அற்ப விஷயம்தான். சிறியதொரு கூடாரம் கட்டும் முயற்சிதான். ஆனால் அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு எல்.ஐ.சி கட்டடம் அளவுக்கு உயர்ந்தது. ஏறத்தாழ பிக்பாஸ் வாசனை ‘சர்வைவர்’ ஷோவிலும் அடிக்கத் தொடங்கி விட்டது. தலைவி காயத்ரி ரெட்டி, அடுப்பில் வைத்த ரொட்டி மாதிரி பயங்கர சூடாகி விட்டார்.
ஆனால் இந்தச் சிறிய விஷயத்தை திகிலான பின்னணி இசையெல்லாம் போட்டு லவங்கம், பட்டையெல்லாம் மிக்ஸியில் அடித்து மசாலாவாகக் கிண்ட முயன்றார்கள்.
அப்புறம்… வேறென்ன? அழுகாச்சி டாஸ்க். ஒவ்வொருவரும் தங்களின் கண்ணீர்க் கதைகளை சொல்ல வேண்டும். சற்று பிரபலமாக இருந்தால் கூட போதும், “அவங்களுக்கு என்னப்பா... ஜாலி’’ என்றே நாம் நினைப்போம். ஆனால் அது சாதாரண நபரோ, பிரபலமோ, ஒவ்வொருவருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
நாளைக்கு எலிமினேஷன் இருக்கிறதாம்.. பார்வதி தானாக வந்து ஜீப்பில் ஏறினார். ‘‘வாட்?” என்று மிகையாக அதிர்ந்தார் காயத்ரி.
ஐந்தாம் நாளில் என்ன நடந்தது?
நெருப்பு கிடைத்த சந்தோஷத்தை வேடர்கள் அணி காலையிலும் கொண்டாடியது. கிழங்கை நெருப்பில் அவித்து சாப்பிட்டார்கள். “இந்த மாதிரி ருசியான உணவை என் வாழ்க்கையிலேயே சாப்பிடதில்லை” என்று மரவள்ளிக் கிழங்கிற்கே அதிக ஃபீலாகிக் கொண்டிருந்தார் நாராயணன். ஐந்தாவது நாளிலேயே இந்த நிலைமை. பத்தாவது நாளில் என்னென்ன ஆகுமோ? இவர்களைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும் ஒரு பூனையின் கதியை நினைத்தால் இப்போதே திகிலாக இருக்கிறது.
Also Read: பிக்பாஸ், மாஸ்டர் செஃப், சர்வைவர்... கமல்ஹாசன், விஜய் சேதுபதி, அர்ஜுனுக்கு சம்பளம் எவ்வளவு?
‘’ஆபத்தான மிருகங்கள் இருக்கும் இடம்’’ என்று துவக்க நாளில் சொன்னார் அர்ஜூன். இப்போதுதான் முதன்முறையாக ஒரு பாம்பை க்ளோசப்பில் காட்டினார்கள். ‘‘எவ்ளோ பெரிசு தெரியுமா, நான்தான் முதல்ல பார்த்தேன்’’ என்று மிகையாக வியந்து கொண்டிருந்தார் ராம்.
பெண்கள் தங்குவதற்காக ஆண்கள் கூடாரம் அமைக்க ஆரம்பித்தார்கள். ‘கட்டையை குறுக்கால வெட்டலாமா.. நெடுக்கா வெட்டலாமா?” என்கிற உரையாடலில் மாற்றுக் கருத்துகள் வெளிப்படத் துவங்கின. தன்னுடைய கருத்து ஆண்களால் ஏற்கப்படாததால் கோபமாகி தலைவி காயத்ரி தனியாக நடக்க ஆரம்பித்து விட்டார்.
‘இந்த வரலாற்றுச் சண்டை நமக்குப் புரியாமல் போய் விடக்கூடாது’ என்று நினைத்து முதன்முறையாக வாய்ஸ்ஓவர், சப்டைட்டில் எல்லாம் போட்டு விளக்கியது ‘சர்வைவர்’ டீம்.
பழநி முருகன் மாதிரி கோபித்துக் கொண்டு சென்ற காயத்ரியிடம் “நீதான் டீம் லீடர். நீயே இப்படி பண்ணா எப்படி? பொறுமையா உட்கார்ந்து பேசு” என்று சரியாக உபதேசம் செய்தார் ராம். ஆனால் பிறகு காயத்ரி கோபமாக இருப்பதை சக அணியினரிடம் சென்று ராம் சொல்ல, அதற்காகவும் பயங்கரமாக கோபித்துக் கொண்டார் காயத்ரி. “உன்னை யார் போயி இதையெல்லாம் அங்க சொல்லச் சொன்னது?”
‘‘பெண்களின் உபயோகத்திற்காகத்தான் நாம் கூடாரம் தயாரிக்கிறோம். அவங்களே இப்படி பண்ணா எப்படி?’’ என்று விக்ராந்த்துக்கு கோபமும் ஆதங்கமும் கலந்து வந்தது. என்றாலும் இந்த விவகாரத்தை மிக முதிர்ச்சியாகக் கையாண்டார் விக்ராந்த். காயத்ரியிடம் சென்ற அவர் “வேணும்னா நான் மன்னிப்பு கேக்கறேன். எதுவா இருந்தாலும் நேரா பேசி தீர்த்துக்கலாம்” என்றது நல்ல விஷயம்.
தனது அணியைச் சார்ந்தவர்களே தனக்கு உபதேசம் செய்வதைக் கண்டு சற்று கடுப்பான காயத்ரி தனியாகச் சென்று கண்கலங்க ஆரம்பித்து விட்டார். “அவங்களை கொஞ்சம் தனியா விடுங்க. உடனுக்குடன் பேச வேண்டாம்” என்று சரியான ஆலோசனையை சரியான சமயத்தில் உமாபதி சொன்னது சிறப்பு.
‘‘சரி... வாங்க உட்கார்ந்து பேசி இதை தீர்த்துப்போம்” என்று சர்வதேச அமைதி மாநாடு கூடியது. “என்னுடைய கேரக்டரே இப்படித்தான். எனக்கு கோபம் வந்தா ரெண்டு நிமிஷம் தனியா போயிடுவேன். வீட்லயும் நான் இப்படித்தான்” என்று தன்னிலை விளக்கம் தந்தார் காயத்ரி.
‘‘அது கோபமோ மகிழ்ச்சியோ... இரண்டு நிமிடம் தள்ளிப் போடு. அதன் பிறகு அதன் மீதான எதிர்வினைகளை சொல் / செய்’’ என்கிற எழுத்தாளர் பாலகுமாரனின் உபதேசத்தை காயத்ரி பின்பற்றுவது சரிதான். ஆனால் அதை முதலிலேயே மற்றவர்களிடம் சொல்லி விட்டு சென்றிருக்கலாம். அதை விடவும் முக்கியமான விஷயம், ஒரு டீமின் லீடராக இருந்து கொண்டு இப்படிச் சட்டென்று உரையாடலைத் துண்டித்துக் கொண்டு வெளியேறியிருக்கக்கூடாது. தலைவர் என்பவர் தீர்வு காணவே முயற்சி வேண்டும். வீட்டில் செய்யும் சிறுபிள்ளைத்தனமான விஷயத்தையெல்லாம் அணியில் இருந்து கொண்டு பொதுவில் செய்யக்கூடாது.
“அவங்க முயற்சி பண்ணி தோக்கட்டும். பிறகு என் கிட்ட தானா வருவாங்க’’-ன்னு சொல்றீங்களே காயத்ரி. ஒரு லீடரா இருந்துக்கிட்டு இப்படியெல்லாம் பேசலாமா... அவங்களோட உழைப்பு தோக்கணும்னா விரும்பறீங்க?” என்று சரியான பாயின்ட்டை எடுத்து வைத்தார் விஜி.
“என் கிட்ட Attitude காண்பிச்சா பத்து மடங்கு திருப்பித் தருவேன். அதுவே அன்பு காண்பிச்சா 20 மடங்கு திருப்பித் தருவேன்” என்று விக்ராந்த் பன்ச் டயலாக் பேசியதோடு இந்தப் பஞ்சாயத்து சற்று ஓய்ந்தது. தன்னுடைய பிழையை காயத்ரி உள்ளூற உணர்ந்து கொண்டது போல்தான் தெரிந்தது.
இரு அணிகளுக்கும் அடுத்த ‘டாஸ்க்’ பற்றிய அறிவிப்பு வந்தது. ‘சர்வைவர்’ என்பதால் அந்த அறிவிப்பு மலையைத் தாண்டுகிற போட்டியோ, கடலில் குதிக்கிற சாகசமோ என்று பார்த்தால்… இல்லை.
ஒவ்வொவரும் தங்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மகிழ்ச்சி, துயரம், சோகம், சிரிப்பு போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டுமாம். ‘இது பிக்பாஸ் அயிட்டமாச்சே.. சர்வைவரில் எப்படி?’ என்று நம் மைண்ட் வாய்ஸ் அலறினாலும் ‘சரி... சொல்லுங்க கேட்டு வைப்போம்... வேற வழி?!” என்றுதான் தோன்றியது.
முதலில் ஆரம்பித்தவர் விஜி. ‘இயக்குநரான தன் தந்தை அகத்தியன் முதல் கணவர், மகன் போன்றவர்கள் வரை ஓர் அன்புக்குடும்பம் தன் பின்னால் இருப்பதுதான் பலம்’ என்பது போல் நெகிழ ஆரம்பித்தார். பொருத்தமான இடங்களில் வீடியோக்கள், பின்னணி இசை கூட்டி நம்முடைய நெகிழ்ச்சி உணர்வைத் தூண்டிவிட்டார்கள்.
“என்னுடைய தந்தை ரோபோ சங்கர் என் மேல அன்பைப் பொழிபவர். குண்டாகவும் கறுப்பாகவும் இருப்பது பற்றி நான் எப்போதுமே ஃபீல் செய்தது கிடையாது. இந்த நிகழ்ச்சிக்காக குடும்பத்தைப் பிரிந்து வந்தது கஷ்டமாக இருக்கிறது. இதுவரை இப்படி வந்தது கிடையாது. ‘ரோபோ சங்கரின் மகள்’, ‘பாண்டியம்மாள்’ ஆகியவற்றைத் தாண்டி ‘இந்திரஜா என்றால் யார்?’ என்கிற அடையாளத்திற்காகத்தான் இங்கே வந்திருக்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.
அடுத்த வந்த காயத்ரி “எங்க அப்பா எங்களை விட்டு பிரிஞ்சு 15 வருஷமாச்சு. அம்மாதான் எல்லாம். மாடலிங் பக்கம் போனேன். ஏராளமான கிண்டல்களை சந்திச்சிருக்கேன். தம்பிக்காக நான் நிறைய இழந்திருக்கேன். அவன் எனக்கு மகன் மாதிரி. என் தியாகத்தை புரிஞ்சுக்காம அவன் என்னை பல சமயங்கள்ல காயப்படுத்திடுவான். பணத் தேவைக்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கேன். Animal farm வெக்கணும்னுறது என்னோட ஆசை” என்று தன் பின்னணியை காயத்ரி விளக்கியபோது உலகத்தின் ஒரு ‘சிறந்த அக்கா’வை பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது.
சரண் பெரம்பூர் ஏரியா பையன். “அப்பாவுக்கு நடிகர் ஆகணும்னு ரொம்ப ஆசை. அவரால முடியல. ஸோ... என்னை நடிகனாக்கணும்னு ரொம்ப அலைஞ்சு திரிஞ்சுருக்கார். எனக்கு அதெல்லாம் பிடிக்கலை. தூங்கறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். (தம்பி… என் இனமடா நீ!) ஷூட்டிங்கிற்காக... காலைல எழுப்பும் போது கடுப்பா இருக்கும். ஆனா சினிமாவோட மதிப்பு என்னன்னு இப்பத்தான் தெரியுது” என்று இயல்பாக பேசி முடித்தார் சரண்.
தங்களால் நிறைவேற்றிக் கொள்ள முடியாத கனவுகள், லட்சியங்கள், விருப்பங்கள் போன்றவற்றை பிள்ளைகளின் தலையில் வலுக்கட்டாயமாக சுமத்துவது தவறான விஷயம். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை, கனவு, விருப்பம் இருக்கும். அதை அறிந்து கொண்டு வழிநடத்துவது பெற்றோரின் கடமை என்கிற விஷயத்தை இங்கு பதிவு செய்வது அவசியம் என நினைக்கிறேன்.
Also Read: சர்வைவர் - 3 |பாட்டில் வீசிய தலைவர்கள்... ரொம்ப லென்த்தா போன பார்வதி - ஸ்ருஷ்டி பஞ்சாயத்து!
“உங்க கண்ணீர்க்கதையெல்லாம் கேட்கும் போது எனக்கு கிடைச்சது ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைதான். சென்னை வந்து மாடலிங் பண்ணேன். ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ல வாய்ப்பு கிடைச்சது பெரிய விஷயம். இனி நல்ல ஆஃபர்களா வரும்'னு நம்புறேன்” என்று சாதாரணமாக பேசி முடித்து விட்டார் ராம். (‘’சென்டிமென்ட் சேர்த்தாதானே… ஃபுட்டேஜ் கிடைக்கும்... என்னப்பா நீயி?!’’ – ‘சர்வைவர்’ டீம் மைண்ட் வாய்ஸ்).
நகைச்சுவை நடிகரின் மகன் என்பதை நிரூபித்து விட்டார் உமாபதி. அதுவரை இறுக்கமாக இருந்த சபை, இவர் இயல்பான நகைச்சுவையில் பேச ஆரம்பித்த போது வெடித்து சிரிக்க ஆரம்பித்தது. “சின்ன வயசுல நல்லா படிப்பேன். ஓவர் தன்னம்பிக்கை காரணமா பத்தாவதுல படிப்பு போச்சு. அப்படியே ஆர்வமும் போச்சு... 90’s kid செய்யற எல்லா குறும்பையும் செய்வேன். நான்தான் கோளாறான ஆசாமின்னு பார்த்தா இங்க எனக்கு வந்த ஒட்டுமொத்த டீமும் அப்படித்தான் இருக்கு... இப்பத்தான் எனக்கே ஆறுதலா இருக்கு” என்று உமாபதி சொல்லி முடித்த பின் அனைவரின் முகங்களிலும் சிரிப்பு.
‘‘எங்க கிட்டயும் சீப்பு இருக்கு. நாங்களும் சீவுவோம்ல’’ என்று இன்னொரு பக்கம் ‘வேடர்கள் அணியும்’ கண்ணீர்க்கதைகளை கொட்டிக் கொண்டிருந்தது.
“நான் ஒரு ஹைப்பர் சைல்ட். எனவே சின்ன வயசுல, கண்ணாடி கிளாஸ் முதற்கொண்டு எல்லா கிளாஸ்லயும் என்னை சேர்த்து விட்டுடுவாங்க. 11 வயது முதல் படகு ஓட்டும் விளையாட்டில் ஈடுபடுறேன். சர்வதேச போட்டிக்காக சீனா போனேன். பெங்கால்ல கோல்டு மெடல் அடிச்சேன்” என்று ஸ்போர்ட்டிவ்வாக பேசினார் ஐஸ்வர்யா. இவர் படகு ஓட்டும் வீடியோவில் அத்தனை ஸ்டைலாக இருந்தார்.
“சினிமா சான்ஸூக்காக ரொம்ப அலைஞ்சிருக்கேன். ஸ்கூட்டர் ஓட்டிட்டு வர்ற மாதிரி ஒரு ஆடிஷன். கேமரா எங்க இருக்குன்னு தெரியாம வெகுளியா எங்கயோ பார்த்துட்டு வந்தேன். ‘சூப்பர்... நல்லா நடிக்கறே’ன்னு சொல்லிட்டாங்க” என்று ஜாலியாக ஆரம்பித்த நாராயணன், பிறகு ‘அம்மாவிற்கு கேன்சர்...” என்று தழுதழுக்க ஆரம்பித்ததைப் பார்த்ததும் சக அணியினரும் ஃபீலாக ஆரம்பித்தார்கள்.
அடுத்து வந்தார்கள் ஐயா.. ‘சர்வைவரின் நாயகி’யான பார்வதி. “இப்பத்தான் எனக்கு பேசவே வாய்ப்பு கிடைக்குது” என்று ஆரம்பித்தார். (எதே!). “அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அவர் மூச்சு சம்பந்தமான பிரச்னைல இறந்துட்டார். அப்போதான் நான் கடைசியா அழுதது. சாதிக்கணும்னு நிறைய ஆசை இருக்கு” என்று அவர் சுருக்கமாக பேசி முடித்துக் கொண்ட போது சர்வைவர் டீமுக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.
பெசன்ட் ரவி பேசியது சிறப்பாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ‘‘மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பா ஸ்டிரிக்ட். எனக்கு படிப்பு வரல. அண்ணனோட மெக்கானிக் ஷெட்ல வேலை செய்யவும் பிடிக்கலை. காசு கிடைக்கும்னு ரவுடியிஸம் பண்ண ஆரம்பிச்சேன். வீட்ல சரியா போட்டு பொளந்தாங்க. சினிமா பக்கம் போனேன். நம்ம உடம்பைப் பார்த்தவுடனே ‘லக்கி மேன்’ படத்துல வாய்ப்பு கிடைச்சது. நடிக்கிறது ஈஸின்னு நெனச்சேன். ஆனா ‘எக்ஸ்பிரஷனே வரலியேப்பா’ன்னு சொன்னாங்க... என் அம்மா இறந்தது எனக்கு பெரிய இழப்பு. இங்க எதுவும் நிரந்தரம் இல்லை.”
“எனக்கு அழகான மனைவி, குழந்தைகள் இருக்காங்க...” என்று தொடர்ந்த ரவி “பொண்ணு காலேஜ்ல புரொஃபசரா இருக்கா” என்று சொன்ன போது நமக்கே அத்தனை சந்தோஷமாக இருந்தது. ‘’ஐ லவ் சினிமா” என்று முடித்துக் கொண்டார் ரவி.
Also Read: சர்வைவர்- 4|வெள்ளத்துக்கு வந்த எம்எல்ஏ-போல் அர்ஜுன், மயிலுக்கு போர்வை தந்த வள்ளலாய் போட்டியாளர்கள்!
அடுத்த வந்த அம்ஜத் “என்னோட அண்ணனை என் அப்பான்னே சொல்லிடலாம். அந்த அளவுக்கு என்னை நல்லா படிக்க வெச்சார். என் வாழ்க்கையில் நடந்த முதல் முக்கியமான விஷயம் ‘வல்லினம்’ படத்துல கிடைச்ச ஹீரோ சான்ஸ். அடுத்தது ‘என்னோட கல்யாணம். ‘நாளைக்கு கல்யாணம் என்கிற சமயத்தில் மனைவியோட அப்பா இறந்துட்டார். நான் முதன்முதலில் போன்ல கேட்டது அவங்களோட அழுகையைத்தான். உடனே நானும் ரொம்ப ஃபீலாகி என்னோட அன்பைத் தெரிவிச்சேன். அப்போதான் ஒருவரை ஒருவர் ஆழமாக கண்டுகொண்டோம். என் பொண்ணுன்னா எனக்கு உசிரு. நான் ஏதாவது இங்க தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க” என்று தனது பேச்சை நிறைவு செய்தார் அம்ஜத்.
‘சரி... அழுது... சிரிச்சு... கலங்கி முடிச்சிட்டீங்களா... அடுத்த அயிட்டத்துக்கு போலாம்’ என்கிற முடிவிற்கு வந்த சர்வைவர் டீம் ஒரு செய்தி அனுப்பியிருந்தது. அது என்னவென்று பார்த்தால் அணியில் பலவீனமான ஒருவரை தேர்ந்தெடுத்து ரகசியமாக வாக்களிக்க வேண்டுமாம். அணித்தலைவர் இதில் கலந்து கொள்ள முடியாதாம்.
ஆக... இந்த வாரம் ஒரு எலிமினேஷன் இருக்கலாம் என்று தெரிகிறது. ‘மாற்றுக் கருத்துக்களை அவ்வப்போது சொல்வதால் நிச்சயம் நானாதான் இருக்கும்” என்று தானாக வந்து வம்படியாக ஜீப்பில் ஏறினார் பார்வதி.
‘வந்த முதல் வாரத்துலயே எலிமினேஷேனா?’ என்கிற அதிர்ச்சியும் சங்கடமும் போட்டியாளர்கள் மத்தியில் தென்பட்டாலும் பாரம்பரிய சடங்கை மீற முடியாதே?!
முதன் முதலில் எலிமினேட் ஆகப் போகிறவர் யார்?
‘நமோ பார்வதி பதயே’ என்கிற பக்திப்பாடலுடன் இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன்.
source https://cinema.vikatan.com/television/survivor-5-bigg-boss-like-emotions-with-an-elimination-ahead-this-week
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக