மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கிறது. ஆனால் அடிக்கடி சிவசேனா பாஜக தங்களது பழைய நண்பன் என்பதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போதும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மோடியை வெகுவாக பாராட்டினார். பிரதமர் மோடியின் பிறந்தநாளில் மோடிக்கு நிகராக யாரையும் ஒப்பிட முடியாது என்று சிவசேனா வாழ்த்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியை வெறுப்பேற்றும் விதமாக பேசியிருக்கிறார். அவுரங்கபாத் நகரில் நடந்த அரசு விழாவில் மத்திய ரயில்வே இணையமைச்சர் ராவ்சாஹேப் தன்வே, மத்திய அமைச்சர் பகவத் கராட் ஆகியோருடன் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் கலந்து கொண்டார். இதில் பேசிய உத்தவ் தாக்கரே, ஆரம்பத்தில் ``எனது இன்னாள், முன்னாள் எதிர்காலத்தில் கூட்டணி சேர்ந்தால் வரக்கூடிய எதிர்கால நண்பர்களே..” என்று ஆரம்பித்தார்.
எதிர்கால நண்பர்களே என்று சொன்னபோது மேடையில் அமர்ந்திருந்த பாஜக அமைச்சர் ராவ்சாஹேப் தன்வேயை பார்த்து உத்தவ் தாக்கரே பேசினார். உத்தவ் தாக்கரே இவ்வாறு பேசியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாஜகவுடன் எதிர்காலத்தில் கூட்டணி சேரலாம் என்ற எண்ணம் உத்தவ் தாக்கரே மனதில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது.
Also Read: `மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை அடிப்பேன்!' - என்ற மத்திய அமைச்சர் கைது!
இது குறித்து நிகழ்ச்சி முடிந்த பிறகு உத்தவ் தாக்கரேயிடம் கேட்டதற்கு, ``காலம்தான் பதில் சொல்லும். என்னைப் பொருத்தவரை அரசியல் வக்கிரமானதாக இருக்ககூடாது. மகாராஷ்டிராவில் மஹாவிலாஸ் அகாடி ஆட்சியில் இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. ஆனால் நாங்கள் அனைவரும் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். நமது பதவிகளை மாநிலத்தின் நலனுக்காக பயன்படுத்தவேண்டும்” என்று தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேயின் இக்கருத்து குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், ``ஒவ்வாத கூட்டணி மாநிலத்திற்கு பாதகத்தையே விளைவிக்கும் என்பதை உத்தவ் தாக்கரே உணர்ந்துள்ளார். அதனால் தான் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியலில் எதுவும் நடக்கலாம். ஆனால் இப்போது எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார். உத்தவ் தாக்கரேயின் இக்கருத்து காங்கிரஸ் கட்சி தலைவர்களை அதிர்ச்சியடை வைத்துள்ளது.
source https://www.vikatan.com/news/politics/bjp-ministers-are-future-friends-uddhav-controversy-speech-from-congress-alliance
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக