Ad

வியாழன், 16 செப்டம்பர், 2021

பிரசாந்த் கிஷோர் வந்தால்... காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ்ஸா... மைனஸா?! - ஒரு பார்வை

2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதன்பின் சோனியா காந்தி தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது வரை தற்காலிகத் தலைவர் சோனியா காந்தி தலைமையில்தான் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மத்தியில் ஆட்சியை இழந்ததோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஆட்சியை இழந்து பழம் பெருமை பேசும் கட்சியாக மட்டுமே வலம் வந்துகொண்டிருக்கிறது காங்கிரஸ். அசைக்கமுடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கட்சிக்குத் தலைமை இல்லாததது, உட்கட்சிப் பூசல், மக்கள் பிரச்னையில் களத்தில் இறங்கிப் போராடாமல் சமூக வலைத்தளத்தில் கருத்துச் சொல்வது என எல்லா வகையிலும் மக்களிடமிருந்தும் இளம் தலைமுறையினரிடமிருந்தும் காங்கிரஸ் கட்சி வெகு தொலைவில் விலகிவிட்டது.

கட்சியைச் சீரமைக்க வேண்டிய கட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிற்கிறது. அதற்கான திட்டங்களை வகுத்து பிரசாந்த் கிஷோர் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோருக்கு நெருக்கமான பிரசாந்த் கிஷோரின் இந்த திட்டங்கள் பிடித்துப் போகவே அவரைக் கட்சியில் சேர்த்து முக்கியப் பதவி கொடுத்துவிடலாம் என முடிவெடுத்தாகத் தகவல்கள் வெளியாகியன. அதுதான் இப்போது காங்கிரஸ் கட்சிக்குள் புதிய சர்ச்சைக்கான தொடக்கமாக அமைந்திருக்கிறது.

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரைக் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கலாம் எனவும் கூடாது எனவும் கட்சிக்குள் இரண்டு பிரிவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தால் அந்தக் கட்சிக்கு, அது ப்ளஸா மைனஸா... ஓர் அலசல்...!

Also Read: `ராகுல் காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை!' - திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

உட்கட்சி பூசலுக்கும் பதவிச் சண்டைக்கும் எப்போதும் குறையில்லாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேரக்க உள்ளதாக எழுந்த தகவல்கள்தான் தற்போது பூதாகரமாக உருவெடுத்திருக்கும் பிரச்னை. “பல மாநிலத் தேர்தல்களில் சிறப்பாகச் செயல்பட்டு அவர் பணியாற்றிய கட்சிகளுக்கு மிகப்பெரிய வெற்றியை பிரசாந்த் கிஷோர் தேடித் தந்திருக்கிறார். இந்தியாவின் மிக முக்கியமான மாநிலத் தேர்தல்களில் எல்லாம் செயல்பட்டிருக்கிறார். அவரை கட்சியில் சேர்ப்பது காங்கிரசுக்குத்தான் நல்லது. வரும் தேர்தல்களில் அவர் கட்சிக்கு வெளியிலிருந்து கட்சியில் தேவையான சீர்திருத்தங்களைச் செய்வதற்குப் பதிலாக, கட்சிக்கு உள்ளே இருந்து செயல்பட வேண்டும். அவரை சேர்க்கக்கூடாது என்று சொல்பவர்கள் எல்லாம் கட்சியின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்” என பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்ப்பது குறித்துப் பேசியிருக்கிறார்கள் அக்கட்சியினர் சிலர். மற்றொரு புறம், “மிகப் பழைமையான பாரம்பர்யமிக்க கட்சியில் இடையில் சிலரைச் சேர்ப்பதால் எந்த மாற்றமும் வந்துவிடாது. மூத்த தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் களத்தில் காங்கிரஸின் பலம் என்ன என்பதையும் உணர்ந்து கொண்டு அதற்கேற்றாற்போல செயல்பட்டாலே போதும். கட்சி சீரமைக்கப்படுவதோடு தேர்தல்களிலும் வெற்றிகளைக் குவிக்கலாம்” என மூத்த தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ராகுல் காந்தி - பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோரைக் கட்சியில் சேர்க்காமல் அவரது ஆலோசனைகளை மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என சில தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். கட்சியில் ஒரு உறுப்பினரை சேர்ப்பதற்கே இத்தனை குழப்பமா என ராகுல் காந்தி நொந்துபோய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூக ஆலோசனை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அது காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேசத் தேர்தலில் பயன்படவில்லை. அந்தத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. தேர்தல் நடக்கும் இடத்தின் மக்கள் மனநிலை, கள நிலவரம் என ஆய்வு செய்து அதற்கேற்ப வியூகங்களை வகுத்தாலும் அதுவும் தோற்றுப் போக வாய்ப்பு இருக்கிறது என்பதற்கு உத்தரப்பிரதேசத் தேர்தல் ஓர் உதாரணம். மேலும், அரசு வேலை, கார்ப்பரேட் கம்பெனி எனப் பயணித்த பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்து செயல்பட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது.

பீகார் தேர்தலில் தனது வெற்றிக்கு உதவியதற்காகக் கட்சியின் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்தார் நிதிஷ் குமார். ஆனால், அந்தப் பதவியில் நீண்ட நாட்கள் பிரசாந்த் கிஷோரால் நீடிக்க முடியவில்லை. கட்சிக்குள் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, அவர்களுக்குப் பதவி கொடுப்பது என எந்தப் பரிசார்த்த முயற்சியிலும் இதுவரை காங்கிரஸ் ஈடுபடவில்லை எனும்போது பிரசாந்த் கிஷோரின் வருகையைக் கட்சிக்குள் ஏற்றுக்கொண்டு அவருக்கு முக்கியப் பதவி கொடுப்பதற்குக் கட்சி நிர்வாகிகள் உடன்படுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவையெல்லாம் உறுதியாகக் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவைத்தான் கொடுக்கும். தேர்தல் வியூக வல்லுநராக வெற்றி பெற்றிருந்தாலும் அரசியல் தலைவராக பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகளை யாரும் அறிந்திருக்காதது என்பதால் அவரது வருகை ராகுலுக்கும் காங்கிரஸுக்கும் வலு சேர்க்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

சரத்பவார்-பிரசாந்த் கிஷோர்-மம்தா பானர்ஜி

புதிய நிர்வாகிகளைச் சேர்ப்பதை விட்டுவிட்டு கட்சிக்கு ஒரு நிரந்தரத் தலைமை, உட்கட்சிப் பூசல்களுக்குத் தீர்வு, கட்சியில் இருக்கும் இளம் தலைமுறை நிர்வாகிகளுக்கு முக்கியப் பதவி என ஏற்படுத்திக் கொடுத்தாலே காங்கிரஸ் மீண்டும் வலுவடைய வாய்ப்புகள் உருவாகும். முதலில் அதைச் செய்துவிட்டு பின்னர் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அதுவும் காங்கிரஸில் எப்போதும் எதுவும் நடக்கலாம் எனும்போது இந்த விவகாரத்திலும் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்...



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-the-party-get-stronger-if-prashant-kishore-comes-to-congress

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக