Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

குற்றவழக்குப் புலனாய்வு... விருதுபெறும் பெண் இன்ஸ்பெக்டர்கள்!

ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, பெரம்பலூர் மாவட்டத்தின் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் கலா, ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் ஜான்சி ராணி, நீலகிரியின் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் பொன்னம்மாள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர்தான் அந்த ஐவர். அவர்களிடம் வாழ்த்துகளுடன் பேசினோம். விருது பெற்றுத் தந்த தங்களின் வழக்கு நடவடிக்கைகள் பற்றிப் பகிர்ந்துகொண்டனர்.

சந்திரகலா, இன்ஸ்பெக்டர், ஜெயங்கொண்டம்

சந்திரகலா, இன்ஸ்பெக்டர், ஜெயங்கொண்டம்

2017-ம் ஆண்டு முதல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் சந்திரகலா.

"ஜெயங்கொண்டம் அருகே யுத்தபள்ளம் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 7 வயதுச் சிறுமி பக்கத்து வீட்டில் டிவி பார்க்கச் சென்றபோது, 50 வயது கோபி என்பவரால் சிறார் வதைக்கு உள்ளானார். சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க, கோபியை போக்ஸோ சட்டத்தில் கைதுசெய்தோம். அரியலூர் மகிளா நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. இதுபோன்ற பரபரப்பான 30 வழக்குகளுக்கும் மேல் பதிவுசெய்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளில் 12 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்திருக்கிறேன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சிக்கலான வழக்குகளில் உடனிருந்து உறுதி தரும் உயரதிகாரிகளுக்கு, விருது பெற்ற மகிழ்வோடு நன்றி சொல்லிக்கொள்கிறேன்!"

கலா, இன்ஸ்பெக்டர், அரும்பாவூர், பெரம்பலூர் மாவட்டம்

கலா, இன்ஸ்பெக்டர், அரும்பாவூர், பெரம்பலூர் மாவட்டம்

குற்றப் பின்னணி வழக்குகளை விசாரிப்பதில் திறமையானவர் கலா என்பதால், அப்படிப் பல வழக்குகளில் இவர் பெயர் உயரதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

"2018-ம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 22 வயது அரவிந்தன், அதே பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்புச் சிறுமியை சிறார் வதை செய்ததோடு, அதை மறைக்கப் பல வேலைகள் செய்தார். சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தேன். அரவிந்தனின் குடும்பத்தினர் பல விதங்களில் மிரட்டல்கள், அதிகார பலத்தைப் பயன்படுத்தி பல்வேறு குடைச்சல்கள் தந்தனர். சாட்சிகளைக் கலைக்கும் வேலைகளிலும் ஈடுபட்டனர். அனைத்தையும் மீறி குற்றவாளியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தேன். நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபோது, சாட்சிகளை மாற்றும் வேலையில் இறங்கினர். என்றாலும் இறுதிவரை சாட்சிகளைப் பத்திரமாகப் பாதுகாத்தேன். 2019-ம் ஆண்டு நீதிமன்றம் குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்தது.

பெரம்பலூர் பேருந்து நிலையம், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பொறுப்பு அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, இன்னொரு வழக்கு. 5 வயதுக் குழந்தை பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கச் சென்றிருந்தபோது, கடையின் உரிமையாளரான 60 வயதான தர்மலிங்கத்தால் சிறார் வதைக்கு உள்ளானாள். அவர் மேல் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தேன். நீதிமன்றம், தர்மலிங்கத்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10,000 அபராதத்தொகையும் செலுத்தத் தீர்ப்பளித்தது. இந்த இரு வழக்குகளைச் சிறப்பாகக் கையாண்டதற்காக இப்போது இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடமையை நேர்மையாகவும் திறமையாகவும் செய்ததற்கான அங்கீகாரமாக இதை எடுத்துக்கொள்வேன்!"

ஜான்சி ராணி, இன்ஸ்பெக்டர், ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையம்

ஜான்சி ராணியின் அப்பா, கணவர் எனக் குடும்பமே காவல்துறை குடும்பம்.

"அபிராமம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018-ல் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை எரித்துக்கொன்ற மனைவி, தன் கணவர் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய இந்த வழக்கை விரைவாகப் புலனாய்வு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தேன்.

ஜான்சி ராணி, இன்ஸ்பெக்டர், ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல் நிலையம்

மேலும், கோவிலாங்குளம் பகுதியில் நடந்த மற்றொரு கொலை சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரில், 23 பேரை விரைந்து கைது செய்தேன். இதே பகுதியில் நடந்த மற்றொரு கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 குற்றவாளிகளை, சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் கைது செய்தேன். இந்த வேகமும், குற்றப்புலனாய்வில் உள்ள திறமையும் தற்போது விருதைப் பெற்றுத் தந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல் துறைக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறது!''

பொன்னம்மாள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர், நீலகிரி

பொன்னம்மாள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர், நீலகிரி

Also Read: ``பெண் மனம் எதிர்பார்க்கும் சுதந்திரம் என்ன?!" - ஒரு பெண்ணின் கடிதம்

அவசர அலுவல்களுக்கு இடையில் ரோந்துக்குச் சென்று கொண்டிருந்த பொன்னம்மாளை ஊட்டி-குன்னூர்‌ சாலையில் சந்தித்துப் பேசினோம்.

"2017-ல் எங்கள் ஸ்டேஷனுக்கு ஒரு கேஸ் வந்தது. 16 வயதுச் சிறுமியை 36 வயது ஆண் ஒருவர் சிறார் வதை செய்து கர்ப்பமடையச் செய்திருந்தார். குற்றத்தை நிரூபிக்க நிறைய மெனக்கெட்டோம். வழக்கை அடுத்தடுத்த கட்டங்களுக்கு மிகவும் கவனமாகக் கொண்டு சென்றோம். டி.என்.ஏ பரிசோதனை போன்றவற்றை விரைந்து முடித்து உரிய ஆதாரத்தோடு குற்றவாளியை கோர்ட்டில் நிறுத்தினோம். கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டி‌ மகிளா கோர்ட் அந்தக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. சரியான கோணத்தில் விரைவாக வழக்கை நகர்த்தி தண்டனை பெற்றுக் கொடுத்தோம். எந்த பாரபட்சமும் இல்லாம பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துணையாக நின்றால் போதும்... அதுவே சந்தோஷம்!"

கவிதா, இன்ஸ்பெக்டர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

கவிதா, இன்ஸ்பெக்டர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்

காவல் துறை பணியோடு பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் கவிதா.

"சென்ற வருடம் அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிசெய்தபோது, 4 போக்ஸோ வழக்குகளில், 2 வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 2 வழக்கில் 10 வருடங்கள் கடுங்காவல் தண்டனையும் என குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளைக் வாங்கிக்கொடுத்தேன்.

அறந்தாங்கிப் பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. ஆனாலும், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை. முதலில் பெண்கள் மத்தியில் நம்பிக்கையையும், தைரியத்தையும் விதைக்க வேண்டும். புகார் கொடுக்க வருபவர்களின் விவரங்களில் ரகசியம் காப்பது, குற்றம் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பது என நம் நடவடிக்கைகளின் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும். அதைத்தான் செய்தோம். பள்ளி, கல்லூரிகளுக்குச் நேரடியாகச் சென்று `குட் டச், பேட் டச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பலனாக, சிலர் புகார் கொடுத்தனர். அந்தக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளோம். பெண்களின் பக்கம் நின்று நியாயம் பெற்றுத் தந்ததற்கு இப்போது இந்த விருது அங்கீகாரம் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து பெண்களுக்கு உதவுவேன்!"



source https://www.vikatan.com/social-affairs/women/central-government-award-winning-women-inspectors-share-their-case-experiences

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக