எங்கள் குடும்பத்தில் எல்லோரும் எல்லா பிரச்னைகளுக்கும் இயற்கை வைத்திய முறைகளையே பின்பற்றுவோம். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, இயற்கை உணவுகளைச் சாப்பிடுவது என பாரம்பர்ய வாழ்வியலைப் பின்பற்றுபவர்கள் நாங்கள். யாருக்கும் பெரிய உடல்நல பாதிப்புகள் வந்து படுத்ததில்லை. கொரோனா ஆரம்பித்த நாள் முதல் தினம் ஒரு சூப், வாரத்துக்கு 3 நாள்கள் கஷாயம் எடுத்துக்கொள்கிறோம். நிலவேம்பு, கபசுரக் குடிநீர் எல்லாம் குடிக்கிறோம். இவை தராத எதிர்ப்பு சக்தியையா தடுப்பூசி கொடுத்துவிடும்? நாங்களும் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளத்தான் வேண்டுமா?
- சரண்யா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
`` பார்மபர்ய வாழ்க்கைமுறையைப் பின்பற்றும் உங்களுக்கு முதலில் வாழ்த்துகள். பாரம்பர்யத்தைப் பின்பற்றுப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் இப்போதைய சூழலில் உங்கள் கேள்வி உண்மையில் உற்சாகம் அளிக்கிறது! எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், இயற்கை முறையிலான உணவுகளை எடுத்துக்கொள்வதும் நிச்சயமாக உடலின் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை சிறப்பாக்கும்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் சூப் ரகங்களும், மூலிகை கஷாய வகைகளும் நிச்சயம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தடுப்பூசி இல்லாத முதல் அலையின்போது, பெரும்பாலான மக்களின் உடல் குறிகுணங்களைக் குறைத்து பல்வேறு இன்னல்களில் இருந்து விடுவித்தன சித்த மருந்துகள். அப்போதும் சரி இப்போதும் சரி நம்மிடம் இருக்கும் மிகப்பெரிய ஆயுதமாகப் பாரம்பர்யத்தைப் பார்க்கலாம்.
Also Read: Covid Questions: கோவிட் காலத்தில் ஏறிய குழந்தையின் உடல் எடை; இதற்கு தீர்வு உண்டா?
இப்போது கூடுதலாக நோய் எதிர்ப்பு வன்மையைக் கூட்டுவதற்காக தடுப்பூசியும் நம்மிடம் இருக்கிறது. பாரம்பர்ய விஷயங்களை முறையாகப் பின்பற்றுவதோடு, தடுப்பூசியையும் எடுத்துக்கொள்வதால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். `கொரோனா வைரஸ் காரணமாக அதிதீவிரமாக நுரையீரல் பாதிக்கப்படுவதை தடுப்பூசி தடுக்கும்’ என்ற ஆரம்பகட்ட ஆய்வுகள் சொல்லும் நிலையில் அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம். பாரம்பர்ய சித்த மருத்துவத்தை உற்ற துணையாக வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு பாதுகாப்பளிக்கும். உங்கள் உடல்நிலை குறித்து மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை செய்துவிட்டு தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளுங்கள்."
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
source https://www.vikatan.com/health/healthy/our-family-follows-traditional-lifestyle-do-we-need-to-take-vaccines-for-covid-19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக