Ad

ஞாயிறு, 6 டிசம்பர், 2020

இலவச மருத்துவம், 83 வயதில் பிஹெச்.டி... அசர வைக்கும் திருச்சி கணபதி டாக்டர்!

நாளிதழில் அன்றாடம் நாம் பல செய்திகளைப் பார்க்கிறோம்; பிரச்னைகளை அறிகிறோம். அதற்கு நம்மால் ஏதேனும் செய்ய முடிந்தாலும் அதை அப்படியே கடந்துவிடத்தான் தோன்றும். ஆனால், திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் கணபதி அப்படியில்லை.

மருத்துவர் கணபதி

சர்வதேச அளவில் 90 லட்சம் பெண்களுக்கு எடுக்கப்பட்ட ஆய்வில் 90,000 பேருக்கு மார்பகப் புற்று நோய் இருப்பதாக ஒரு செய்தியைப் படிக்கிறார் கணபதி. இந்தக் கணக்கு மிக அதிகம்; மிகப்பெரிய ஆபத்து என உணர்கிறார். கணபதியும் மருத்துவர் என்பதால் இந்தப் பிரச்னைக்குத் தன்னால் என்ன செய்ய முடியுமென யோசித்து ஆய்வு செய்யத் தொடங்குகிறார். அந்த ஆய்வை வெற்றிகரமாக முடித்து அதில் முனைவர் பட்டமும் வாங்கிவிட்டார். சொல்ல மறந்துவிட்டேன்; முனைவர் பட்டம் வாங்கிய டாக்டர் கணபதியின் வயது 83.

மதுரை மருத்துவக் கல்லூரியில் 1964-ம் ஆண்டு முதுநிலை பட்டம் பெற்றவர் டாக்டர் கணபதி. திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் சிறப்பு முதன்மை மருத்துவராகவும், மருத்துவப்பணி இணை இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு என்.ஐ.டி துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட சில நிறுவனங்களின் மருத்துவ ஆலோசகராகப் பணியாற்றியவர், தற்போது திருச்சி தில்லை நகரிலுள்ள அவரது வீட்டில் மக்களுக்கு மருத்துவம் பார்த்துவருகிறார்.

மருத்துவர் கணபதி அவரின் மனைவி

தேவைப்படுபவர்களுக்கு இலவச மருத்துவம் பார்த்து வருவதால், அவரது வீட்டில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இவரது செயல்பாடுகளால் 2013-ம் ஆண்டு அப்போதைய ஆளுநர் ரோசய்யாவிடம் `வாழ்நாள் சாதனையாளர் விருது' பெற்றார். ஒரு காலைப்பொழுதில் டாக்டர். கணபதியைச் சந்தித்தோம், ``அதிக நேரம் எடுத்துக்காதீங்கப்பா. ஏன்னா, நோயாளிகள் காத்திருக்காங்க” எனச் சொல்லி பேசத் தொடங்கினார்.

``எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். பையனும் டாக்டர்தான். குடும்பத்துல எந்தப் பிரச்னையும் இல்ல. பணத்தேவையும் பெருசா இல்ல. ரிடையர்டு ஆன பிறகு புத்தகங்கள் வாசிப்பதை வழக்கமா வச்சிருந்தேன். அப்பதான், `ஆண்டுக்கு ஆண்டு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது' என்ற அதிர்ச்சி செய்தியைப் படிச்சேன். `மார்பகப் புற்றுநோய் குறித்து ஏன் ஆய்வு மேற்கொள்ளக் கூடாது'னு எனக்கு யோசனை தோன்றியது'' என்றவர், ஆய்வு குறித்து பேசத் தொடங்கினார்.

``இந்தக் காலகட்டத்தில் மருத்துவத்துறையுடன் பொறியியல் துறையும் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கவலை தரும் விஷயம் என்னவென்றால், இந்தியாவில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு தாமதமாகக் கண்டறியப்படுவதால், நோய் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர், அதாவது 50 சதவிகிதம் பேர் அடுத்த சில நாள்களிலேயே நோயின் தீவிரத்தால் உயிரிழந்துவிடுகின்றனர். அதாவது, தொடக்க நிலையில் மார்பில் வலியற்ற சிறு கட்டியாகத் தோன்றும்போது, பெண்கள் அதை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.

மனைவியுடன் கணபதி

இதை வெளியில் சொல்வதா வேண்டாமா என்று கூச்சப்பட்டுக் கொண்டு அதை அப்படியே விட்டுவிடுகிறார்கள். நாளடைவில் அந்தக் கட்டி வளர்ச்சி பெற்று, வலி நிறைந்த பெரிய கட்டியாக மாறும்போதுதான் மருத்துவரையே சந்திக்கச் செல்கிறார்கள். பெரும்பாலும் புற்றுநோய் முற்றிய நிலையில் (3வது, 4வது ஸ்டேஜ்) புற்றுநோய் கண்டறியப்படுவதால்தான் இந்தியாவில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஆரம்ப நிலையிலேயே சிறிய வலியற்ற கட்டியாக இருக்கும்போதே (1வது, 2வது ஸ்டேஜ்) கண்டுபிடித்து சிகிச்சை பெறுவோரின் இறப்பு விகிதம் பெருமளவு குறைந்திருப்பதை அரசும் மருத்துவத்துறையும் கவனித்திருக்கின்றன.

இவ்வளவு கொடுமையான நோயை வரும் முன் கண்டறிவது எப்படி என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நமக்கு நாமே பரிசோதித்துக்கொள்ளும் மார்பக சுயபரிசோதனை முறை மற்றும் மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யும் `மேமோகிராம்' முறை மூலமும் மிகவும் எளிதாகக் கண்டறியலாம். பூப்பெய்திய பிறகு, பெண்களின் மார்பகங்களில் ஏதேனும் சிறு கட்டிகள் வருவதுபோல் தோன்றினாலே தங்களது மார்புகளைத் தாங்களாகவே `சுய மார்பகப் பரிசோதனை' செய்துகொள்ள வேண்டும். மாதவிலக்கு ஏற்பட்ட 7 முதல் 10 நாள்களுக்குள், கண்ணாடி முன்பு நின்று, இரு மார்பகங்களுக்கு இடையே வித்தியாசம் தெரிகிறதா என்று கண்களால் பார்த்தும், மார்பகத்தின் மீது கையின் நான்கு விரல்களால் அழுத்தித் தேய்த்தும் சுயபரிசோதனை செய்து கொள்ளலாம்.

அப்பரிசோதனையின்போது, மார்பில் கட்டி அல்லது வீக்கம், மார்பகத் தோலில் அதீத சுருக்கம், காம்பில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். `மேமோகிராம்' என்ற `ஸ்கிரீனிங் டெஸ்ட்', மிக முக்கியமான பரிசோதனை முறையாகும். இதன்மூலம் நோய் வரும்முன் கண்டறிந்து சிகிச்சை கொடுக்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். இவற்றையெல்லாம் தாண்டி, ஒருவேளை மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டாலும் பெண்கள் பயப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை. பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. இப்பிரச்னையிலிருந்து பெண்கள் எளிதில் மீண்டு வரலாம்” என்றார் மலர்ச்சியுடன்.

சேவைகளுக்காக வாழ்த்தலாம் என்றால்... வாழ்த்தும் வயதா இந்த டாக்டருக்கு? அவரிடம் நல்லாசி பெற்று வெளியே வந்தபோது பலர் அவருக்காகக் காத்திருந்தார்கள். அதில் ஒருவர் ஆனந்தி. அவரிடம் பேசினேன்.

ஆனந்தி

Also Read: புகை, மது, உடல் பருமன்... உயிரைப் பறிக்கும் உணவுக்குழாய் புற்றுநோய்... எதிர்கொள்வது எப்படி?

``டாக்டர் ஐயாகிட்ட அஞ்சு வருஷமா டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கேன். நாங்க இல்லாதப்பட்டவங்க என்பதால, இலவசமாக மருத்துவம் பார்ப்பதுடன் மருந்து மாத்திரைகளையும் இலவசமாவே தர்றார். என்னைப்போல பலருக்கும் இலவசமாத்தான் ட்ரீட்மென்ட் பார்க்கிறார்" என்றார்.

தான் செய்த எதையும் சாதனையெனக் கருதவில்லை. இலவச மருத்துவத்தைச் சேவையெனவும் நினைக்கவில்லை. இவையெல்லாம் தான் இந்த மனித குலத்துக்குச் செய்ய வேண்டியவை என்றே நினைக்கிறார் கணபதி. அந்த எண்ணம்தான் 83 வயதிலும் அவரை இளமையாக வைத்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/healthy/83-year-old-doctor-ganapathy-from-trichy-doing-free-service-to-the-people

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக