கொரோனா வைரஸால் இந்தியா மிகவும் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 40,000-த்தை நெருங்கியுள்ளது. பாதிப்புகள் அதிகமாகி வருவதால் மருத்துவமனைகளில் நிலவும் பல்வேறு குழப்பங்கள் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அதிகாலை மூன்று மணியளவில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. பிரதமர் மோடி இந்த விபத்து தொடர்பாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியில் ஷ்ரே எனும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்த நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் மிகப்பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். இந்த விபத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: உ.பி: `உதவிக்கு யாரும் வரவில்லை!’ - மருத்துவமனை அலட்சியத்தால் உயிரிழந்த நோயாளி
விபத்து நடந்த நேரத்தில் சுமார் 45 நோயாளிகள் அம்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளனர். மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளின் உறவினர்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்து தங்களது உறவினர்கள் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள கவலையுடன் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மீட்கப்பட்ட உயிரிழந்த நோயாளிகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். மூன்று நாள்களுக்குள் இதுதொடர்பான அறிக்கையை சமர்பிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. ஆனால், ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பிரதமர் மோடி இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``அகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். மருத்துவமனையில் நிலவும் சூழல் குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். பாதிப்படைந்தவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: தெலங்கானா: `80 நாள்கள்; ரூ. 1.52 கோடி பில்!’ - தொழிலாளியை நெகிழ வைத்த துபாய் மருத்துவமனை
source https://www.vikatan.com/news/accident/gujrat-hospital-fire-accident-8-patients-died
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக