Ad

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தூத்துக்குடி: `4 வாரங்களில் 25 வழக்குகள்; 34 பேர் கைது!’ - பதறவைக்கும் போதைப் பொருள் கடத்தல்

தூத்துக்குடி, `தொழிற்சாலை நகரம்’ என்பதால், உடலுழைப்புத் தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா கடத்தலைப் பொறுத்தவரையில், ஆண்களைவிட பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். தூத்துக்குடி நகர் மற்றும் சப் டிவிஷன்களிலுள்ள காவல் நிலையங்களில் வாரத்துக்கு ஐந்து முதல் 10 வழக்குகள் சராசரியாகப் பதிவு செய்யப்படுகிறன. கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தொழில் போட்டி மற்றும் முன்விரோதம் காரணமாக தூத்துக்குடியில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பதப்படுத்தப்பட்ட கஞ்சா

கஞ்சாவால் இரட்டைக் கொலைகளே நடந்துள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓரளவு குறைந்திருந்த கஞ்சா கடத்தலும், விற்பனையும் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கஞ்சா மட்டுமல்லாமல் கடந்த சில நாள்களாக, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன.

தூத்துக்குடியில் கடந்த 13-ம் தேதி ரூ.17.18 லட்சம் மதிப்புள்ள, 1.25 டன் எடையுள்ள 23, 44, 678 புகையிலைப் பொருள்கள் பாக்கெட்டுகள் போலீஸாரின் சோதனையில் சிக்கின. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல கோவில்பட்டியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்குக் கடத்தவிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களும் பிடிபட்டன.

எஸ்.பி., ஜெயக்குமார்

இது தவிர திருச்செந்தூர், காயல்பட்டினம் போன்ற கடற்கரைப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கும் புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவங்களில் பிடிபட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடியிலிருந்து பெரிய நெட்வொர்க் மூலம் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தவிர, மாவட்டம் முழுவதும் 25 கிலோ கஞ்சாவும், 25 கிலோ பதப்படுத்தப்பட்ட கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Also Read: `20 பண்டல்கள்; ரூ.2 கோடி ஹெராயின்!’ - புதுக்கோட்டையில் சிக்கிய போதைப் பொருள்கள்

ஊரடங்கால் ஏற்கெனவே மக்கள் நடமாட்டம் குறைந்திருப்பதால், வியாபாரமின்றித் தவிக்கும் டீ மற்றும் பெட்டிக்கடை வியாபாரிகள் தங்களின் வருமானத்தை அதிகரிக்கவும், ஊரடங்கில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவும் தற்போது மறைமுகமாக புகையிலைப் பொருள்கள் விற்பனையில் இறங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. `கஞ்சா, புகையிலைப் பொருள்கள் கடத்தல் அதிகமாகியிருப்பதால், போலீஸார் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என்கின்றனர் மக்கள்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம்

இது குறித்து மாவட்ட காவல்துறை எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம்.``தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா, 25 கிலோ சரஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை, பதுக்கல், கடத்தல் போன்றவற்றைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் போதைப் பொருள் அறவே இல்லாதநிலையை உருவாக்க, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. போதைப் பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/thoothukudi-police-books-34-in-past-4-weeks-over-drug-trafficking

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக