``தென்காசியில் இருக்கும் ஜோஹோ நிறுவனத்தின் சி.இ.ஓ ஶ்ரீதர் வேம்புவுடன் ஒருநாள் பொழுதைக் கழித்தது, இமயமலைக்குச் சென்றுவந்த மாதிரி இருக்கிறது’’ - ஒரு வாரம் காலமாகியும் பரவசம் குறையாமல் சொல்கிறார் சோமசுந்தரம். கோவையில் உள்ள கே.பி.ஆர் மில்ஸ் நிறுவனத்தின் வைஸ் பிரசிடென்ட்டான இவர் சமீபத்தில் ஶ்ரீதர் வேம்புவைச் சந்தித்தது பற்றி சொன்னார்.
இரவு உணவுக்கு எங்களை அவருடைய பேட்டரி ஆட்டோவில் அழைத்துச் சென்றார். ஆட்டோவை அவரே ஓட்டும்போதும் எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. எத்தனை பெரிய மனிதர், அவர் நமக்கு ஆட்டோ ஓட்டுகிறாரே என்பதுதான் என் தர்மசங்கடத்துக்குத்தான் காரணம். இரவு உணவை எங்களைச் சாப்பிடச் சொல்லி பரிமாறியவர், அவர் இரவு சாப்பிடவில்லை. காலை, மதியம் மட்டுமே அவர் சாப்பிடுவாராம்.
நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் நிறைய விஷயங்களைப் பற்றி பேசினார். ஆனால், ஒருமுறைகூட அவர் `நான்', `எனது' என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்தவே இல்லை.. அவர் பேசப் பேச எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த அவருடைய தொலைநோக்குப் பார்வை மிகப் பெரிதாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். ப்ளஸ் 2 படித்தவர்களுக்கு நன்றாகப் பயிற்சி தருவதன்மூலம் அவர்களைத் திறமையான ஊழியர்களாக மாற்றி வருவதைப் பற்றி சொன்னார்.
ஜோஹோவில் செக்யூரிட்டியாக வேலைக்குச் சேர்ந்த ஒருவருக்கு நன்கு பயிற்சி அளித்ததன்மூலம் இன்று அவர் ஒரு புரோகிராமராக மாறியிருப்பதைப் பற்றி சொன்னார். நமது கல்விமுறையில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம் என எந்தவொரு விஷயத்துக்காகவும் நாம் வெளிநாட்டை எதிர்பார்க்கக் கூடாது. குறிப்பாக, ஆர்&டி-யில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இரவு உணவு முடிந்து, தூங்கச் செல்லும்வரை தொடர்ந்தது எங்கள் பேச்சு. நாங்கள் தூங்கிய அறையில் ஒரு ஃபேன் மட்டும் இருந்தது. ஏசி சமாச்சாரங்கள் எல்லாம் எங்கும் இல்லை. பேருக்கு ஒரு கொசுக்கூட கடிக்கவில்லை. நீண்ட நாள்களுக்குப்பிறகு நிம்மதியான தூக்கத்தை நான் அனுபவித்தது அன்றுதான்.
Also Read: மென்பொருள் துறையில் வெள்ளிவிழா... Zoho சாதித்த கதை!
முதல் நாள் இரவு தூங்கச் செல்லும்முன்பு, ``வாக்கிங் போகிற பழக்கம் இருக்கா...? காலையில் 5.30 மணிக்கு வாக்கிங் போகலாமா?’’ என கேட்டுவிட்டு தூங்கப் போனவர், மறுநாள் அதிகாலையில் சொன்ன நேரத்துக்கு வந்தார். ஜோஹோ அலுவலகத்தைச் சுற்றி அமைந்திருக்கும் தோட்டத்தை சுற்றிக் காட்டினார். வாழை, நெல்லி, மா என்று அவர் வைக்காத மரம் அந்தத் தோட்டத்தில் இல்லை. தனியாக ஒரு மாட்டுப் பண்ணையையும் வைத்திருக்கிறார்.
நான் ஷு அணிந்திருந்தேன். ஆனால், அவர் காலில் வெறும் 120 ரூபாய் செருப்பு. ``வாங்கி ஒன்பது மாசம் ஆச்சு. இன்னும் ஆறு மாசம் வரும்போல’’ என்றார்.
பலப்பல விஷயங்களைப் பற்றி பேசியபடி ஒரு சிறிய மலையை அடைந்தோம். அங்கே சில நிமிடங்கள் உட்கார்ந்து தியானம் செய்தார். அங்கிருந்த நாய் ஒன்று அவரைத் தேடிவந்து, சில வருடல்களை வாங்கிவிட்டுச் சென்றது. பின்னர், ``உங்களுக்கு ஓடையில் குளிக்க விருப்பமா அல்லது கேணியில் குளிக்க விருப்பமா?’’ என்று கேட்டார். அவர் பொதுவாக பொதிகை மலையில் இருந்துவரும் தண்ணீர் ஓடையில்தான் குளிப்பாராம். நாங்கள் கேணியிலேயே குளிக்கலாம் என்றோம்.
பக்கத்தில் இருந்த கேணிக்கு அழைத்துச் சென்றவர், உடுப்புகளைக் கழற்றிவிட்டு `டமால்' என்று குதித்துவிட்டார். கேணியில் குளித்தபடியே பல யோகாசனங்களைச் செய்தது பார்த்து எங்களுக்கு ஆச்சர்யம். பிறகு சூரிய நமஸ்காரம் செய்து முடித்தபின், சில நிமிடங்கள் தியானமும் செய்தார்.
Also Read: நிறுத்தப்படும் `Ease Of Doing Business' அறிக்கை; சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதா உலக வங்கி?
`நம் தேவைகள் மிகக் குறைவு. அதற்கு சம்பாதித்தால் போதும். கெளரவம் என்கிற வலையில் மாட்டும்போதுதான் நாம் மற்றவர்களுக்காக சம்பாதிக்கிறோம். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை’ என்று அவர் சொன்னதைக் கேட்க, ஆச்சர்யமாக இருந்தது என்று பரவசத்துடன் பேசி முடித்தார் சோமசுந்தரம். ரஜினிக்கு இமயமலை போல, ஜோஹோ ஶ்ரீதர் வேம்புவுக்குப் பொதிகை மலை போல!
source https://www.vikatan.com/business/news/kpr-mill-vice-president-somasundaram-shares-unknown-side-of-zoho-ceo-sridhar-vembu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக