Ad

சனி, 15 ஆகஸ்ட், 2020

வேலூர்: `மாதம் ஒருமுறை ரகசியமாக வந்து செல்கிறார்?’- செல்லூர் ராஜுவை விமர்சிக்கும் தி.மு.க

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கிய பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ

அப்போது, செய்தியாளர்களிடம்பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ``கொரோனா காலத்திலும் டி.வி மற்றும் பத்திரிகைகளில் தன்னுடையச் செய்தி வரவேண்டும் என்பதற்காக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக அரசை குறைச்சொல்லி வருகிறார். காமெடி நடிகர் வடிவேலு ஸ்டைலில்,`நானும் ரௌடிதான்.. நானும் ரௌடிதான்’ என்பதுபோல் மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்’’ எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சு தி.மு.க-வினரைக் கொதிப்படையச் செய்திருக்கிறது. ``ஆய்வுக்கூட்டம் என்பது அரசாங்க நிகழ்ச்சி. அங்கு தி.மு.க தலைவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?’’ என்று சீறுகிறார்கள். நம்மிடம் பேசிய வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார், ``தெர்மாகோல் விட்ட விஞ்ஞான அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எங்கள் தலைவரைப் பற்றிபேச என்ன தகுதி இருக்கிறது?

எம்.எல்.ஏ நந்தகுமார்

மாதம் ஒருமுறை வேலூர் வரும் செல்லூர் ராஜு, தனியார் ஹோட்டலில் தங்கிச் செல்வதற்கான மர்மத்தைப் பொதுவெளியில் ஓப்பனாகச் சொல்லுவாரா? இப்போது வந்த ஆய்வுக் கூட்டத்துக்குகூட விருந்தினர் மாளிகையில் தங்காமல், ஏன் தனியார் ஹோட்டலுக்குச் சென்றார்? அங்கு யாரைச் சந்தித்தார் என்ற ரகசியத்தை நாங்கள் வெளியில் சொல்லட்டுமா? தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்க்க விரும்புகிறோம். எங்கு எதைப் பேச வேண்டும் என்று செல்லூர் ராஜு முன்கூட்டியே தெளிவுபடுத்திக்கொண்டால் அவருக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.



source https://www.vikatan.com/news/politics/dmk-mla-slams-minister-sellur-raju

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக