Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

மதுரை: `இரண்டாம் தலைநகர் கோரிக்கை!’ - கவனம் ஈர்த்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தீர்மானம்

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அ.தி.மு.கவில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்கிட வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது அரசியல் தளத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் திருமங்கலத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமானது தமிழகத்துக்கு இரண்டாம் தலைநகரம் பற்றியது.

``இந்தியாவில் பெரிய மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், எதிர்கால நலன் கருதியும், தென்மாவட்ட வளர்ச்சிக்காகவும் மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக உருவாக்க வேண்டுமென்பது தென் மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

குஜராத்தில் காந்திநகரிலும், அகமாபாத்திலும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைய உள்ளது. தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்று தலைநகரங்கள் உள்ளன. வெளிநாடுகள் பலவற்றில் 2 தலைநகரங்கள் உள்ளன

ஏற்கனவே மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற கிளை, சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை வேலை தொடங்கியுள்ளது. அதேபோல், தூத்துக்குடி துறைமுகம் மதுரையிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தென்மாவட்ட சாலைகளை இணைக்கும் கட்டமைப்பு தேவைக்கேற்ப உள்ளது.

தலைநகர் நிர்வாகம் அமைய தேவைப்படும் 10,000 ஏக்கர் நிலத்தை மதுரை புறநகர் பகுதிகளில் தேர்வு செய்ய முடியும். தென் மாவட்ட மக்களின் தொழில் வளர்ச்சி, பொருளாளதார வளர்ச்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அனைத்தும் இரண்டாம் தலைநகர் உருவாக்கினால்தான் அமையும்.

ஆர்.பி.உதயகுமார்

அன்னை மீனாட்சி குடிகொண்டிருக்கும் மதுரையில் தமிழகத்தில் நிர்வாகம் உருவாக வேண்டும். தென்மாவட்ட மக்களின் இதயங்களில் குடிகொண்டிருக்கும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரையும் வணங்கி மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வேண்டுகோள் விடுக்கிறது' என்று தீர்மானம் இயற்றி வலியுறுத்தியுள்ளார்கள். இதற்கு முன்னர் பல தலைவர்கள் வைத்த இக்கோரிக்கையை ஆளும்கட்சி அமைச்சரே வலியுறுத்தியுள்ளது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-as-second-headquarter-request-from-minister-rb-udhayakumar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக