Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

`6 அமைச்சர்களையும் நீக்குங்கள்!’- சீனியர்களை அதிரவைத்த ராஜேந்திர பாலாஜி?

Also Read: `தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஐயா OPS' - தேனியை அதிர வைத்த போஸ்டர்கள்

சென்னை கோட்டையில் சுதந்திர விழா கொண்டாட்டங்கள் முடிந்ததும், முதல் ஆளாக விருட்டென கிளம்பிப்போனார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம். மற்றவர்களுக்கு முன்பு வேகமாகக் கிளம்பிச் சென்றதை வைத்து, அவர் கடும் கோபத்தில் இருக்கிறார் என்பதை சக அமைச்சர்கள் புரிந்துகொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

இதுதொடர்பாக ``6 மணிக்குள் கடும் நடவடிக்வைண்டும்'' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஒ.பி.எஸ். என்கிற தலைப்பில் நேற்று (ஆகஸ்டு 15) செய்தி வெளியாகியிருந்தது. இந்த விவகாரத்தில் அ.தி.மு.க சார்பில் அறிக்கை மட்டுமே வெளியானது. `மீடியாக்களிடம் யாரும் அரசியல் தொடர்பாக பேசக்கூடாது. மீறிப் பேசினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்த அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாகக் கையெழுத்துப் போட்டிருந்தனர். இடையில் என்ன நடந்தது? அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலை எப்படித் தப்பியது என்பது தொடர்பான தகவல்கள் இப்போது வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

சுதந்திர தின விழாவில் தமிழக அரசின் சிறந்த பேரூராட்சிகள் என்று அறிவிக்கப்பட்டவைகளில் முதல் பரிசு, முதல்வரின் சேலம் மாவட்டம். இரண்டாம் பரிசு, துணை முதல்வர் மாவட்டம். மூன்றாம் பரிசு, உள்ளாட்சித் துறை அமைச்சரின் கோவை மாவட்டம்.

இவை அறிவிக்கப்பட்டபோது, ஒ.பி.எஸ். ஆதரவு பிரமுகர்கள் முகம் சுளித்திருக்கிறார்கள்.`முதல்வரிடம் இருக்கும் துறைதான் முதலாவதா?' என்றும் முணுமுணுத்திருக்கிறார்கள். முதல்வரின் நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டபோது, துணை முதல்வர் ஓ.பி.எஸ். நிர்வாகத்தின் கீழ்வரும் நிதித்துறையின் தொடர்புடைய ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திடடத்தை உருவாக்கிய கருவூலகக் கணக்குத் துறை சார்பில் ஓ.பி.எஸ் மேடை ஏறினார்.

ஓ.பன்னீர்செல்வம்

அப்போது, ஓ.பி.எஸ். ஆதரவு பிரமுகர்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள். ``’நான் விருது கொடுக்கிற இடத்தில் இருக்கிறேன். என் கையால் விருதை வாங்குகிற இடத்தில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். நான்தான் டாப்' என்பதை உணர்த்துவதுபோல் விருது தந்திருக்கிறார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை நிலவும் இந்த நேரத்தில் இதெல்லாம் தேவையா? அரசு மேடை என்பதால், பொறுத்துக்கொண்டு இருக்கிறார் ஓ.பி.எஸ். பாருங்கள். இனி நடப்பதை'' என்று பேசியிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். கிளம்பியதைப் பார்த்ததும், இவர்களும் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

ஓ.பி.எஸ். வீட்டிற்கு அவர் போய் சேர்ந்ததும், பின்னால் சுமார் 12 அமைச்சர்கள் சென்றனர். இந்தக் குழுவினர் மத்தியில் ஒ.பி.எஸ். பேசும்போது, ``முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ராஜேந்திர பாலாஜி அவிக்கிறார். அவர் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளாரா? இன்று மாலை 6 மணிக்குள் அவரை அமைச்சர் பதவி, மாவட்டப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். என் வேலைகளை அவரே செய்கிறாரென்றால், நான் ஏன் அந்தப் பொறுப்பில் இருக்கவேண்டும்? ராஜினாமா செய்துவிட்டு தொண்டனாக செயல்படுகிறேன்'' என்று பேசியதாக அவருக்கு நெருக்கமான பிரமுகர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு முதல்வர் எடப்பாடி வீட்டுக்கு அமைச்சர்கள் குழுவினர் சென்றிருக்கிறார்கள். அங்கே இருந்தபடியே, மூத்த அமைச்சர் ஒருவர் ராஜேந்திர பாலாஜியை போனில் அழைத்து,`ஏன் இப்படி பேசினீர்கள்?' என்று கண்டிப்பான குரலில் பேசியிருக்கிறார். தன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஓ.பி.எஸ் பேசியது எப்படியோ அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு முன்கூட்டியே எட்டியதாகச் சொல்கிறார்கள். தன்னைத் தூக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான், அந்த மூத்த அமைச்சர் போனில் பேசியிருக்கிறார்.

Also Read: `6 மணிக்குள் கடும் நடவடிக்கை வேண்டும்!’ - ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக எடப்பாடியிடம் கொதித்த ஓ.பி.எஸ்?

அப்போது நடந்த உரையாடல் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முக்கிய ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டோம். ``எங்கள் அமைச்சர் ஏன் அப்படி பேசினார் என்கிற பின்னணி விவரம் ஓ.பி.எஸ்ஸுக்கு நன்றாகத் தெரியும். இவர் மட்டுமா பேசினார்? இவருடன் சேர்த்து 6 அமைச்சர்கள், அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி பகிரங்கமாகப் பேசியிருக்கிறார்கள்.

Also Read: ``சின்னப் பசங்களை ஆடவிட்டு வேடிக்கை காட்டுறீங்களா?” - கொதித்த ஓ.பி.எஸ்; ஆவேச எடப்பாடி!

`என் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த 6 பேரையும் நீக்கவேண்டும். அதுதான் நியாயம்' என்று புதுக்குண்டை தூக்கிப்போட்டார். மறுமுனையில் எதுவும் பேசவில்லை. எங்கள் அமைச்சர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருந்தால், பல ரகசியங்கள் அம்பலமாகிவிடும். இதை சற்றும் எதிர்பார்க்காத சீனியர் அமைச்சர்கள், ஓ.பி.எஸ் வீட்டுக்கும், எடப்பாடி வீட்டுக்கும் பலமுறை அலைந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்தே, ராஜேந்திர பாலாஜியை நீக்குவது என்கிற பேச்சைவிட்டு, அறிக்கை விடுவது என்கிற முடிவுக்கு வந்தனர்’’ என்கிறார்கள்

ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும், கட்சியின் ஆலோசகரும்தான் என்று ஓ.பி.எஸ் ஆதரவு அமைச்சர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஓ.பி.எஸ்ஸுக்கும் இது தெரியும் என்கிறார்கள். `பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் செயலை இனியாவது எடப்பாடி தரப்பில் நிறுத்திக்கொள்ளவேண்டும்’’ என்று பகிரங்கமாக ஓ.பி.எஸ். தரப்பினர் எச்சரித்துள்ளதாகப் பேசிக்கொள்கிறார்கள் அ.தி.மு.க வட்டாரத்தில்.

பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/news/politics/admk-tussle-minister-rajendra-balaji-urges-to-take-action-against-6-ministers-says-sources

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக