Ad

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

கோவை: `ஒருபுறம் கொண்டாட்டம்; மறுபுறம் களப்பணியாளரின் மரணம்!’ - கொரோனா அதிர்ச்சி

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் கோவையில் 395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,967 ஆக உயர்ந்துள்ளது. `இதுவரை 185 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்’ என சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

கோவை

Also Read: எண்ணிக்கையில் குளறுபடி - மறைக்கப்படுகிறதா கோவை கொரோனா மரணங்கள்?

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா கொரோனா சிகிச்சை மையம், தனியார் மருத்துவமனைகள் ஆகியவை உள்ளன. இவற்றில், கொடிசியா சிகிச்சை மையத்தில், அறிகுறி இல்லாத நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இற்கிடையே, அவர்கள் மனரீதியாக ஆரோக்கியமாக இருப்பதற்காக, திரையில் படங்கள் போடுவது, யோகா பயிற்சி வழங்குவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை நடந்து வருகின்றன. அறிகுறி இல்லாததால், அங்கு பெரிய அளவுக்கு கட்டுப்பாடுகளும் இல்லை. இதனால், அங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் குத்தாட்டம் போட்ட டான்ஸ் வீடியோ வைரலானது.

கொடிசியா கிரிக்கெட்

அதேபோல, கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கிரிக்கெட் ஆடிய வீடியோவும் வைரலானது. இப்படி, கொரோனாவை தைரியமாக, ஜாலியாக எதிர்கொள்வது பாசிட்டிவான விஷயம்தான். ஆனால், அங்கே கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு மருத்துவர், களப்பணியாளர்கள் பலியாகும் சோகமும் நடக்கிறது. மதுக்கரைப் பகுதியில் சுகாதார ஆய்வாளராக இருந்தவர் குமார். கொரோனா தடுப்புப் பணிகளில் தொடர்ந்து முன்னின்றவர். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுகாதார ஆய்வாளர்

அவருக்கு, மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ``இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று மாவட்ட ஆட்சியர் இராசாமணி தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-health-department-officer-died-in-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக