Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

கைவிடாத தஞ்சை கலெக்டர், கண்ணீரைத் துடைத்த விகடன்; நெகிழும் சிறுவன்!

பட்டுக்கோட்டை அருகே, பெற்றோரை இழந்து பாட்டியின் அரவணைப்பில் இருந்த ஒரு சிறுவன், படிப்புக்கும் வாழ்வாதாரத்துக்கும் வழியில்லாத துயரத்தில் தவித்து நின்றதை, விகடன் செய்தி மூலமாக கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதையடுத்து அவர்களுக்குக் கைகொடுத்த கலெக்டர், சிறுவனின் மூன்று வருடப் படிப்புக்கான செலவையும், அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொடுத்து அவர்களது கண்ணீரைத் துடைத்து நெகிழவைத்திருக்கிறார்.

பாட்டி லெட்சுமியுடன் சபரிநாதன்

பட்டுக்கோட்டை அருகேயுள்ள களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சபரிநாதன். பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில், தன் பாட்டி லெட்சுமியின் பராமரிப்பில் வளர்ந்துவந்தார். 60 வயதைக் கடந்த நிலையில், வாழ வழியில்லாமல் வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த லெட்சுமி பாட்டி, தவித்து நின்ற பேரன் சபரிநாதனையும் சேர்த்துச் சுமந்தார்.

சிறிய அளவிலான ஓட்டு வீடு, பாதியோடு நின்ற வீட்டின் நான்குபுறச் சுவர்கள் என இவையெல்லாம் லெட்சுமி பாட்டியின் வறுமைநிலையை உணர்த்தின. சிறுவன் சபரிநாதன் படிக்க வழியில்லாமல் பாட்டியுடன் தவித்து நின்றதை, ' 'எல்லா வழியும் மூடிக்கிடக்கு!' - உயிரிழந்த பெற்றோர், கலங்கி நிற்கும் சிறுவன்' என்ற தலைப்பில் விகடன் தளத்தில் செய்தியாகப் பதிவிட்டிருந்தோம்.

சிறுவனுக்கு உதவிய கலெக்டர்

இதை, தஞ்சாவூர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். சிறுவனின் நிலை கேட்டுக் கலங்கிய கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டவர்களை அனுப்பிவைத்து சிறுவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துதர அறிவுறுத்தினார். இன்னொரு பக்கம், விகடனில் வெளியான செய்தி, வாசகர்கள் பலரைக் கலங்கச் செய்தது; தங்களால் முடிந்த சிறு உதவிகளைச் செய்தனர். சமூக ஆர்வலரான பாக்கியலெட்சுமி, லெட்சுமி பாட்டிக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் மற்றும் உடனடித் தேவைக்கான பண உதவியையும் செய்தார்.

விவரம் அறியாத பாட்டிக்கும், பேரனுக்கும் தன்னார்வலர் இளைஞர் கார்த்திகேயன் உறுதுணையாக இருந்து அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சிறுவனையும் லெட்சுமி பாட்டியையும் சந்தித்துப் பேசி, அவர்களின் தேவை என்னவென்று கேட்டார்.

சபரிநாதன், `பத்தாம் வகுப்பு முடிச்சுட்டேன். அடுத்து பாலிடெக்னிக் படிக்கணும். ஆனா அதுக்குப் பணமில்லை' என்று சொல்ல, லெட்சுமி பாட்டி, 'எனக்குக் கண்ணு சரியா தெரியலை. வீட்டுல லைட் வசதியும் இல்ல. சிமினி விளக்கு தரும் வெளிச்சம் எங்களுக்குப் போதலை. வீட்டுக்கும் எங்களுக்கும் வெளிச்சம் கொடுத்தீங்கன்னா நானும் என் பேரனும் கரை சேர்ந்துடுவோம்' என்று நா தழுதழுக்கச் சொன்னார்.

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

கலெக்டர், தானே நேரடியாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொண்டு, சபரிநாதன் படிப்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார். படிப்புக்கான ஒரு வருடக் கட்டணம், பிற தேவைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நிதியிலிருந்து ரூ.20,000, வீட்டில் மின்சார வசதி ஏற்படுத்துவதற்காக ரூ.10,000 என மொத்தம் ரூ. 30,000-க்கான காசோலையை ஆட்சியர் சபரிநாதனிடம் வழங்கினார். மேலும் அடுத்த இரண்டு வருடங்களுக்கான கல்விச் செலவை ஏற்று, அதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கிறார்.

சபரிநாதனிடம், 'இனி உனக்கு எப்போ, என்ன தேவைன்னாலும் எங்கிட்ட கேளு. செஞ்சு தர்றேன். நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வந்தாத்தான் உன்னோட கஷ்டம் நிரந்தரமா தீரும்' என்று ஆட்சியர் அறிவுரை கூற, பாட்டியும் பேரனும் தங்கள் முகத்தில் படர்ந்திருந்த எதிர்காலக் கவலைகள் நீங்கி, நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர்.

Also Read: பட்டுக்கோட்டை : `எல்லா வழியும் மூடிக்கிடக்கு!' உயிரிழந்த பெற்றோர்; கலங்கி நிற்கும் சிறுவன்!

லெட்சுமி பாட்டியிடம் பேசினோம். ''என் பேரப்புள்ளையைப் படிக்கவெச்சு கரையேத்துறது கஷ்டம்னு தவிச்சு நின்னேன். எங்களோட நிலைமையை கலெக்டர் அய்யா கவனத்துக்குப் போகவெச்சீங்க. அய்யா என் பேரனை காலேஜுல சேர்த்துவிட்டு கட்டணத்துக்கும் வழி பண்ணிட்டாரு. வீட்டுல கரன்ட் இழுக்கவும் வேலை நடக்குது.

ஆரம்பத்துல கலெக்டர் அய்யா, 'எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்'னு சொன்னப்போ, எல்லாம் சரி ஆகிடும்னு முழுசா நம்பவும் முடியலை, நம்பாம இருக்கவும் முடியலை. ஆனா, எனக்கு முதியோர் உதவித்தொகை, பேரனுக்குப் படிப்பு, வீட்டுக்கு வெளிச்சம்னு எல்லாத்தையும் செஞ்சு கொடுத்திருக்கார் கலெக்டர் அய்யா. விகடனாலதான் இதெல்லாம் கைகூடியிருக்கு, எங்க வாழ்க்கையில வெளிச்சம் வந்துருச்சு'' என்று வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டார் பாட்டி.



source https://www.vikatan.com/news/tamilnadu/tanjore-collector-helped-the-student-who-lost-his-parents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக