Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

அமெரிக்கா : `ராபர்ட், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்!’ - சகோதரர் மரணத்தால் கலங்கும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சகோதரரும் தொழிலதிபருமான ராபர்ட் ட்ரம்ப், உடல்நிலை சரியில்லாமல் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். அதிபர் ட்ரம்பை விட இரண்டு வயது இளையவர் ராபர்ட். அவர் மிகவும் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததை அறிந்த அதிபர் ட்ரம்ப், மருத்துவமனைக்குச் சென்று கடந்த வெள்ளிக்கிழமை அவரைச் சந்தித்திருந்தார். அவர் நலமுடன் இருப்பதாக நம்பிக்கையும் தெரிவித்தார். இந்தநிலையில், அவர் திடீரென உயிரிழந்திருப்பது அதிபர் ட்ரம்ப் மற்றும் குடும்பத்தினரை மிகவும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப்

ராபர்ட் ட்ரம்ப் காலமானது தொடர்பாக அதிபர் ட்ரம்ப், ``எனது அருமை சகோதரர் ராபர்ட், நிம்மதியுடன் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் பகிந்து கொள்கிறேன். அவர் எனக்கு சகோதரர் மட்டும் அல்ல. ஒரு சிறந்த நண்பரும்கூட. அவரை பிரிவதில் மிகுந்த வருத்தமடைகிறேன். ஆனால், நாங்கள் மீண்டும் சந்திப்போம். அவரைப் பர்றிய நினைவுகள் என்னுடைய இதயத்தில் எப்போதும் நிலைத்திருக்கும். ராபர்ட், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். உனது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாக கூறியுள்ளார். அதிபர் ட்ரம்புக்கு ராபர்ட் மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்பின் இளமைப் பருவம், வளர்ந்த சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரது உறவினர் மேரி ட்ரம்ப் எழுதிய `Too Much and Never Enough: How My Family Created the World's Most Dangerous Man' என்ற புத்தகம் வெளியாவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததும் ராபர்ட்தான்.

Also Read: அமெரிக்கா: `ட்ரம்ப் மற்றும் கிம்மின் 25 கடிதங்கள்!' - புதிய தகவல்களுடன் வெளியாகும் புத்தகம்

புத்தகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதே ஜூன் மாதத்தில்தான், உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் ராபர்ட் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராபர்ட் ட்ரம்ப் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் வித்தியாசமான ஆளுமைகளை கொண்டிருந்தனர். அதிபர் ட்ரம்ப் ஒருமுறை தனது சகோதரரைப் பற்றி பேசும்போது, ``என்னை விடவும் அமையான மற்றும் எளிதான நபர், ராபர்ட். என்னுடைய வாழ்க்கையில் நான் `ஹனி’ என்று அழைக்கும் ஒரே நபர் அவர்தான்” என்று குறிப்பிட்டார். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் ராபர்ட், வால் ஸ்ட்ரீட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர் தன்னுடைய குடும்பத்தினர் நடத்திய தொழிலை நிர்வகித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது சகோதரர் ட்ரம்புக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்து வந்தார். ஒரு முறை ராபர்ட் ட்ரம்ப், ``நான் டொனால்ட் ட்ரம்பை ஆயிரம் சதவிகிதம் ஆதரிக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் மற்றும் குடும்பத்தினர்

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சென்று ராபர்ட்டை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிபர் ட்ரம்ப், ``தனது சகோதரர் வெளிப்படுத்தபடாத நோய் ஒன்றால் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்” என்று தெரிவித்தார். அவரது மரணத்துக்கான காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை. அவரது இறுதி சடங்கில் ட்ரம்ப் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அவர் தேர்தல் தொடர்பாக சில மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்ள தொடர் திட்டங்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. தனது சகோதரர் மரணத்தால் கலங்கி இருக்கும் ட்ரம்புக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ட்ரம்ப்: உலகின் மிகவும் ஆபத்தான மனிதன் உருவானது எப்படி? - சர்ச்சையைக் கிளப்பும் புத்தகம்



source https://www.vikatan.com/news/international/us-president-trumps-brother-robert-died-at-new-york

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக