Ad

புதன், 5 ஆகஸ்ட், 2020

``மகா கலைஞன் சந்திரபாபுவை வாழவெச்ச சினிமாவே அவரைத் தோற்கடிச்சது ஏன்?" - மிஷ்கின்

``என்னோட `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தோட படப்பிடிப்பு எட்டு நாள் `Quibble island' கல்லறையில நடந்துட்டு இருந்தது. அப்போ அங்கே இருந்த சந்திரபாபு கல்லறையை இரவு நேரத்துல என் கண்ணுல பட்டுச்சு. கீழே விழுந்து அழுது புரண்டேன். உடனே தண்ணீர் பாட்டில் வாங்கி கல்லறையை கழுவி பூ போட்டு வணங்குனேன். இதைப் பார்த்திருந்த எழுத்தாளர் ஷாஜி அடுத்த வருஷம் சந்திரபாபுவோட பிறந்தநாள் வந்தப்போ என்கிட்ட சொன்னார். உடனே, நாங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து கல்லறைக்குப் போலாம்னு முடிவு பண்ணோம். இதுக்காக முதல்ல, நல்ல பூ மரங்கள் கொடுக்கக்கூடிய மரக்கன்றுகள் வாங்கினோம். அப்புறம் இந்த மரக்கன்றுகளை எடுத்துட்டு போயிட்டு அவரோட கல்லறை தோட்டத்துல நட்டு வெச்சோம். நல்லா பாடல்களெல்லாம் பாடிட்டு கொண்டாடிட்டு வந்தோம். இவரோட பிறந்தநாள் வந்துட்டாலே, இந்த இடத்துக்கு போகணும்ங்குறதை வழக்கத்துல வெச்சிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆகஸ்ட் அஞ்சாம் தேதி வந்துட்டாலே சந்திரபாபுவின் நினைவும் தானா வந்திரும். தொடர்ந்து நாலு வருஷமா போயிட்டு இருக்கேன்.

இந்த வருஷம் ஆகஸ்ட் அஞ்சு வந்தவுடனே, கிளம்பி அவரோட கல்லறைத் தோட்டத்துக்கு போனோம். ரொம்ப சந்தோஷமா... அதே நேரத்துல மனசுக்கு ஆறுதலா இருந்தது. முக்கியமா, நான் நட்டு வெச்சிருந்த மரக்கன்றுகள் நல்லா வளர்ந்து பூத்து குலுங்கிட்டு இருந்தது. அதைப் பார்க்குறப்போ சந்தோஷம் தாங்கல. முக்கியமா, சந்திரபாபு சார் படங்களின் மூலமா நம்ம எல்லாரையும் சிரிக்க வெச்சிருக்கார். அன்பையும் பொழிஞ்சு இருக்கார். இந்த பூக்களின் வழியா திரும்பவும் நம்ம எல்லாரையும் பார்த்து சிரிக்குற மாதிரி எனக்குள்ள எண்ணம் தோண ஆரம்பிச்சிச்சது. எப்போதுமே என்னோட நினைவுகள்ல சந்திரபாபு சார் இருந்திருக்கார். ஏன்னா, `என்னைத் தெரியலையா', `உனக்காக எல்லாம் உனக்காக', `புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை' போன்ற பாடல்களெல்லாம் கேட்டு வளர்ந்தவன். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்கள் எல்லாம் பார்த்துட்டு இருந்த காலத்துல தனியாயொரு மனிதன் எந்தவொரு பெரிய இமேஜூம் வெச்சிக்கமா, அவரோட பர்ஃபாமன்ஸ் வழியா நம்ம எல்லாரையும் ஈர்த்துட்டார். அதுவும் தனியா இவரோட டான்ஸ் ரொம்ப அருமையா இருக்கும். இதுவரைக்கும் இந்தியன் சினிமாவுல இப்படியொரு நடனத்தை நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு பேர் ஆடியிருக்காங்க. இருந்தாலும், இவரோட நடனம் வேற மாதிரியிருக்கும். ரிதத்தோட ஆடுறது முக்கியமில்ல. ஆனா, இவர் நடனத்துல ஒரு க்ரேஸ் இருந்துட்டே இருக்கும்.

சந்திரபாபு

அந்த கிரேஸை வேற எதுலயும் பார்க்கமுடியல. அதுமட்டுமில்லாம, இவரோட பாடல்கள்ல பேரர்த்தம் இருக்கும். கண்ணதாசன் இவருக்கு எழுதுன எல்லா பாடல்களும் ரொம்பத் தத்துவமா நல்லாயிருக்கும். `பிறக்கும் போதும் அழுகிறாய், இறக்கும் போதும் அழுகிறாய்' பாடல்களெல்லாம் மனசை ஏதோ பண்ணும். புரியாம இருந்த என்னோட சின்ன வயசிலயே இந்த மனுஷன் யார்டானு உத்து பார்க்க வெச்சுச்சு. எங்க அப்பா இவருடைய பெரிய ரசிகர். எப்பவும் இவரைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பார். சந்திரபாபுவுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆயிருச்சுனு யோசிப்பேன். இவரோட வாழ்க்கையில இருந்த சோகங்கள், தியாகங்களெல்லாம் கேட்டிருக்கேன். இதுக்கு அப்புறம் சினிமாவுல நான் என்ட்ரி கொடுத்ததுக்குப் பிறகு, சினிமா கலை தெரிஞ்சதுக்குப் பிறகு இவரை ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். எவ்வளவு பெரிய லெஜண்ட் இவர்னு புரிய ஆரம்பிச்சது. இவர் டைரக்‌ஷன் பண்ணுன `தட்டுங்கள் திறக்கப்படும்' படத்துல இருந்த லைட்டிங்ஸ் பெரிய க்ரியேட்டிவா இருக்கும். அவர் எவ்ளோ பெரிய ஆளுமைன்னு தெரியும்.

அதே மாதிரி சின்ன வயசுல என்னோட அப்பா இவரோட இடிஞ்ச பழைய வீட்டுக்கு கூட்டிட்டுப் போய் காட்டினார். நான் பார்த்தப்போ ஆச்சர்யமா, அதியசமா இருந்தது. இவரோட கார் ரெண்டாவது மாடிக்கு போறளவுக்கு பிரமாண்டமா கட்டியிருந்தார். இதெல்லாம் பார்க்குறப்போ இந்தியளவுல பெரிய லெஜண்ட்னு தெரிஞ்சது. அப்புறம், இவரைப் பற்றி படித்தேன். இவர் பாடல்களை முணு முணுக்காம என்னோட வாழ்க்கை கடந்தது இல்ல. பெரிய மகான் இவர். சினிமா இவரை வாழ வெச்சு கடைசில தோற்கடிச்சிருச்சு. மகா கலைஞன் வாழ்க்கையில நேர்மையாவும் உண்மையாவும் பேசுறப்போ இந்த உலகம் அதைப் பார்த்து வியக்கும். அப்புறம் கொஞ்ச நாள்ல தூக்கி அடிச்சிரும். இது சினிமால மட்டும் இல்ல எல்லா தொழில்லயும் இருக்கும். இருந்தும், என்னோட மனங்களில் வாழ்ந்துட்டு இருக்கார். பல கோடிக்கணக்கான மனங்கள்ல இருக்கார். ஒரு சந்திரன் மாதிரிதான் இவர். இந்த உலகம், தமிழர்கள், எம்.எஸ்.வி மற்றும் இசையும், நடனமும் இருக்குற வரைக்கும் சந்திரபாபு இருந்துக்கிட்டே இருப்பார். என்னோட `ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தோட ஷூட்டிங் இவரோட கல்லறை இருக்குற இடத்துல நடந்தது. அப்போவே இவரோட கல்லறையைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்'' என்ற மிஷ்கினிடம் சந்திரபாபுவுடைய வாழ்க்கையை படமா எடுக்கிற எண்ணம் இருக்கா எனக் கேட்டேன்.

சந்திரபாபு கல்லறையில் மிஷ்கின்

``இதுவரைக்கும் அந்த எண்ணம் வரல. நல்ல ஐடியாதான். ஆனா, படமா எடுக்க மாட்டேன். இதை சினிமாவா எடுத்து பார்க்கணும்கிற எண்ணம் இல்ல. என் மனசுல பெரிய ஆளுமையா, ஹீரோவா அவர் வாழ்ந்துட்டே இருக்கார், இருப்பார்" என்றார் இயக்குநர் மிஷ்கின்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-mysskin-remembering-his-memories-about-actor-chandrababu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக