Ad

திங்கள், 6 செப்டம்பர், 2021

`உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு மதிப்பதில்லை; பொறுமையைச் சோதிக்காதீர்கள்!' - தலைமை நீதிபதி காட்டம்

அண்மையில், உச்ச நீதிமன்றத்தில் ஜி.எஸ்.டி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தீர்ப்பாயத்தில் சில நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து தீர்ப்பாயங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருவதாகவும் விளக்கமளித்தார்.

ஆனால், அவரின் வாதத்தை ஏற்றுக்கொள்ளாத தலைமை நீதிபதி ரமணா, ``தீர்ப்பாயங்களில் பணி நியமனம் நடைபெற்றதற்கான, நடைபெற்றுக்கொண்டிருப்பதற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா... மத்திய அரசு தீர்ப்பாய பணியிட நியமனத்தில் மெத்தனமாகச் செயல்படுவது வேதனையாக இருக்கிறது. பலத்த எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு 'தீர்ப்பாய சீர்திருத்தங்கள்' மசோதாவை நிறைவேற்றியது. அது அரசின் முடிவு என்று விட்டுவிட்டாலும், தொடர்ந்து பணி நியமன விவகாரத்தில் அலட்சியமாக இருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

உச்ச நீதிமன்றம்

எனவே, புதிய மசோதா என்ன நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது குறித்து மத்திய அரசு நீதிமன்றத்துக்கு விளக்க வேண்டும். அதேபோல், தீர்ப்பாயங்களில் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பலமுறை உத்தரவிட்டிருக்கிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்னும் 10 நாள்களுக்குள் தீர்ப்பாயங்களில் காலியிடங்களை நிரப்ப வேண்டும்" என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

ஆனால், மத்திய அரசு சார்பில் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் நீதிமன்றம் உத்தரவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மீண்டும் ஆஜரானார்.

அப்போது மத்திய அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகளை ஆராய்ந்துவிட்டுப் பேசிய தலைமை நீதிபதி ரமணா, ``மத்திய அரசு நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும், உத்தரவுகளையும் மதிப்பதில்லை. நீதிமன்றத்துக்கு மரியாதை அளிப்பதில்லை. நீதிமன்றத்தின் பொறுமையைச் சோதிக்காதீர்கள். தீர்ப்பாய விவகாரத்தில் எத்தனை பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கேட்டிருந்தோம். அது குறித்து இதுவரையிலும் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை. அதேபோல், சிலர் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறினீர்கள். அவர்களின் விவரங்களும் அரசுத் தரப்பிலிருந்து வரவில்லை" என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவைச் சாடினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா

தொடர்ந்து பேசிய அவர், ``மத்திய அரசின் செயல்பாடுகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. எங்களால் இந்தநிலையில் மூன்று நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஒன்று, நாங்கள் இந்தத் தீர்ப்பாய சீர்திருத்த மசோதாவை நிறுத்துகிறோம். இல்லையென்றால் தீர்ப்பாயங்களை நிரந்தரமாக மூடிவிட்டு, அதன் அதிகாரங்களை நீதிமன்றத்தின் வசம் எடுத்துக்கொள்கிறோம். அதுவும் இல்லையென்றால், தீர்ப்பாயங்களில் நியமன வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். மத்திய அரசு மௌனம் சாதிப்பதால் ஒரு பலனுமில்லை" என்றார்.

Also Read: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுழற்றிய சாட்டை! - மோடி அரசை `கவனிக்க’த் தொடங்கிவிட்டதா உச்ச நீதிமன்றம்?

அவரைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சந்திரசூட், ``மத்திய அரசு பலத்த எதிர்ப்புகளையும் மீறி இயற்றியிருக்கும் தீர்ப்பாய சீர்திருத்த மசோதா, நீதிமன்றச் சட்டங்களின் ஷரத்துகளுக்கு எதிராக இருப்பது குறித்து ஏற்கெனவே நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், சீர்திருத்த மசோதா இயற்றப்பட்டதற்கான நோக்கத்தை நீதிமன்றம் கேட்ட பின்னரும் மத்திய அரசு அது குறித்து விளக்கமளிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஏற்கெனவே, என்.சி.எல்.டி மற்றும் என்.சி.எல்.ஏ.டி போன்ற தீர்ப்பாயங்களின் செயல்பாடுகள் உறுப்பினர்கள் இல்லாததால் ஸ்தம்பித்துக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

மத்திய அரசு

நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் தீர்ப்பாயங்கள் முறையாகச் செயல்படாமல் இருப்பதால் கடும் நெருக்கடிநிலை ஏற்பட்டிருக்கிறது" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இந்த வழக்கின் மீதான விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

மேலும், அடுத்த திங்கள்கிழமைக்குள் தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்கள் மத்திய அரசால் முறையாக நிரப்பப்படும் என்று உச்ச நீதிமன்றம் எதிர்பார்ப்பதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/dont-test-our-patience-sc-judges-slams-central-on-tribunal-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக