உலகிலேயே முதல்முறையாக ஒரு பெண் ஆரம்பித்து வழிநடத்தும் நிறுவனம் உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களுள் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. ஆன்லைன் வடிவமைப்பு தளமான கேன்வா (canva) பற்றித்தான் சொல்கிறோம். ஊரடங்குக் காலத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அசாத்திய வெற்றியைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார் கேன்வா நிறுவனர் மற்றும் சிஇஓ மெலனி பெர்கின்ஸ்.
200 மில்லியன் டாலர் நிதியைப் புதிதாகத் திரட்டியதன் மூலம் 40 பில்லியன் டாலர் மதிப்புடைய ஸ்டார்ட் அப் நிறுவனமாக கேன்வா திகழ்கிறது. கொரோனா காலத்திற்கு முன்பே வெற்றிப் பாதையில் இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தின் மதிப்பு ஐந்து மாதங்களில் இரட்டிப்பாகியிருக்கிறது.
சீனாவின் பைட் டான்ஸ் (டிக்டாக்), ஸ்ட்ரைப் (ஆன்லைன் கட்டணத் தளம்), ஸ்பேஸ் எக்ஸ் (எலான் மஸ்கின் ராக்கெட் நிறுவனம்) மற்றும் கிளார்னா (ஸ்வீடிஷ் நிதி தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியவற்றின் வரிசையில் உலகின் ஐந்தாவது பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக கேன்வா உயர்ந்துள்ளது. இதனால் கேன்வாவின் இணை நிறுவனர்கள் தற்போது ஆஸ்திரேலியாவின் முதன்மை பணக்காரர்கள் பட்டியலில் உள்ளனர்.
போஸ்டர்கள், காலண்டர், ரெஸ்யூம் தொடங்கி எதை வேண்டுமானாலும் கேன்வா உதவியுடன் எளிதாக வடிவமைக்க முடியும். போட்டோஷாப் போன்ற மென்பொருள் பயன்படுத்த மேம்பட்ட டிசைன் திறனும், பயிற்சியும் வேண்டும். கேன்வாவில் அதை மிக எளிதில் செய்துவிடலாம். அத்தனை டெம்ப்ளேட்கள் இருக்கின்றன கேன்வாவில்.190 நாடுகளில் 6 கோடி பயனர்களைக் கொண்டுள்ள கேன்வா 2021-ம் ஆண்டு இறுதியில் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு முன்பே கேன்வா அதன் ஊழியர்களை இரட்டிப்பாக்கியுள்ளது. 2021-ம் ஆண்டில் மட்டும் 1000 புதிய பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது அந்நிறுவனம். இந்த ஆண்டு வருவாயில் 30 சதவிகிதத்தைத் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்க முடிவு செய்துள்ளது கேன்வா. கேன்வா தலைமையகங்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலும் உள்ளன.
முன்பு குறிப்பிட்டது போல கேன்வா தொழில்முறை வடிவமைப்பாளர்களின் கருவியாக இல்லாமல் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் எளிமையான சேவையை வழங்கும் வகையில் 8,00,000 டெம்ப்ளேட்டுகளைக் கொண்டுள்ளது. 10 கோடி படங்கள், பல நூறு எழுத்துருக்கள் மற்றும் விளக்கப்படங்கள் என உங்களுக்குத் தேவையான அனைத்துமே கேன்வாவில் உண்டு. இதில் யார் வேண்டுமானாலும் வடிவமைக்க முடியும். அவர்களின் வடிவமைப்பை கேன்வாவுடன் பகிர்ந்து கொள்வதனால் கேன்வானில் புதிதாக நுழையும் பயனர் அதனை அப்படியே பயன்படுத்தவோ அல்லது சிறு திருத்தத்துடன் உபயோகிக்கவோ முடியும். தற்போது முன்னணி நிறுவனங்களாக இருக்கும் அடோப், ஃபிக்மா மற்றும் ஸ்கெட்ச் போன்ற நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்தும் பலரும் இப்போது கேன்வாவை உபயோகிக்கத் தொடங்கிவிட்டனர்.
உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஆண்கள் வழிநடத்துபவையாக இருக்க ஒரு பெண்ணாக கேன்வாவை உருவாக்கி வெற்றியடையச் செய்து சாதனை படைத்து இருக்கும் மெலனி பெர்கின்ஸை வாழ்த்தலாமே!
source https://www.vikatan.com/technology/tech-news/canva-became-the-most-valuable-company-founded-and-led-by-a-woman
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக