லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 100-ஐ கடந்துள்ளது. சுமார் 4,000 பேர் காயமடைந்துள்ளனர். பெய்ரூட் துறைமுகத்தில் நடைபெற்ற இவ்விபத்தில், மொத்த துறைமுகமும் தரைமட்டமாகிவிட்டது.
லெபனான் நேரப்படி ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5 மணியளவில், துறைமுகத்திலுள்ள 12-ம் நம்பர் குடோனில் இருந்து தீப்புகை கிளம்பியது. தீயணைப்பு வீரர்கள் சுதாரிப்பதற்குள் குடோனில் வைக்கப்பட்டிருந்த மற்ற பொருள்களையும் தீ ஜூவாலைகள் ஆக்கிரமித்தன. குறிப்பாக, பட்டாசு பண்டல்கள் மீது தீ பரவியதால் விபரீதமானதாகக் கூறப்படுகிறது.
மாலை 5.30 மணியளவில் முதல் வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து வர்ணங்களை புகையில் கக்கின. சில நிமிட இடைவெளியிலேயே மிகப்பெரிய இரண்டாவது வெடிவிபத்து ஏற்பட்டது. இதுதான் ஏகப்பட்ட சேதாரத்தை உருவாக்கிவிட்டது. வெடிவிபத்தின் சத்தத்தை 200 கி.மீ தள்ளி உள்ள சைப்ரஸ் தீவிலும் மக்கள் உணர்ந்துள்ளனர். வெடிவிபத்தால் ரிக்டர் அளவுகோளில் 3.5 அளவுக்கு பெய்ரூட் அதிர்ந்ததாகக் கூறப்படுகிறது. முதல் வெடிவிபத்து நடந்தபோது, வேடிக்கை பார்ப்பதற்காக வெளியே வந்த மக்கள் இரண்டாவது வெடிவிபத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். பெய்ரூட் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முடியாமல் திண்டாடுகின்றன.
Also Read: BeirutBlast :`2,750 டன் அமோனியம் நைட்ரேட்; கட்டடங்கள் தரைமட்டம்!’ - லெபனான் விபத்தின் பின்னணி
பெய்ரூட் துறைமுகம் வழியாகத்தான் லெபனானுக்கு தேவைப்படும் கோதுமைப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்நாட்டின் மொத்த கோதுமை தேவையில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்துதான் இறக்குமதி ஆகிறது. இதை சேமித்து வைப்பதற்கு என்றே ஐந்து மாடி உயரத்தில் `சோலோஸ்’ எனப்படும் கோதுமைக் கிடங்கை துறைமுகத்தில் அமைத்திருந்தனர். வெடிவிபத்தால் சேமித்து வைத்திருந்த கோதுமைகள் அனைத்தும் சர்வநாசம் ஆகிவிட்டது. துறைமுகமும் தவிடுபொடியாகிவிட்டதால் இறக்குமதி செய்ய முடியாமல் 28,000 டன் கோதுமை கப்பலில் தத்தளித்து நிற்கிறது. தற்போது இடைக்கால ஏற்பாடாக ட்ரிப்போலி துறைமுகத்தை அந்நாட்டு அரசு தயார்படுத்த ஆரம்பித்திருந்தாலும் பதற்றம் தணியவில்லை.
சாவை கொண்டுவந்த மர்மக் கப்பல்
``எப்படி நடந்தது இந்த வெடிவிபத்து?” என்கிற கேள்விக்கு லெபனான் பிரதமர் ஹசன் டியாப் விளக்கமளித்துள்ளார். கடந்த ஆறு வருடமாக பெய்ரூட் துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால்தான் இவ்விபத்து நடைபெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். சரி, எங்கேயிருந்து வந்தது இந்த அமோனியம் நைட்ரேட்?
2013 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், ஜார்ஜியாவின் பாடுமி துறைமுகத்தில் இருந்து 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருளை ஏற்றிக்கொண்டு, மொசாம்பிக்யூ நாட்டின் பியரா துறைமுகத்துக்கு `ரோசஸ்’ என்கிற சரக்கு கப்பல் பயணமானது. பயணத்தைத் தொடங்கிய சில நாள்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளாடிய கப்பலை பெய்ரூட் துறைமுகத்தில் நிறுத்தி சீர் செய்வதற்கு கப்பலின் கேப்டன் அனுமதி கோரியுள்ளார். பெய்ரூட் துறைமுகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன், 2013 செப்டம்பர் 13-ம் தேதி துறைமுகத்திற்குள் `ரோசஸ்’ கப்பல் நுழைந்துள்ளது.
வழக்கமாக துறைமுகத்திற்குள் எந்தக் கப்பல் நுழைந்தாலும் அதிலுள்ள பொருள்களை சோதனையிடுவது லெபனான் துறைமுகக் கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வழக்கம். அப்படி சோதனையிடும்போது, எளிதில் தீ பிடிக்கக் கூடிய அமோனியம் நைட்ரேட் `டன்’ கணக்கில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதற்கான சான்று ஆவணங்களை கப்பலின் கேப்டனிடம் அவர்கள் கேட்டபோது, ``விவசாய உரம் தயாரிப்பதற்காகத்தான் அமோனியம் நைட்ரேட் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆவணங்களை கப்பலின் உரிமையாளர்களிடம்தான் கேட்க வேண்டும்” என்று கூறிவிட்டார். கப்பலைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதைத் துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்தனர். அதிலிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் பொருள்களையும் அக்டோபர் 15-ம் தேதி துறைமுகத்திலிருந்த 12-ம் நம்பர் குடோனுக்கு மாற்றினர்.
இதற்கிடையே, லெபனானுக்கு அபராதம் செலுத்தி கப்பலை மீட்பதற்கு ஆகும் செலவு அதிகம் என்பதால், கப்பலை அதன் மால்டோவிய நாட்டு உரிமையாளர் நிறுவனம் கைவிட்டது. யாரும் உரிமை கோர வராததால், இதுதொடர்பாக புகாரளிக்கப்பட்டு தற்போதும் விசாரணை நடைபெறுகிறது. இப்படி, `ரோசஸ்’ கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால்தான் பெய்ரூட் துறைமுகம் தீக்கிரையானதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர். மிகவும் சக்திவாய்ந்த ஒரு வெடிபொருள், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது, இதை உடனடியாக ஏலத்தில் விட்டு அப்புறப்படுத்தாதவர்கள் யார் எனப் பல கேள்விகள் லெபனான் அரசியலை கலங்கடிக்கின்றன.
முக்கோண அரசியல்
சிரியா, ஹிஸ்புல்லா, இஸ்ரேல். இம்மூன்று சக்திகள்தான் லெபனான் அரசியலை ஆட்டுவிக்கின்றன. லெபனானில் 52 சதவிகிதம் முஸ்லீம்கள் இருக்கின்றனர். இவர்களில் உட்பிரிவாக ஷியா, சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் சம பலத்தில் உள்ளனர். ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களால் பெரிதும் ஆதரிக்கப்படும் சிரியா, தனக்கான அடித்தளத்தை லெபனானில் வலுவாக ஊன்றியுள்ளது. பெய்ரூட்டில் சிரியாவை மீறி ஒரு துரும்பைக்கூட லெபனான் அரசால் அசைக்க முடியாது. சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அதிபர் பஷர் அல் அசாத்க்கு ஆதரவாக போர் புரிய பலரும் லெபனான் வழியைப் பயன்படுத்துகின்றனர். இதை எதிர்த்து சன்னி பிரிவினரால் நடத்தப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி தூக்குவதால் லெபனான் சிக்கித் திண்டாடுகிறது.
Also Read: முதுகில் குத்திய அமெரிக்கா... மீண்டும் ரத்த பூமியான சிரியா!
ஷியா பிரிவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் ஆளுகைக்குள் நாட்டின் பல பகுதிகள் உள்ளன. ஒரு முறைப்படுத்தப்பட்ட ராணுவமாகவே செயல்படும் ஹிஸ்புல்லா, அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலடியாக, பெய்ரூட்டிலுள்ள ஹிஸ்புல்லாவின் நிலைகள் மீது ட்ரோன் தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. கடந்த வாரம் கூட, இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள `கோலன் ஹைட்ஸ்’ பகுதியில் ஹிஸ்புல்லாவின் வீரர்கள் ஊடுருவ முயன்றதாகவும் அதை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியது. இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையை இனியும் ஹிஸ்புல்லா நிறுத்தவில்லை என்றால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் எச்சரித்தது. சிரியா, ஹிஸ்புல்லா, இஸ்ரேல் என இம்முக்கோண சண்டையால் பெரிதும் பாதிக்கப்படுவது லெபனானின் அப்பாவிப் பொதுமக்கள்தாம்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது, லெபனானின் பணம் 80 சதவிகிதம் அளவுக்கு தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. ஒவ்வொரு பொருளும் 40 - 50% விலை அதிகரித்துள்ளன. தற்போது சுவாசமாக இருந்த பெய்ரூட் துறைமுகமும் தரைமட்டமானதால், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்துள்ளது.
ஏன் வெடித்தது லெபனான்?
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற விபத்து, உண்மையிலேயே அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், வேறு இரண்டு காரணங்களையும் மத்திய கிழக்கு நாடுகளின் விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும் வல்லுநர்கள் அடுக்குகிறார்கள். ஏறத்தாழ 243 டன் டி.என்.டி. வெடிமருந்தை ஒன்றாகக் கொட்டி வெடிக்கவைத்தால் எப்படி ஒரு அதிர்வு இருக்குமோ, அதைத்தான் பெய்ரூட் துறைமுகம் நேற்று சந்தித்துள்ளது. இந்த அதிர்வு வெறும் அமோனியம் நைட்ரேட்டால் மட்டும் சாத்தியப்படுமா என்று அந்த வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.
1. ஈரானில் இருந்து ஹிஸ்புல்லாவுக்கு சில ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அவை அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 12-ம் நம்பர் குடோனில் பாதுகாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லாவுடன் கடந்த சிலவாரங்களாக கலவரப் போக்கை கையாளும் இஸ்ரேல், தன்னுடைய உளவுத்துறையான `மொசாட்’ மூலமாக அந்த ஆயுதக்கிடங்கிற்கு தீவைத்து வெடிப்பொருள்களை வெடிக்க வைத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. ஒருவேளை இவ்விவகாரத்தில் இஸ்ரேல் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு இரண்டு லாபம். ஹிஸ்புல்லாவை பழிதீர்த்தது போலவும் ஆகிவிட்டது, லெபனானின் முதுகெலும்பை உடைத்து எச்சரித்தது போலவும் ஆகிவிட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
Also Read: லெபனான் வீரர் தலை துண்டித்து படுகொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் வெறி செயல்!
2. லெபனானின் பிரதமராக இருந்த ரஃபிக் ஹரிரி, 2005-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதுதொடர்பான சர்வதேச விசாரணை நெதர்லாந்தில் நடைபெற்றுவந்தது. சிரிய அரசுதான் ஹரிரியை கொன்றதாக லெபனானில் `சிடார் புரட்சி’ வெடித்தது. சிரியாவுக்கு ஆதரவாக இருப்பதாக ஹிஸ்புல்லா மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து லெபனானின் எல்லைக்குள் அத்துமீறி நிலைக்கொண்டிருந்த தன் ராணுவத்தை சிறிதளவு சிரிய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. ஹரிரியை இஸ்ரேல்தான் கொன்றதாக, 2010-ம் ஆண்டு ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டினார். இக்கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்திவந்த தீர்ப்பாயம், வரும் இந்த வார இறுதியில் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்தத் தீர்ப்பினால் பாதிப்பு ஏற்படப்போகும் யாராவது ஒரு தாக்குதலை நடத்தி லெபனானை நிலைகுலையச் செய்தார்களா என்கிற கோணத்திலும் சந்தேகங்கள் கிளம்புகின்றன.
2018-ம் ஆண்டுக்குப் பிறகு பெரிய அளவு வெடிவிபத்தை பார்த்திராத பெய்ரூட் நகரம், துறைமுக வெடிவிபத்தால் நடுங்கிப் போயுள்ளது. பல நாடுகள் உதவிக்கரம் நீட்டினாலும் நிலைமை சீரடைய பல மாதங்கள் ஆகலாம்.
source https://www.vikatan.com/government-and-politics/international/what-caused-the-explosion-in-beirut
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக