Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

மலேசியா: `கொரோனா வைரஸின் புதிய திரிபு’ - 10 மடங்கு வேகமாகப் பரவுவதாக எச்சரிக்கை

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த ஜனவரி மாதம் முதல் பரவத்தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலக நாடுகளுக்கும் பரவி மனிதனின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்தக் கொரோனா வகைகளில் பல வைரஸ்கள் இருப்பதாகவும் அது தொடர்ந்து தன் தன்மையை மாற்றிக்கொள்வதால் அதனைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள முடியவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது.

கோவிட் -19 கொரோனா

இந்நிலையில் மலேசியாவில் கொரோனாவின் 'D624G' என்ற திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியா திரும்பிச் சென்ற ஒரு உணவக உரிமையாளர் தனது 14 நாள் தனிமைப்படுத்துதலை மீறியுள்ளார். அவர் மூலம் 45 பேருக்கு கொரோனா பரவியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா... குணமான பின்னும் தொடரும் சிக்கல்கள்... ஓர் அலசல்

அந்த உணவக உரிமையாளருக்கு கொரோனா திரிபு இருப்பதாகச் சந்தேகப்பட்டு அவர் தீவிர மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன் முடிவில் அவருக்கு 'D624G' என்ற திரிபு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிலிப்பைன்ஸில் இருந்து மலேசியா திரும்பும் மக்களில் சிலருக்கும் 'D624G' திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

“இந்த வகை தொற்று 10 மடங்கு வேகமாகவும் மிகவும் எளிதாகவும் மற்றவர்களுக்குப் பரவும். மலேசியாவில் இந்தத் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வைரஸை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது. இதன் மூலம் நம்மால் தொற்றுநோய் சங்கிலியை உடைக்க வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என அந்நாட்டு சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்த வகை பிறழ்வு ஜூலை மாதம்தான் தெரியவந்துள்ளது, எனவே, தற்போதுள்ள தடுப்பு மருந்துகளால் இந்த வகை பாதிப்பைத் தடுக்க முடியுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே மலேசியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,200-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 8,859 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 125 பேர் பலியாகியுள்ளனர். இப்போது 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Also Read: ரஷ்யா: `உலகின் முதல் கொரோனா தடுப்பூசி’ - சொந்த மகளுக்குச் சோதனை செய்து வெளியிட்ட புதின்!



source https://www.vikatan.com/news/international/coronavirus-mutation-detected-in-malaysia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக