இங்கே வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுவதில்லை... அதுவும் தங்கராசு நடராஜன்களுக்கு அவ்வளவு எளிதாக எதுவுமே கிடைத்துவிடுவதில்லை. அதிசயங்கள் எதுவும் ஓர் இரவில் நிகழாது என்பார்கள். 70 ஆண்டுகால போராட்டத்துக்கான விடைதான் 02-12-2020 அன்று இந்திய அணிக்காக நடராஜன் களம்கண்டது. இந்த நாள் தமிழக கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக முக்கியமான நாள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு விளையாடத் தகுதிபெற்றிருக்கும் முதல் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தமிழன் தங்கராசு நடராஜன். வரலாற்றில் இப்பெயர் இனி எப்போதும் நிலைத்திருக்கும்.
தமிழ்நாட்டில் நீங்கள் எங்கே வசிப்பவராக இருந்தாலும் சரி, தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பிடிக்கவேண்டும் என்றால் அதற்கென தனி ப்ராசஸ் இருக்கிறது. செயின்ட் பீட்ஸ் போன்று கிரிக்கெட் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் பள்ளிகளில் படிக்கவேண்டும். பெரிய பயிற்சியாளர்கள் நடத்தும் கிரிக்கெட் அகாடமிக்களில் பயிற்சிபெற வேண்டும். 5 டிவிஷன் போட்டிகளில் ஆடி கொஞ்சம் கொஞ்சமாக உங்களை நிரூபிக்கவேண்டும். திறமையிருந்தும் உங்களைப் பரிந்துரைக்க சிபாரிசுகள் தேவைப்படும். இவ்வளவும் இருந்தால் மட்டுமே தமிழ்நாடு ரஞ்சி அணிக்குள் இடம்பிடிக்கமுடியும். அதனால்தான் சென்னையைத்தாண்டி எந்த ஒரு கிரிக்கெட் வீரனும் தமிழ்நாடு அணியில் இடம்பிடித்து இந்தியாவுக்குள் நுழைந்த வரலாறு நடராஜனுக்கு முன்பு இல்லை.
வீட்டுக்குப் பின்னாலேயே நெட்கட்டி பயிற்சி எடுக்கும் வசதிகள் இல்லை. தொடர் பயிற்சிகள் தரும் தந்தையோ, பெரிய கிரிக்கெட் அகாடமிகளோ இல்லை. பிட்ச் என்றால் என்ன என்று கேட்கும் கிராமத்தின் வயல்வெளிகளில், டென்னிஸ் பந்துகளில் விளையாடியவன் இன்று வெற்றிபெற்றிருக்கிறான். அதனால்தான் இந்த எளியவனின் வெற்றி உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது.
''ஏதோ ஒரு மேட்ச்ல நல்லா போட்டுட்டாம்ப்பா'', ''ஏதோ ஒரு மேட்ச்ல விக்கெட் எடுத்துட்டான்ப்பா'', ''ஏதோ ஒரு மேட்ச்ல யார்க்கரா போட்டாம்ப்பா'' என விமர்சனம் என்கிற பெயரில் ஒருவரின் கரியரை காலிசெய்து மூட்டைக்கட்டத் தயாராகும் கூட்டம் இங்கே அதிகம். ஆனால், விமர்சனங்களுக்கு இடம் கொடுக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக நடராஜன் கொடுத்த கடுமையான உழைப்பும், அவர் மேற்கொண்ட பயிற்சிகளும்தான் இன்று அவரை உச்சத்துக்கு உயர்த்தியிருக்கிறது. ''2021 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜனின் இடம் மிக முக்கியமானதாக இருக்கும்'' என உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களை சொல்ல வைத்திருக்கிறது.
''டிஎன்பிஎல்-ல நல்லா விளையாடிட்டா பெரிய ஆளா?'', ''ஐபிஎல் மேட்ச்சை வெச்செல்லாம் ஒரு பெளலரை மதிப்பிட முடியாது'' என நேற்று காலையிலும் விமர்சனங்கள் பறந்து வந்தன. ஆனால், தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தான் யார் என்பதை நிரூபித்துவிட்டார் நடராஜன். அதுவும் 'டெட் ரப்பர்' என்று சொல்லப்படும் மேட்ச்சில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் முதலில் இடம்பெற்றிருந்தது வருண் சக்ரவர்த்தியின் பெயர்தான். காயம் காரணமாக கடைசி நேரத்தில் வருண் சக்ரவர்த்தி வெளியேற, நடராஜனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இந்தியா தோல்வியடைந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நடராஜன் ப்ளேயிங் லெவனில் இல்லை. ஆனால், மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. தான் யாரென்பதை நிரூபித்துவிட்டார்.
இவ்வளவு பெரிய இந்திய அணியில் பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட் எடுக்கக்கூடிய பெளலர் இல்லையே என்கிற விமர்சனத்தை தன் முதல் போட்டியிலேயே உடைத்து வீசியிருக்கிறார் நடராஜன். முகமது ஷமிக்கு பதிலாக நடராஜனா, நவ்தீப் சைனிக்கு பதிலாக நடராஜனா என்கிற கேள்விகளுக்கு தன் ஸ்டைலில் பதில் சொன்ன கோலியையும் பாராட்டவேண்டும். புதுப்பந்தை பும்ராவோடு சேர்ந்து வீச நடராஜனைத் தேர்ந்தெடுத்திருந்தார் கோலி.
பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில் தனது மூன்றாவது ஓவரிலேயே நின்று நிதானித்து ஆடக்கூடிய லாபுசேனைப் பொறுமையிழக்கவைத்து அடித்து ஆடத்தூண்டி, இன்சைட் எட்ஜாக்கி போல்டாக்கினார் நடராஜன். இந்த ஒருநாள் தொடரில் இந்திய பெளலர் ஒருவர் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை முதல்முறையாகப் பவர்ப்ளேயில் வீழ்த்திய தரமான சம்பவம் இது.
லாபுசேன் அவுட் ஆனதும் க்ரீஸுக்குள் வந்தவர் ஸ்டீவன் ஸ்மித். கோலிக்கு இணையாகக் கொண்டாடப்படும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன். அதுவும் கடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் 60-70 பந்துகளில் சதம் அடித்து மிரளவைத்த இன்ஃபார்ம் பேட்ஸ்மேன். ஆனால், நடராஜனிடம் எந்த பதற்றமும் இல்லை. மாறாக பதற்றத்தை ஸ்டீவன் ஸ்மித்துக்குக் கொடுத்தார். ஸ்மித்துக்கு முதல் பந்தை ரவுண்ட் தி விக்கெட்டில் இருந்து வீசினார் நடராஜன். அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப்பை நோக்கி வந்தது பந்து. தொடாமல் வெல் லெஃப்ட் ஆடினார் ஸ்மித். அடுத்தப்பந்து ஃபுல்லர் லென்த். டிஃபென்ஸ் ஆடினார். மூன்றாவது பந்து மீண்டும் அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப். ஷார்ட் மிட் விக்கெட்டில் அடிக்கமுயன்று ரன் ஏதும் இல்லை. நான்காவது பந்து மீண்டும் ஃபுல்லர் லென்த். ஸ்மித்தால் ரன் எடுக்கமுடியவில்லை. ஓவரின் கடைசிப்பந்து மீண்டும் ஆஃப்ஸ்டம்ப்பைவிட்டு விலகி மிக அருகில். ஸ்மித்தால் இந்தப் பந்திலும் ரன் அடிக்கவில்லை. மெய்டன் விக்கெட் ஓவர் ஆக்கினார் நடராஜன். தொடர்ந்து ஐந்து பந்துகளில் ஸ்மித்தால் ரன் அடிக்க முடியவில்லை. இங்கிருந்துதான் ஸ்மித்தின் ப்ரஷர் எகிறியது. அடுத்து அதிரடியாக ஆசைப்பட்டு தாக்கூரை டார்கெட் செய்ய முயன்று விக்கெட்டை இழந்தார் ஸ்மித். இந்தியாவின் வெற்றிக்கான நம்பிக்கை ஒளி ஒளிர ஆரம்பித்தது.
ஆறு ஓவர்களுக்கு 30 ரன்கள் மட்டுமே கொடுத்து ஓரளவுக்கு எக்கனாமிக்கலாக இருந்த நடராஜனை 40-வது ஓவரில் அடிக்க ஆரம்பித்தார் கிளென் மேக்ஸ்வெல். இந்த ஓவரில் 14 ரன்கள் போனது. நடராஜன் பதற்றப்படவில்லை. 44-வது ஓவரை மீண்டும் நடராஜனிடம் கொடுத்தார் கோலி. இந்த ஓவரிலும் மேக்ஸ்வெல்லும், ஆஷ்டன் அகாரும் சிக்ஸர், பவுண்டரிகள் விளாச 17 ரன்கள். பதற்றம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்தது. வைடு வீசினார். ஆனால், நம்பிக்கையிழக்கவில்லை கோலி. 46வது ஓவர் மீண்டும் நடராஜனின் கைக்கு வந்தது.
30 பந்துகளில் 33 ரன்கள் அடித்தால்போதும் என மிகவும் வலுவான நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. அஷ்டன் அகார் களத்தில் நிற்கிறார். முதல் பந்தில் சிங்கிள் போனது. ஆனால், அடுத்த மூன்று பந்துகளும் டாட் பால். இந்த ஓவரில் நடராஜன் கொடுத்தது வெறும் 4 ரன்கள் மட்டுமே. மீண்டும் 48வது ஓவர். முதல் பந்திலேயே அச்சுறுத்திக்கொண்டிருந்த அஷ்டன் அகார் அவுட். இந்த ஓவரில் விக்கெட் எடுத்ததோடு மீண்டும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 12 பந்துகளில் 21 ரன்கள் தேவை என நிலைமையை மாற்றிவிட்டுப்போனார் நடராஜன்.
இப்போதும் நடராஜனை நோக்கி கேள்விகள் வீசப்படுகின்றன. வெறும் யார்க்கர்களை மட்டுமே வைத்துக்கொண்டு காலம் தள்ளமுடியாது. வேரியேஷன்கள் வேண்டும். கட்டர், இன்ஸ்விங்கர், அவுட்ஸ்விங்கர் எல்லாம் போடவேண்டும் எனப் பாடம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சரியான பயிற்சிகளோ, முறையான மென்ட்டார்களோ இல்லாமலேயே இத்தனை தூரம் வந்தவர், இனி இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர்களின் துணையால் இன்னும் உச்சத்துக்கு உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
source https://sports.vikatan.com/cricket/how-natarajan-broke-steve-smiths-confidence
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக