Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

வேலூர்: `காட்டன் மாஃபியா; குற்றவழக்கு!’ - 2 தி.மு.க நிர்வாகிகள் பதவி பறிப்புப் பின்னணி

வேலூர் மாவட்டத்தில், தினக்கூலி தொழிலாளர்களைக் குறிவைத்து லாட்டரிச் சீட் விற்பனை மற்றும் நம்பர் விளையாட்டான `காட்டன் சூதாட்டம்’ போன்றவை அமோகமாக நடக்கின்றன. மாவட்டத்துக்கே தலைமையிடம் குடியாத்தம் என்கிறார்கள். வியர்வைச் சிந்தி உழைக்கும் 500, 600 ரூபாயை இந்த சூதாட்டத்தில் பறிகொடுக்கும் தினக்கூலிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டும். வெறும் கையுடன் வீடு திரும்பும் அந்த தொழிலாளர்களின் குடும்பங்களில், தினந்தோறும் சண்டைச் சச்சரவுகள்தான் மிச்சம் என்கிறார்கள்.

சூதாட்டத்தால், கடனாளியான சிலர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்களும் ஏராளம் எனக்கூறப்படுகிறது. இந்த, காட்டன் மாஃபியாக்களை வழிநடத்தும் முக்கியப் புள்ளிகளில் வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க மாணவர் அணியின் துணை அமைப்பாளரான குடியாத்தம் மனோஜும் ஒருவர் என்று செய்தி வெளியாகியிருந்தது.

முரசொலியில் வந்த அறிவிப்பு

இதுதொடர்பாகப் பேசிய மனோஜ், ``நான் அந்த மாதிரி ஆள் இல்லை. என்மீது களங்கம் ஏற்படுத்த தவறானத் தகவலைப் பரப்புகிறார்கள்’’ என்றார். எனினும், மனோஜ் மீதான புகார் அறிவாலயத்தின் கவனத்துக்கும் சென்றது. இதையடுத்து, மாணவர் அணியின் துணை அமைப்பாளர் பொறுப்பிலிருந்து மனோஜ் நீக்கப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பு முரசொலியில் இன்று கட்டம்கட்டி வெளியாகியிருக்கிறது. மனோஜுக்குப் பதிலாக குடியாத்தம் ஆர்.எஸ்.நகரைச் சேர்ந்த சுந்தர் என்பவர் அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக மாநில மாணவர் அணிச் செயலாளரான எழிலரசன் அறிவித்திருக்கிறார்.

இதுசம்பந்தமாக நம்மிடம்பேசிய தி.மு.க-வினர் சிலர், ``குடியாத்தம் போலீஸுக்கு கமிஷன் ஒழுங்காகப் போய்விடுதாலும், சில `சம்திங்.. சம்திங்’ வேலையைச் செய்துகொடுப்பதாலும் தி.மு.க பிரமுகர் மனோஜுக்கு காவல்நிலையங்களில் ராஜ உபசரிப்பு கொடுக்கிறார்கள். ஏழைகள் வயிற்றில் அடித்துவிட்டு எம்.எல்.ஏ கனவிலும் மிதந்துகொண்டிருந்தார் மனோஜ். காட்டன் சூதாட்ட மாஃபியாக்களைக் களையெடுக்க வேண்டிய காவல்துறையினர், அப்பாவி ஏழைகளிடம் மட்டுமே அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். மனோஜின் பதவிப் பறிக்கப்படாமல் போயிருந்தால், குடியாத்தம் பகுதியில் தி.மு.க தேறுவதே கஷ்டம் என்ற சூழல் உருவாகியிருக்கும்’’ என்றனர்.

முரசொலியில் வந்த மற்றொரு அறிவிப்பு

அதேபோல், கே.வி.குப்பம் மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.டி.ஜெயகுமார் என்பவரும் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஜெயகுமார் குற்றப்பின்னணி கொண்டவர் எனக்கூறப்படுகிறது. இப்போதும்கூட ஓர் குற்றவழக்கில் ஜெயகுமார் தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கிய காரணத்திற்காக ஜெயகுமார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்குப் பதிலாக கே.வி.குப்பம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த சீதாராமன் என்பவர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாகவும் முரசொலியில் இன்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. குற்றப் பின்னணியுடைய இரண்டு புள்ளிகளின் பதவிப் பறிக்கப்பட்டிருப்பதை வேலூர் மாவட்ட தி.மு.க-வினர் வரவேற்றுள்ளனர்.



source https://www.vikatan.com/news/politics/dmk-take-action-against-2-officials-in-the-party-with-criminal-background-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக