பட இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்ட்ரா திட்டத்தின் கீழ் கட்டப்பட இருக்கிறது. நாடு, 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நேரத்தில், அதாவது 2022-ம் ஆகஸ்ட் மாதத்துக்குள் ரூ.971 கோடி மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணிகள் நிறைவுபெறும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

நாடாளுமன்றம்

குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ள லுடியன்ஸ் டெல்லி பகுதிவரை பல்வேறு கட்டடங்களை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் கட்ட மத்திய அரசு முடிவு செய்திருந்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு மிக அருகாமையில் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தைக் கட்டவும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம், புதிய நாடாளுமன்றம் உள்பட 10 கட்டடங்களைக் கட்ட முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. 2024-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தாலும், 6 ஆண்டுகளுக்கு இந்தப் பணிகள் நடைபெறும் என்று தெரிகிறது.

Also Read: நோய்த்தொற்று காலத்திலும் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்!

இந்தநிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டும் மத்திய அரசின் செயல்பாட்டுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணையில், புதிய கட்டுமானங்களோ, பழைய கட்டடங்களை இடிப்பதோ, மரங்களை வெட்டுவதோ கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்

இன்றைய வழக்கு விசாரணையின்போது, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருவதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. இவ்வளவு தீவிரமாக மத்திய அரசு இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய கட்டுமானப் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு வழக்கறிஞர்களைப் பணித்தது.

Also Read: முன்பெல்லாம் நாடாளுமன்றம் எப்படியிருக்கும் தெரியுமா? - ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் #MyVikatan

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் மீது உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை புதிய கட்டுமானப் பணிகளோ, பழைய கட்டடங்களை இடிக்கும் பணியோ நடைபெறாது என்று உறுதியளித்தார். இதையடுத்து, மத்திய அரசு திட்டமிட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவுக்கு அனுமதியளித்த உச்ச நீதிமன்றம், வேறெந்தக் கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என்று உத்தரவிட்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி அடிக்கல் நாட்டுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.



source https://www.vikatan.com/news/general-news/india/sc-allows-foundation-laying-ceremony-for-new-parliament-building-with-conditions

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக