Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

`பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்; மீண்டும் ஓ.என்.ஜி.சி பணிகள்!’ - தடுத்து நிறுத்திய மக்கள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீண்டும் ஓ.என்.ஜி.சி. பணிகளைத் தொடங்கியிருப்பது அப்பகுதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஓ.என்.ஜி.சி.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தின் கிழக்கு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி. சார்பில் 'மாதானம் திட்டம்' என்ற பெயரில் 20 -க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கப்படுகிறது. இங்கு எடுக்கப்படும் திராவக நிலையிலான எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல, சீர்காழி பகுதியில் வேட்டங்குடி, எடமணல், திருநகரி மற்றும் மேமாத்தூர் வரையான சுமார் 32 கி.மீ. தொலைவிற்கு விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகளை 2 ஆண்டுகளுக்கு முன் கெயில் (GAIL )நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.

இதற்காக 1.5 மீட்டர் ஆழத்திற்கு பூமிக்குள் குழாய்கள் புதைக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு எதிர்கட்சிகள், விவசாயிகள், மீனவர்கள், சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். எனவே பொதுமக்களின் கருத்துக் கேட்ட பின்பே குழாய்கள் பதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் விவசாய பணிகளை பாதிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி வழங்கப்படாது என்றும் அறிவித்திருந்தார். அதனை மீறி நிறுத்தி வைக்கப்பட்ட குழாய் புதைக்கும் பணிகளை கெயில் நிறுவனம் கொரோனா பேரிடர் ஊரடங்கு காலத்திலும் அவசரகதியில் இரவோடு இரவாக செய்யத் தொடங்கியுள்ளது.

ஆங்குதன்

இதுபற்றி வேட்டங்குடி கவுன்சிலர் அங்குதனிடம் பேசினோம், "புதிய வழித்தடமாக சீர்காழி அருகேயுள்ள திருநகரியிலிருந்து வழுதலைக்குடி, வெள்ளக்குளம், கேவரோடை வழியாக பழையபாளையம் முதன்மை எரிவாயு சேகரிப்பு மையத்திற்கு குழாய் புதைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வெள்ளக்குளம் பகுதியில் இரவு நேரத்தில் பணிகள் நடப்பதாக தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு போய் அதனை நிறுத்தினோம்.

எரிவாயு குழாய் புதைக்கும் பணியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக நிற்கும் சூழ்நிலை ஏற்படும். இரண்டு கிராமத்திலுள்ள வீடுகள் பலவற்றை அகற்றவேண்டிவரும். மேலும் பொதுமக்களின் கருத்துகள் கேட்காமல் இத்திட்டங்களை செயல்படுத்த முனைவது வன்மையாக கண்டிக்கதக்கது. இது போன்ற பெரும் திட்டங்களை செயலாக்கும் போது அந்தந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்டது அவசியம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடுவாய் மீனவக் கிராமத்தினர் ரூ. 1.66 கோடி கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு கெயில் நிறுவனம் தரமுன்வந்த பணத்தை ஏற்றுக்கொள்ளாமல் அவர்கள் ஊரில் குழாய் பதிக்க அனுமதிக்கவில்லை.

Also Read: “ஊசுட்டேரி பறவைகள் சரணாலயம் வழியாக எரிவாயுக் குழாய் பதிப்பதா?”

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே, வறட்சி, மழை, வெள்ளம், கடன்சுமை போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் இத்தகைய பேரிடர் திட்டங்களினால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். குடிநீர் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கெயில் குழாய் புதைப்பு பணிகளை உடனடியாக நிறுத்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/ongc-started-their-work-again-in-delta-districts

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக