Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

கரூர்: `க்ரீன் குளித்தலை சேலஞ்ச்; 60 கிராமங்களில் மரக்கன்றுகள்!’ அசத்தும் விஜய் ரசிகர்கள்

நடிகர் மகேஷ்பாபு சமூகவலைதளம் வழி விடுத்த, 'க்ரீன் இந்தியா சேலஞ்சைப் பார்த்த நடிகர் விஜய், தன்பங்குக்கு ஒரு மரக்கன்றை நட்டு, அந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டார். அவரது வழியில், விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர்களும், ஆளுக்கொரு மரக்கன்றை நட்டு வருகிறார்கள். அந்த வகையில், தமிழகத்திலேயே அதிகமாக 120 மரக்கன்றுகளை, 'க்ரீன் குளித்தலை சேலஞ்ச்' என்ற பெயரில் நட்டு, அசத்தியிருக்கிறார்கள், குளித்தலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.

மரக்கன்று நடும் சதாசிவம்

நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக, மக்களை கவரும்வகையில் பல்வேறு விஷயங்களைச் செய்துவருகிறார். அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் ஐ.டி விங், தொழில்நுட்ப அணிகள் இருப்பதுபோல், விஜய் மக்கள் இயக்கத்திலும் சமூகவலைதள அணி ஒன்று உள்ளது.

Also Read: கரூர்: `நம்ம ஆத்தை நாமதானே சுத்தப்படுத்தணும்!' - அமராவதி ஆற்றில் களமிறங்கிய இளைஞர்கள்

அந்த அணியின் மூலம், தனது செயல்பாடுகளையும், மக்களுக்கு செய்யும் உதவிகளையும் யாரையும் குறைசொல்லாமல் சமூகவலைதளங்கள் மூலம் மக்களிடம் ரீச் பண்ணும்படி அந்த அணியினருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள்.

மரக்கன்று நடும் சதாசிவம்

இந்த நிலையில்தான், நடிகர் மகேஷ்பாபு சமூகவலைதளம் மூலம் விடுத்த, 'க்ரீன் இந்தியா சேலஞ்சையை ஏற்று, தானும் தனது வீட்டில் ஒரு மரக்கன்றை நட்டு, அதை ட்ரெண்டாக்கினார் நடிகர் விஜய். அவரைப் பின்பற்றி, குளித்தலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கத் தலைவர் சதாசிவம், தனது ஒன்றியத்துக்குட்பட்ட 60 கிளை மன்றங்களில், மன்றத்துக்கு 2 மரக்கன்றுகள் வீதம், 120 மரக்கன்றுகளை, `க்ரீன் குளித்தலை சேலஞ்ச்' என்று நட்டு, அசத்தியிருக்கிறார்.

இதுகுறித்து, விஜய் மக்கள் இயக்க குளித்தலை ஒன்றியத் தலைவர் சதாசிவத்திடம் பேசினோம்.

``தளபதி விஜய், க்ரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று, தனது வீட்டில் மரக்கன்றை நட்டு, மக்களை கவர்ந்தார். அதைப்பார்த்து, தமிழ்நாடு முழுக்க உள்ள நிர்வாகிகள், ஆளுக்கொரு மரக்கன்றை நட்டு, அதை சமூகவலைதளங்களில் பதிவாக வெளியிட்டார்கள். இன்றைக்கு, சூழலும், இயற்கையும் கெட்டு, அந்திமகாலத்தில் இருக்கிறது. அதனால், நாம் அனுபவிக்கும் இயற்கை இடர்கள் ஏராளம். அதை தவிர்க்க, தளபதி வழியில் மரக்கன்று நடும் விசயத்தை அதிக்கப்படுத்தணும்னு நினைச்சோம்.

சதாசிவம்

அதனால், இந்த சேலஞ்சை கொஞ்சம் பெரிதாகப் பண்ண முடிவெடுத்தோம். குளித்தலை ஒன்றியத்தில் உள்ள 60 கிளைமன்றங்களிலும், மன்றத்துக்கு 2 மரக்கன்றுகள் வீதம், 120 மரக்கன்றுகள் நட முடிவெடுத்தோம். சப்போட்டா, புங்கன், மா, கொய்யா, நாவல் என்று 120 மரக்கன்றுகளை வாங்கினோம். வை.புதூர் கிளையில் தொடங்கி, சேப்ளாபட்டி கிளை வரை அதை அந்தந்த கிளைமன்றத் தலைவர்களை வச்சு நட்டோம். அந்த மரங்களை பாதுகாக்க, வலைகூண்டுகளையும் ஒன்றிய அமைப்பு சார்பில் வாங்கிகொடுத்தோம்.

Also Read: விஜய் - அஜித்; ஜோதிகா - வனிதா; ஸ்டாலின் - சீமான் -இவர்கள் இமேஜை உடைப்பது யார்?

சும்மா மரக்கன்றை வைத்தோம், அதை போட்டோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டோம் என்று இந்த விசயத்தை நாங்க கையாளபோவதில்லை. எங்கள் தளபதியும் அப்படி எங்களை வளர்க்கலை. அதனால், எல்லா கிளைமன்ற நிர்வாகிகள் மத்தியில், மரக்கன்றுகளை வளர்ப்பது பற்றிய போட்டியை அறிவித்துள்ளேன். 120 மரக்கன்றுகளையும் யார் யாரெல்லாம் வளர்த்து, இரண்டு வருடங்கள் வரை நீர் ஊற்றி பராமரிக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அவர்களே எதிர்பாராத பரிசை வழங்கலாம்னு இருக்கிறேன். அந்த பரிசு நிச்சயம் அவர்களுக்கு, 'இன்னும் அதிக மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும்' என்கிற ஊக்கத்தை ஏற்படுத்தும்.

வலைகூண்டுகள்

இந்த க்ரீன் குளித்தலை சேலஞ்சை, 60 கிராமங்களிலுள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஏற்று, ஆர்வத்துடன் பங்கெடுத்துள்ளனர். இந்த முயற்சி மக்களிடம், குறிப்பாக குளித்தலைப் பகுதி பெண்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த மரக்கன்று நடும் முயற்சியை, தளபதியே மெச்சும்வகையில் பெரிய இயக்கமாக இந்த குளித்தலை ஒன்றியத்தில் எடுத்துக்கிட்டு போகலாம்னு முடிவு பண்ணியிருக்கிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/karur-vijay-fans-new-initiative-clean-kulithalai-over-planting-trees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக