Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

Covid Questions: கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நினைவிழப்பு ஏற்படுமா?

கோவிட் பாதிப்புக்குப் பிறகு நினைவாற்றல் பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. இது கோவிட் தொற்றின் விளைவுதானா? தீர்வு என்ன?

- நவின் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் சிவன் கேசவன்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சிவன் கேசவன்.

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நினைவிழப்பு பிரச்னை, கோவிட் தொற்றிலிருந்து குணமான சிலரிடம் காணப்படுவதைப் பார்க்கிறோம். கோவிட் -19 வைரஸ் என்பது நுரையீரலைத் தாக்கக்கூடியது என்றாலும் அது பல நேரங்களில் நரம்பியல் மண்டலத்தையும் பாதிக்கிறது.

கோவிட் தொற்றியவர்களில் 30 சதவிகிதம் பேருக்கு நினைவிழப்பு தவிர, பலவீனம், வலிப்பு, தலைவலி, மந்தநிலை, பக்கவாதம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆரம்ப காலத்தில் வயதான நோயாளிகளும், கோவிட் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டு ஐசியூ சிகிச்சைவரை சென்றவர்களும்தான் இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் போகப் போக, இளவயதினருக்கும் இந்த பாதிப்புகள் வருவதைப் பார்க்கிறோம்.

Also Read: Covid Questions: கொரோனா காலத்தில் வீடுகளில் ஏசி பயன்படுத்தலாமா?

கோவிட் தொற்றை நினைத்துப் பலரும் உளவியல் ரீதியாகவும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டிய சூழல், தனிமை, உதவிக்கு ஆளில்லாத நிலை, மரண பயம் என பலதும் சேர்ந்து அவர்களுக்கு `போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர்' (Post Traumatic Stress Disorder (PTSD) எனும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். குழப்பம், நினைவிழப்பு, பதற்றம், ஸ்ட்ரெஸ் போன்றவை இந்த பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.

பாதிக்கப்பட்ட நபரின் நினைவிழப்பின் அளவு மற்றும் அவரது வயது ஆகியவற்றைப் பொறுத்தே இதை குணப்படுத்தும் சாத்தியமும் அமையும். உதாரணத்துக்கு 30 வயது நோயாளிக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டால் அவரது மூளை சீக்கிரமே இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். அதுவே 70 வயது நோயாளிக்கு அது சாத்தியமில்லாமல் போகலாம். இந்த பாதிப்புக்குள்ளாவோரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் 3-6 மாதங்களுக்குள் முழுமையாக குணமடைகிறார்கள். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஓரளவு குணமடைகிறார்கள். இன்னொரு மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு நினைவிழப்பு நிரந்தரமாகிவிடுவதும் உண்டு.

Brain - Representational Image

Also Read: Covid Questions: குளிர்காலம் தொடங்க உள்ளதே; இதனால் கோவிட் பரவல் அதிகரிக்குமா?

அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவர் நினைவிழப்பை மீட்பதற்கான சிகிச்சைகளை மேற்கொள்வார். நினைவிழப்பு என்பது கோவிட் தொற்றின் விளைவா அல்லது வேறு ஏதேனும் உளவியல் பிரச்னைகளின் அறிகுறியா என்றும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் மனநல மருத்துவத்துக்கும் பரிந்துரைக்கப்படும். கூடவே ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சிகரெட், மது பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும். இவையெல்லாம் மூளை தன் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/will-covid-recovered-people-get-loss-of-memory

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக