Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

ராதிகா... 80'ஸ் மட்டுமா, மில்லினியல்ஸுக்கும் இவரைப் பிடிக்கும்... ஏன் தெரியுமா? #42YearsofRadhika

மேற்குலகில் படித்துக்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பாரதிராஜா கொடியசைத்து வைத்து கிழக்கே போகும் ரயிலாக்கி தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த ரயில் அதன்பிறகு எந்த ஸ்டேஷனிலும் நிற்கவில்லை. சினிமா, டிவி என 42 வருடங்களாக எட்டுத்திசையெங்கும் நிற்காமல் தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ராதிகாவை 80'ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல இன்றும் `சித்தி'யாக, `வாணி ராணி'யாக சின்னத்திரை வழியிலும் தமிழ்க்குடும்பங்களின் மனதுக்கு நெருக்கம்!

அவ்வளவு ஏன் இன்றைய மில்லினியல் பசங்களுக்கும்கூட ராதிகாவைப் பிடிக்கும்.`நானும் ரௌடிதான்' படத்தில் விஜய் சேதுபதியின் போலீஸ் அம்மாவாகட்டும், `தர்மதுரை'யில் மகன் மீது பாசம் வைத்து மருகும் பாண்டியம்மா கிழவியாகட்டும் `யார் இவங்க?' என யோசிக்க வைக்கும் தனித்துவமான நடிப்பை பல பரிமாணங்களில் காட்டியிருப்பார்.

இன்று அவர் ஹீரோயினாக நடித்த படங்களைப் பார்க்காதவர்கள்கூட சின்னத்திரை சீரியல்களிலும், சோஷியல் மீடியாவில் தினமும் ஷேர் ஆகும் மீம் டெம்ப்ளேட்களிலும் ராதிகாவைக் கடந்துதான் செல்கிறார்கள். `சூர்யவம்சம்', `ஜீன்ஸ்', `நானும் ரௌடிதான்' என அவர் நடித்த படங்களின் மீம் டெம்ப்ளேட்கள் பாப்புலர். போலீஸ் செலக்‌ஷன் வரும் மகன் விஜய் சேதுபதிக்காக உசேன் போல்ட் ஓடிய நேரத்தை அசால்ட்டாக போடச் சொல்லும் அளவுக்கு பாசக்காரராச்சே!

இன்றைய தலைமுறையினர் ராதிகாவின் நடிப்பை நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெடித்துச் சிரிக்கும் அவரின் பிரத்யேக சிரிப்பு, கிளிசரின் போடாமலே அழுகையை வரவைக்கும் கதாபாத்திரமாகவே மாறிப்போகும் `மெத்தட் ஆக்டிங்', டப்பிங்கில் சொந்தக்குரல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ராதிகா, விஜய்

`கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகா நடிக்க வந்ததே விபத்துதான். `சிரி' என்றாலே வாயை அகலமாக்கி ஈ காட்டிச் சிரிக்கும் குழந்தையின் புன்னகையை முதல் படம் முழுவதும் பாஞ்சாலி கேரக்டரில் நமக்குத் தந்தவர். விபரமறியாத 16 வயதில் முதல் படத்தில் நடிக்க வந்ததால் வாய்ப்பு எளிதில் கிடைத்தததாய் தோன்றலாம். நடிகவேளின் புதல்வி என்றாலும் மோதிரக்கை படாமல் சாக்லேட் கொடுத்தேதான் தனக்கு வேண்டிய நடிப்பை வாங்கினாராம் இயக்குநர் இமயம். இடையில் பலமுறை, `நடிப்பும் வேணாம் ஒண்ணும் வேணாம் நான் போறேன்' என்று ஈ காட்டிய ராதிகாவை தாஜா பண்ணி கேமரா முன் கொண்டுவர சாக்லேட்கள் நிறைய தேவைப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் பட்ஜெட்டில் சாக்லேட் செலவும் இடம்பிடித்தது தமிழ் சினிமா வரலாறு.

அடுத்த வருடம் மட்டுமே தமிழில் ராதிகா நடித்த படங்கள் எத்தனை தெரியுமா? 5.

அதில் முக்கியமான படம் சுதாகரோடு நடித்த `நிறம் மாறாத பூக்கள்'! காதல் தோல்வியில் வாடும் ஒரு பெண்ணின் வலியை பிரதிபலித்திருப்பார். இந்தப் படத்துக்குப் பிறகு ராதிகா தென்னிந்திய மொழிகளில் பிஸியாக பறந்து நடிக்க ஆரம்பித்தார். மொழிப்பிரச்னை இல்லாத, எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்கும் நடிகை என்று பெயரெடுத்தார்.

`கிழக்கே போகும் ரயில்' படத்தில் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ் பேனாவின் படைப்பூக்கத்துக்கு எல்லைகள் இல்லை. அவர் எழுதிய கதைகளில் நடிகைகளை நடிக்க வைத்த காலம்போய் ராதிகாவை மனதில் வைத்து பாக்யராஜ் கதை எழுத ஆரம்பித்ததாய் அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். பாக்யராஜின் குறும்பை சமாளித்து திரையில் தனித்துத் தெரிய தனித்திறமை வேண்டும். அது ராதிகாவின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. `பாமா ருக்மணி', `குமரிப்பெண்ணின் உள்ளத்திலே', `விடியும்வரை காத்திரு', `தாவணிக் கனவுகள்' என பாக்யராஜுடன் சேர்ந்து நடித்த அத்தனை படங்களிலும் செம ஸ்க்ரீன் பிரசன்ஸ்... செம கெமிஸ்ட்ரி.

குறிப்பாக `இன்று போய் நாளை வா'... வாவ் ராதிகா!

ராதிகா, கமல்ஹாசன், கே.ஆர்.விஜயா

படம் நெடுக சரவெடி வெடித்தாலும் இந்த ஒரு காட்சி போதுமானதாக இருக்கும். குடுகுடுப்பைக்காரரை செட்-அப் செய்து போலியாக குறி சொல்ல வைத்து, காலையில் 7 மணிக்கு கறுப்புச் சட்டையோடு பாக்யராஜ் தன் வீட்டின் முன் நிற்பார். ராதிகாவும் அவரை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் அவர் வீட்டின் முன் நிற்பார். வாண்டடாக பாக்யராஜே போய் என்னவென்று விஷயத்தைக் கேட்டு பல்பு வாங்குவார்.

``இல்லை சார்... வெள்ளை சட்டையோடதான் என் மாப்பிள்ளை வருவாராம்!" என்றதும் கறுப்பு சட்டை போட்ட பாக்யராஜின் ரியாக்‌ஷன் அல்டிமேட் என்றால், கடைசிவரை, ``வெள்ளைச் சட்டை கறுப்புப் பேன்ட்தான் குடுகுடுப்பைக்காரர் சொன்னார்" எனச்சொல்லி தன் வீட்டுக்கு வெள்ளைச் சட்டையோடு வந்தவரிடம் வலியப்போய் பேசுவார் ராதிகா. ``பழனிசாமி சார், என் மாப்பிள்ளை நல்லா இருக்காருல்ல?" என்று சொன்னதும் பாக்யராஜ் கோபமாய் கிளம்பிச் சென்றதும் சிரிப்பார் ராதிகா. `பாவம்... ரொம்ப கோவிச்சுக்கிட்டாரு போலிருக்கு' என்று குறும்புத்தனத்தையும், காதலையும் ஒரு சிரிப்பாலேயே ரசிகனுக்குக் கடத்தியிருப்பார். அது ராதிகா டச்!

இயக்குநர் மகேந்திரனின் `மெட்டி' படத்தில் இன்னும் கொஞ்சம் மெச்சூர்டான நடிப்பைக் காட்டி மிரட்டியிருப்பார். நம் எல்லோருக்கும் மெட்டி என்றதும் `மெட்டி ஒலி காற்றோடு' பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், ஜென்சி பாடிய `கல்யாணம் என்னை முடிக்க...' என்ற பாடலைப் பார்த்தவர்கள் ராதிகாவின் க்யூட் எக்ஸ்பிரஷன்களை மறக்கவே முடியாது. பெண்ணை வலிமையான பாலினமாகக் கற்பனை செய்து மகேந்திரன் உருவாக்கிய அந்த கலாட்டா கல்யாணப் பாடலில் குறும்பு ராதிகா, இன்றைய ஆயிரம் ஜோதிகா!

`நியாயம் காவலி' என்ற தெலுங்குப்படத்தை எத்தனை தமிழர்கள் பார்த்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், 1981-ல் ரிலீஸான அந்தப்படம்தான் பல மொழிகளில் ரீமேக் செய்து ஹிட்டடித்த தெலுங்கின் எவர்கிரீன் கோர்ட் ரூம் சினிமா! நடிகை சாரதாவோடு போட்டி போட்டு நடித்திருப்பார் ராதிகா. படத்தில் ப்ளே பாயாக வந்து க்ளைமாக்ஸில் மன்னிப்பு கேட்கும் கேரக்டரில் சிரஞ்சீவி. சாரதாவைத் தூக்கி சாப்பிடும் பிரமாத நடிப்பால் சிறந்த நடிகை விருது ராதிகாவுக்கு அந்த ஆண்டு கிடைத்தது. தமிழில் மோகன்-பூர்ணிமா நடிப்பில் ஹிட்டடித்த அதே `விதி' தான் இந்தபடம்.

ராதிகா, விஜயகாந்த்

இந்தியிலும் கலக்கியவர் ராதிகா. முதல் படமே தமிழின் ஹிட் ரீமேக்தான். மணிவண்ணன் இயக்கிய `கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தை இந்தியில் `நசீப் அப்னா அப்னா'வாக மாற்றம் செய்யப்பட்டபோது, ரிஷி கபூருக்கு ஜோடியாக தமிழில் சுஹாசினி ரோலில் நடித்து அசத்தினார். ராதிகாவின் ரோல் அப்போது பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. தமிழ் படங்களுக்கு கால்ஷீட் நிறைய கொடுத்திருந்ததால் இந்தி சினிமாவின் வாய்ப்புகளை தவிர்க்க வேண்டிய சூழல். இல்லையென்றால் இந்தியிலும் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்! ஆனாலும், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர் தவறவிட்டதே இல்லை.

கறுப்பழகிகளைக் கொண்டாடும் பாலு மகேந்திராவின் `ரெட்டை வால் குருவி'யில் ராதிகா மட்டும் ஒவ்வொரு ஃபிரேமிலும் தேவதையாய் தெரிந்ததெல்லாம் அதிசயம்தான்!

தூர்தர்ஷன் கோலோச்சிய நாட்களில் `மீண்டும் ஒரு காதல் கதை' சினிமாவாகவும், ஒளியும் ஒலியும் பாடல் தொகுப்பிலும் தவறாமல் இடம் பிடிக்கும். `அதிகாலை நேரமே' பாடலைப் பார்க்கும்போதெல்லாம் நம் மனதை என்னவோ செய்யும். அந்நாளில் படத்தைப் பார்த்தவர்களுக்கு பிரதாப் போத்தனும் ராதிகாவும் தெரிந்திருக்காது. இரண்டு நிஜமான மனநிலை பிறழ்ந்தவர்களை கூப்பிட்டு வந்து நடிக்க வைத்ததைப் போலவே இருக்கும் இருவரின் நடிப்பும். சிரிப்பையும் அழுகையையும் கலந்து தந்த சரசு பாத்திரம் தத்ரூபமான நடிப்புக்கு பலருக்கு பாலபாடம்!

`நல்லவனுக்கு நல்லவன்' படம் அப்போதைய இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. எவ்வளவு பெரிய முரடனையும் ஒரு பெண் தன் அன்பாலேயே மாற்றிக்காட்டுவாள் என்ற ட்ரெண்ட் இந்தப் படத்திலிருந்துதான் தோன்றியது. சொல்லப் போனால் இன்றைய `மயக்கம் என்ன' யாமினிக்கு இன்ஸ்பிரேஷனே `நல்லவனுக்கு நல்லவன்' உமாதான்!

அன்றைய இளைஞர்களின் திருமண எதிர்பார்ப்பே ராதிகா போன்று ஒரு பெண் வேண்டும் என்பதாக இருந்தது. இளம் ராதிகா, வயதான ராதிகா என படம் முழுவதும் ரஜினியைத் தாங்கிப் பிடிக்கும் பாத்திரம் ராதிகாவுடையது. நடிப்பில், சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில் பிரமாதப்படுத்தியிருப்பார். ரஜினியோடு பின்னர் நடித்த `ஊர்க்காவலன்' படத்திலும் முறைப்பெண்ணாக காமெடியும் சென்ட்டிமென்ட்டும் கலந்து எல்லோரையும் சிரிக்கவும், அழவைத்தும் செல்வார்.

ராதிகா, சரத்குமார்

80-களில் விஜயகாந்தோடு மட்டும் பல ஹிட் படங்களில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா, கமல்-ஸ்ரீதேவி போல தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது இந்த ஜோடி. `நானே ராஜா நானே மந்திரி', `பூந்தோட்ட காவல்காரன்', `நல்லவன்', `தெற்கத்தி கள்ளன்', `நீதியின் மறுபக்கம்', `உழவன் மகன்', `சிறைப்பறவை' என டஜன் படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.

ராதிகா அப்போது பாப்புலராக இருந்த எல்லோருடனும் நடித்திருந்தார் ஒருவரைத் தவிர. அந்தக்குறை ஒரு தெலுங்கு படத்தின்மூலம் நீங்கியது. 1986-ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் ரிலீஸான `ஸ்வாதி முத்யம்' தமிழில் சிப்பிக்குள் முத்தாக உதித்தது. இளம் விதவையின் உணர்வுகளையும், வலிகளையும், கூடவே கமலுடன் இருந்த கெமிஸ்ட்ரியும் அவரை எந்த ரோல் கொடுத்தாலும் பிரமாதப்படுத்தும் நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது. பின்னாளில் கமலுடன் வாயாடி கேரக்டரில் நடித்த `பேர் சொல்லும் பிள்ளை' ராதிகாவின் வெகுளித்தனமான நடிப்புக்காகவே இப்போதும் ரசித்துப் பார்க்கலாம்!

அவர் நடிப்பில் உச்சம் தொட்ட படங்கள் இரண்டு. எந்த நடிகையும் அப்படி இனி நடிக்க முடியாது என சொல்லும்விதமான சினிமாக்கள் அவை... `கேளடி கண்மணி', `கிழக்குச் சீமையிலே'. இவ்விரு படங்களிலும் வேறு யாரையும் அந்த கேரக்டரில் பொருத்திப் பார்க்கவே முடியவில்லை.

குறிப்பாக `கேளடி கண்மணி'யில் காது கேட்காத, வாய் பேச முடியாத தன் பெற்றோர்களிடம் தன் திருமணம் நின்று போனதைப் பற்றி சைகை மொழியில் அழுதுகொண்டே சொல்லுமிடம்... கண்கலங்க வைக்கும்.

எஸ்.பி.பி-யிடம் ராதிகா உடைந்துபோய் பேசும்போதுகூட அவரையும் அறியாமல் டயலாக் பேசிக்கொண்டே சைகை மொழியில் பேசுவார். காதலையும், இயலாமையையும் தன் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார். ஆனந்த விகடன், விமர்சனத்தில் 55 மதிப்பெண்கள் கொடுத்த கையோடு ராதிகாவின் நடிப்பை புகழ்ந்து எழுதியிருந்தது.

``சாரதா டீச்சர் கேரக்டரை எழுதும்போதே என் மனதில் இருந்தது ராதிகா மேடம் மட்டும்தான். அவரைத்தவிர அந்த கேரக்டருக்கு அவ்வளவு நியாயம் யாரும் செய்திருக்க முடியாது!'' என்றார் இயக்குநர் வசந்த்.

ராதிகா, நயன்தாரா, சிவகார்த்திகேயன்

மெச்சூர்டான பாத்திரங்களை ராதிகாவுக்காகவே உருவாக்கிய படங்களில் ஒன்று... `கிழக்குச் சீமையிலே'. இதில் நடிக்கும்போது ராதிகாவின் வயது 30-களின் தொடக்கத்தில்தான் இருக்கும். ஆனால், வயதான பாத்திரத்தில் மதுரை ஸ்லாங்கில் அவர் மனோரமா ஆச்சி போலவே மாறி அசத்தியிருந்தார். படத்தின் க்ளைமாக்ஸின் போது கடும் காய்ச்சலில் இருந்த ராதிகாவால், ஷூட்டிங்கை கேன்சல் செய்ய பாரதிராஜா முடிவெடுத்தபோதும் நடித்திருக்கிறார். அப்போதுதான் அந்தக் காட்சி இன்னும் யதார்த்தமாக இருக்கும் என்றாராம். இப்போதும் க்ளைமாக்ஸ் பார்த்தால் அவரின் அர்ப்பணிப்பு விளங்கும்.

`ஜீன்ஸ்' படத்தில் சுந்தராம்பாள் கேரக்டரை எழுதும்போதும் ராதிகாவை மனதில் வைத்து எழுதியதாக இயக்குநர் ஷங்கர் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இப்படி ஹீரோக்கள் கோலோச்சும் தமிழ் சினிமாவில் காலங்கள் உருண்டோடினாலும் நிற்காமல் நடிப்புக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ராதிகா தமிழ் சினிமாவின் பொக்கிஷம்!

ராதிகாவின் 42 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை ஒரு கட்டுரைக்குள் சுருக்க முடியாது. இந்த ராதிகா எக்ஸ்பிரஸ் இன்னும் தடதடத்து ஓடி நூற்றாண்டைத்தொட வாழ்த்துகள்!



source https://cinema.vikatan.com/tamil-cinema/revisiting-actor-raadhikas-42-years-of-cinema-career

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக