Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

மூணாறு நிலச்சரிவு: `நீரோடையில் 12 உடல்கள்...’ - கைவிடப்படுகிறதா தேடுதல் பணி?

கேரள மாநிலம் மூணாறு ராஜமலை அருகே அமைந்துள்ள பெட்டிமுடி எனும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவு பெய்த கனமழையால் நிலச்சரிவில் சிக்கியது. இச்சம்பவத்தில், 1 நபர் மருத்துவமனையிலும், 70 பேர் சம்பவ இடத்தில் மண்ணில் புதையுண்டும் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று வரை 58 நபர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 12 நபர்களின் உடல்களை தேடும் பணி இன்று 11வது நாளாக நடக்கிறது. குறிப்பாக, காணாமல் போனவர்களின் உடல்களை, சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஓடக் கூடிய ஓடையில் தேடும் பணி நேற்றில் இருந்து நடந்து வருகிறது.

Also Read: மூணாறு நிலச்சரிவு: காணாமல் போன 15 பேரின் உடல்கள்! - நீரோடையில் தேடும் பணியில் 500 பேர்

மீட்புக் குழுவினருடன் குவி

நேற்றைய தினம், சுமார் 500 நபர்கள் கொண்ட மீட்புக் குழுவினர், கிலோமீட்டருக்கு 100 பேர் வீதம் நீரோடையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ’குவி’ என்ற வளர்ப்பு நாய், நீரோடையின் ஓர் இடத்தில் நின்றுகொண்டு குரைத்துக்கொண்டிருந்தது. அதனைக் கண்ட மீட்புக் குழுவினர், அந்த இடத்தினை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தோண்டிய போது, நிலச்சரிவில் சிக்கி காணாமல் போன, இரண்டரை வயதுக் குழந்தையின் உடல் அங்கே இருந்தது. இச்சம்பவம், மீட்புக் குழுவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அக்குழந்தையின் குடும்பத்தினர் வளர்த்து வந்த நாயாக, குவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

நீரோடை

Also Read: மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பிறகு பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்!

இதே போல, 3வது நாள் மீட்புப் பணியின் போது, நிலச்சரிவு நடந்த இடத்தில், மற்றொரு வளர்ப்பு நாய், தன்னுடைய அன்பிற்குரியவர்களை தேடிக்கொண்டே இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நாயின் செயல்களைப் பார்த்த மீட்புக் குழுவினர், திருச்சூரில் இருந்து மாயா, டோனா எனும் இரண்டு போலீஸ் மோப்ப நாய்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். மோப்ப நாய்களின் உதவியால், மண்ணில் புதைந்துள்ள உடல்களை தேடும் பணியில், முதல் நாளே, 8 உடல்கள் மீட்கப்பட்டது. தொடர் மழை, காற்று போன்ற காரணத்தால், இரண்டு நாய்களும் மறு நாள் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீஸ் நாய்கள் திருப்பி அனுப்பப்பட்டது. அதன் பின்னர், குவி என்ற நாய், தற்போது ஒரு குழந்தையின் உடலை கண்டுபிடிக்க உதவியுள்ளது.

பெட்டிமுடி

Also Read: மூணாறு: `கண்டன கோஷத்துடன் பினராயி விஜயன் காரை மறித்த பெண்!’ - யார் இந்த கோமதி?

இரண்டு நாட்களாக, நீரோடையில் சுமார் 5 கிலோமீட்டர் நடந்த தேடுதல் பணியில், இரண்டு உடல்களை மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பவம் நடந்து 11 நாட்கள் ஆவதாலும், இனியும் உடல்களைத் தேடுவது சாத்தியம் இல்லாத விசயம் என்றும், மீட்புப் பணிகள் விரைவில் கைவிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், மீட்புக் குழுவைச் சேர்ந்த சிலர், ``அனைவரது உடல்களையும் மீட்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் தான் தொடர்ந்து 11வது நாளாக களத்தில் இருக்கிறோம்” என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பெட்டிமுடி

எப்படியாவது தங்களின் உறவினர்களின் உடல்களை மீட்புக் குழுவினர், தேடிக் கொண்டு வந்துவிடமாட்டார்களா, அவர்களின் முகத்தை கடைசியாக பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கத்தில், பெட்டிமுடி மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.



source https://www.vikatan.com/news/india/is-the-task-of-searching-for-bodies-to-be-abandoned-in-munnar-landslide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக