”உன்னுடைய வெள்ளை முடிகளை ஏன் கலர் செய்வதில்லை?” என்று நடிகை சமீரா ரெட்டியின் தந்தை கேட்டதற்கு, சமீரா சொன்ன பதிலும், நரைத்த முடியும், வசீகரிக்கும் சிரிப்புமாக பகிரப்படும் சமீராவின் புகைப்படமும் தற்போது சமூக வலைதள ட்ரெண்டிங்.
மேக்னா தமிழ் திரைப்படங்களில் மறக்க முடியாத கதாநாயகிகளின் பெயர்களில் ஒன்று. ஒரு பெண்ணை பார்த்ததும் அவள் அழகில் மயங்கி காதல் கொள்வதும், அவளுக்காக கிடாரை தூக்கிக்கொண்டு அமெரிக்கா வரை சென்று தேடி அலைந்து, பாட்டு பாடி, கண்டுபிடித்து காதலை உணர்த்துவதும் தமிழ் சினிமா அதுவரை கண்டிராத காட்சிகள். காணும் யாரும் அமெரிக்கா மட்டுமல்ல செவ்வாய் கிரகத்தில் இருந்தாலும் தேடிச் செல்லும் அளவுக்கு ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் அழகும், இளமையுமாக ஃப்ரஷ்ஷாக இருந்தார் சமீரா.
பெரும்பாலான நடிகைகள் போல தனது 35-வது வயதில் திருமணம் செய்து கொண்டார் சமீரா. தனது முதல் குழந்தை பிறந்தபோது 105 கிலோ எடையுடன் இருந்த சமீராவுக்கு உடல் பருமன் குறித்த கவலையுடன், மகப்பேறுவினால் ஏற்படும் மன அழுத்தமும் சேர்ந்து கொண்டது. எந்த நேரமும் உடல் பருமன் பற்றிய எண்ணம், மற்ற நடிகைகள் குழந்தை பிறந்து ஒரே மாதத்தில் தன்னுடைய பழைய எடைக்கு திரும்புவதைப் போல தன்னால் செய்ய முடியவில்லை என்கிற தாழ்வு மனப்பான்மை, மன அழுத்தத்தால் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பது போன்ற காரணங்களால் தன்னுடைய குழந்தையை சரியாக கவனித்துக் கொள்ள முடியாத சூழல் என எல்லாம் சேர்ந்துகொண்டு அவரை மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது. Alopecia areata எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படும் கொத்தாக முடி உதிரும் நோயினால் பாதிக்கப்பட்ட பின்னரே சமீராவுக்கு தன்னுடைய உடல் குறித்த அக்கறை ஏற்பட்டிருக்கிறது.
இப்படி இரண்டு வருடங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த சமீரா மீண்டும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வந்தார். முன்னர் இருந்ததைப் போல ‘Sexy Sam’ஆ அல்லது ‘Yummy Mummy’ ஆக இருக்க போகிறாரா என்ற கேள்வி வந்தபோது, ’ஃபாலோயர்ஸ் கிடைப்பதற்காக பொய்யான சமூக வலைதள வாழ்க்கை வாழப் போவதில்லை’ என்று துணிச்சலாக முடிவெடுத்தார்.
அவர் தன்னுடைய பிரச்னைகளை வெளிப்படையாக பேச ஆரம்பித்தபோது சமூக வலைதளங்களில் மிக மோசமாக ட்ரோல் செய்யப்பட்டார். யாரையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய 40-வது வயதில் இரண்டாவது கர்ப்ப காலத்தில் தனக்கு ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களை வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய ஆரம்பித்தார். தனது எட்டாவது மாதத்தில் நீருக்கடியில் பிகினி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியபோது முதன்முறையாக ஆண்களைவிட அதிகமான பெண்கள் ஃபாலோயர்ஸ் ஆனார்கள். அவர்கள் சமீராவை “முன் மாதிரியாக” #Inspiration பார்க்க ஆரம்பித்தார்கள்.
அதே சமயம் இவையெல்லாம் இயற்கை என்று சொல்லி அப்படியே இருந்துவிடவில்லை. சமீரா தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் தனது உடல் எடையை குறைப்பதோடு அது தொடர்பான காணொளிகளை பகிர்ந்து மற்றவர்களையும் செய்யத் தூண்டினார். குடும்பம், குழந்தை வளர்ப்பு, உடல் எடை குறைப்பு, மன நலம், மாமியார் – மருமகள் உறவு என சமீரா பேசாத விஷயங்களே இல்லை.
எல்லாவற்றையும் விட சமீராவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையில் இருக்கும் உறவு மிக முக்கியமாக பேசப்பட வேண்டியது. பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்தவுடன் 55-60 வயதிலேயே ஓய்வு காலம் வந்துவிட்டதாக வீட்டுக்குள் பெண்கள் முடங்கத் தேவையில்லை, வீட்டுக்குள்ளேயே மாமியார் மருமகள் தோழிகளாக இருக்கலாம் என்பதை இருவரும் உணர்த்துகிறார்கள். இருவரும் சேர்ந்து #sassysaasu #saasbahu எனும் ஹேஷ்டேக்கில் வெளியிடும் காணொளிகள் வேற லெவல். தன் மருமகளுடன் சேர்ந்து, “இளமை திரும்புதே” என்று மாடர்னாக ஆடிப்பாடி கொண்டாட்டமாக இருக்கும் சமீராவின் மாமியாருடைய இன்ஸ்டா ரீல்களுக்கு என்று தனி ரசிகர் மன்றமே உண்டு.
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அவரது நரை பற்றிய பதிலில், “என் புறத்தோற்றத்தை வைத்து மற்றவர்கள் என்னை பற்றி நினைப்பதை குறித்து அவமானமாக உணரவில்லை. நான் இப்படி வெளிப்படையாக இருப்பது விடுதலை உணர்வை தருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். புறத்தோற்றத்தை பற்றி அதிகம் கவலைப்படும், சமூகம் மற்றும் குடும்பத்தினரின் அழுத்தத்தால் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கும் பெண்கள் இனி சமீராவின் கூற்றை உதாரணமாகச் கொள்ளலாம்.
புறத்தோற்றம் குறித்த அதீத முக்கியத்துவம் மனிதர்களுக்கு எப்போதும் உண்டு. சமூக வலைதளங்கள் வந்த பிறகு அது மேலும் கூடி இருக்கிறது. நாம் யாராக இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அங்கீகாரத்தை குடும்பம், அலுவலகம், நட்பு வட்டத்தில் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களிடம் இருந்து எதிர்பார்ப்பது மனித இயல்பு. பல சமயங்களில் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் முன்முடிவுகள் நம்மை காயப்படுத்துகிறது. இதுபோன்ற சமயங்களில் ”இதுதான் நாம்” என்று நேர்மறையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்வது தேவைப்படுகிறது. அதற்கான மிகப்பெரும் வெளிதான் சமூக வலைதளங்கள். இது நமது குணம், ஆட்டிட்யூட் மட்டுமல்லாமல் புற தோற்றத்துக்கும் பொருந்தும்.
மேக்கப், கேமரா ஃபில்ட்டர், இன்ஸ்டாகிராம் ஃபில்ட்டர் அதுபோக மேக்கப்புக்கு என்று ஆப்கள் என பலகட்ட ஃபில்டர்கள் வழியாக பயணித்தே ஒருவரின் முகம் இன்ஸ்டாவில் போட்டோ அல்லது ரீலாக வெளிவருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரிகளுக்காக மேக்கப் சாதனங்களில் இருந்து ஆடைகள் வரை வாங்கும் பழக்கம் புது கலாசாரமாக மாறி இருக்கிறது. இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம், நேரம், வசதிகளைப் பொறுத்தது. என்றாலும், அதை கண்டு அவ்வாறு செய்யமுடியாதவர்கள் மனம் வருத்தப்பட தேவையில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் மன நலத்துக்கு நல்லது என்று தொடர்ந்து மனநல மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு ‘மங்காத்தா’ திரைப்படம் வந்தபோது நடிகர் அஜித் அறிமுகமாகும் காட்சி ஆண்களின் உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பல்வேறு காரணங்களால் 25 வயதிலேயே இளநரையும், 30 வயதில் முடிக் கொட்டுவதும் அதிகமாகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் உடல் பருமன், நரைத்த தலையுடன், தனது வயதையும் வெளிப்படையாகச் சொல்லி நடித்தது 35-40 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு மிகப்பெரும் இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதன் பிறகு இந்த 10 ஆண்டுகளில் ஆண்கள் பலரும் முடி நரைப்பதை பற்றி கவலைப்படாமல் அதை ‘சால்ட் அண்ட் பெப்பர் லுக்’ என்று பெருமைப்பட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.
அதேபோல் பெண்களுக்கும் 30 வயதுக்கு மேல் தங்களுடைய புறத்தோற்றம் பற்றிய கவலை ஆரம்பிக்கிறது. பெரும்பாலும் அந்த வயதில் திருமணமாகி, குழந்தைகள் பிறந்து, உடலின் வடிவத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகிறது. அதுபோக வயதுக்கே உண்டான கண்ணின் ஓரத்தில் சுருக்கங்கள், லேசாக மேடிடும் தொப்பை, வயிற்றிலும், முதுகிலும் கூடும் சதை, இளநரை என உருவத்தில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்கள் இன்றைய பெண்களை அதிகம் கவலை கொள்ளச் செய்கிறது.
போன தலைமுறை வரை பெண்களுக்கு பெரும்பாலும் 18-20 வயதுக்குள் திருமணம் ஆகியிருக்கும். 40 வயதில் தங்கள் பிள்ளைகளுக்கு திருமண வயதாகியிருக்கும். அதனால் உடல் பருமன், நரை பற்றியெல்லாம் தங்களுக்கு கவலை இருந்தாலும் அது சமூகத்தில் எல்லோரும் பொது என்பதுபோல எளிதாக எடுத்துக்கொண்டனர். ஆனால் இன்று பல பெண்கள் தங்கள் கரியரில் செட்டிலான பின்பு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
பல்வேறு காரணங்களால் பெண்கள் 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகமாகியிருக்கிறது. அவர்களது குழந்தை பள்ளி செல்லும் வயது வரும்போது அம்மாவுக்கு கிட்டத்தட்ட நாற்பது வயது ஆகி விடும். பெரும்பாலான அம்மாக்கள் 30 வயதுக்குள் இருக்கும்போது அவர்களுடன் பத்து வயது வித்தியாசத்தில் இருக்கும் இவர்கள் வயதானது போல் காட்சி அளிக்காமல் இருக்க தங்களை இளமையாக வைத்துக்கொள்வதை அவசியம் என்று கருதுகின்றனர்.
இன்றைய குழந்தைகள் தங்கள் அம்மாக்களை நண்பர்களின் அம்மாக்களுடன் ஒப்பிட்டு மற்றவர்களை போல் உடை அணிய, வாகனம் ஓட்ட, மேக்கப் செய்துகொள்ளச் சொல்லி நிர்பந்திக்கின்றன. இவற்றையெல்லாம் மூன்றிலிருந்து ஐந்து வயது குழந்தைகள் செய்கின்றன என்றால் நம்ப முடிகிறதா? குழந்தைகள் இப்படி கேட்கும்போது அவர்களின் அறிவையும், ரசனையையும் பார்த்து ஒரு பக்கம் அம்மாக்கள் மெய்சிலிர்த்து கொண்டாலும் உள்ளுக்குள் இந்த பேச்சு அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்குகிறது. அம்மாவின் உடல் பருமனை சுட்டிக்காட்டி குறைக்கச் சொல்லும் குழந்தைகளும் உண்டு.
இப்படி இருக்கும் ஒரு தலைமுறையின் முன் தன்னுடைய நரைத்த தலையை, பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல் பருமனால் வந்த தொப்பையை, முதுகில் தொங்கும் சதையை, பருமனால் உடலில் ஏற்படும் வரிகளை, முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகளை, வயதை மறைக்காமல் ஒரு நடுத்தர வயது பெண் இருப்பது அபூர்வம். அதோடு அவை எல்லா பெண்களுக்கும் இயற்கையாக ஏற்படும் விஷயங்கள்தான், இதை மறைக்கவோ, வருந்தவோ தேவையில்லை. இந்த புறத்தோற்றம் நான் யார் என்பதை தீர்மானிக்காது என்று சொல்லும்போது அப்பெண் மற்றவர்களுக்கு ‘முன் மாதிரி’ ஆகிறார். அப்பெண் புகழின் உச்சியில் இருந்த ஒரு நடிகையாக இருக்கும் போது அவரது கூற்று பலரையும் சென்றடைவதோடு மற்ற பெண்களையும் இன்ஸ்பயர் செய்கிறது.
சமீராவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சொல்வது இதுதான். ‘’உடலை அழகு கோட்பாடுகளின் அடிப்படையில் வெறுக்காதீர்கள். உடல் உங்கள் எண்ண ஓட்டத்தை கவனிக்கிறது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற கவலையை விடும்போது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை ஆகி வாழ்வை ரசித்து வாழ ஆரம்பிக்கிறோம்” #ImperfectlyPerfect #BodyPositivity
source https://cinema.vikatan.com/tamil-cinema/why-we-should-celebrate-sameera-reddy-and-how-she-became-a-good-role-model
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக