Ad

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

மு.க.ஸ்டாலின்: `மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்தியாவில் உள்ள மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாகவும், முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருவதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கலந்துகொண்ட தி.மு.கவினர்

Also Read: கனவான அமைச்சர் பதவி; எம்.பி வேட்பாளராக்கிய `திருமதி முதன்மை’ - ராஜேஸ்குமார் தேர்வானது எப்படி?

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பட்டுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் லைம்லைட்டுக்குள் வந்துள்ளன. அந்த வகையில், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் சத்தி திருமண அரங்கில் தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் இந்த செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் 8 ஊராட்சிகள், 56 வாக்குச்சாவடிகளில் உள்ள 38,138 வாக்காளர்களை வீடு வீடாக சென்று திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிக்க வேண்டும். கடந்த 4 மாத கால ஆட்சியில், 8 ஊராட்சிகளில் துவங்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துக்கூறி, வாக்கு சேகரிக்க வேண்டும். திமுக தலைவர் அறிவிக்க உள்ள வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடக் கூடிய எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். அதற்காக, திமுக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். நான்கு மாத காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை கரூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் சட்டமன்றத்தில் எடுத்துக்கூறிய கோரிக்கைகளை ஏற்று, ரூ. 1,450 கோடி மதிப்பீட்டில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை மற்றும் தடுப்பணைகள் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. கரூர் மாவட்டத்திற்கு வேளாண்மை கல்லூரி, வெள்ளியணை குளித்தலை, பஞ்சப்பட்டி, ஜெகதாபி, கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி ஆற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வழிவகை செய்யப்படும்.

கூட்டத்தில் பேசும் செந்தில் பாலாஜி

தொடர்ந்து, இப்போது வறட்சியாக இருக்கும் பகுதிகளை, பசுமையான பகுதியாக மாற்றி மீண்டும் விவசாயத்தை செழிப்படையச் செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். தமிழக முதல்வரிடம் கோரிக்கைகளை எடுத்துக் கூறும் முன்னரே, அதனை நிறைவேற்றக்கூடிய முதல்வராகவும், அனைத்து தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய முதல்வராகவும் தமிழக முதல்வர் திகழ்கிறார். அதோடு, இந்தியாவில் உள்ள மற்ற முதல்வர்களுக்கு முன்னுதாரணமாகவும், முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராகவும் திமுக தலைவர் திகழ்ந்து வருகிறார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளையும் கைப்பற்றி, கரூர் மாவட்டம் கலைஞரின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம்.

Also Read: நிலக்கரி விவகாரம்: `மேட்டூரிலும் ஆய்வு நடத்தப்படும்!’ - அமைச்சர் செந்தில் பாலாஜி

நமக்கு வாக்களித்தவர்கள் சந்தோஷப்பட கூடிய வகையிலும், வாக்களித்தவர்கள் ஏன் வாக்களிக்காமல் விட்டோம் என வருத்தப்படக் கூடிய வகையிலும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் செயலாற்றி வருகின்றனர். மக்கள் நமது அரசு என பெருமை கொள்ளும் அளவுக்கு பணியாற்றி வருகின்றனர். இன்னும் கரூர் மாவட்டத்திற்கு பல சிறப்பு மிக்க திட்டங்கள் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட உள்ளது. எனவே, அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/senthil-balaji-speech-about-karur-local-body-election-and-cm-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக