திருச்செங்க்கோட்டில் இயங்கிவரும் ஒரு பெட்ரோல் பங்க் மேலாளரிடம், அந்த பங்கில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே, நண்பர்களோடு சேர்ந்து வழிப்பறி செய்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுசம்பந்தமாக, பெட்ரோல் பங்க் ஊழியர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக 6 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Also Read: ``நீ சிறுநீர் கழித்தால், எங்க ஊருக்கே தீட்டு'' - இளைஞரைத் தாக்கி சாதிய வன்கொடுமை செய்த கும்பல் கைது!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகில் உள்ள சித்தாளந்தூர் அருகே கார்த்திக்கேயன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இதில், மேலாளராக வேணுகோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த 11 - ஆம் தேதி வழக்கம் போல் பெட்ரோல் பங்கில் வசூலான ரூ. 4,82,000 பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றார். திருச்செங்கோட்டில் உள்ள வங்கியில் பணத்தை செலுத்த சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவரை இரண்டு பேர் பின்தொடர்ந்தனர். அவர்கள் திடீரென வேணுகோபால் சென்ற வாகனத்தை வழிமறித்தனர்.
பின்னர், அவரை மிரட்டி, தாக்கி அவர் வைத்திருந்த ரூ. 4,82,000 பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, அவர் திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஊரக காவல் நிலைய போலீஸார், இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று காலை போலீஸார் பாலமடை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் மூவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீஸார், அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று, அவரிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் முடிவில், அவர்கள் ராமாபுரத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஸ்வரன், பிரபாகரன், தினேஷ்பாபு என்பது தெரியவந்தது. அதோடு, பெட்ரோல் பங்க் மேலாளர் வேணுகோபாலிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் அவர்கள்தான் என்பது தெரிந்தது. இந்த வழிப்பறிக்கு கார்த்திக்கேயனின் மற்றொரு பெட்ரோல் பங்கில் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வரும், கொல்லப்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (25) என்பவர்தான் காரணம் என்பது தெரியவந்தது. மேலும், இந்த வழிப்பறி சம்பவத்தில் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
Also Read: வழிபறி முயற்சியில் இளம் பெண் உயிரிழப்பு... சென்னையில் அடுத்த பயங்கரம்!
இதையடுத்து, போலீஸார் ஜீவானந்தத்தை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் வழிப்பறிக்கு திட்டம் தீட்டி கொடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், ஜீவானந்தம், விக்னேஸ்வரன், பிரபாகரன், தினேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் போலீஸார் திருச்செங்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழிப்பறியில் தொடர்புடைய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க் மேலாளரிடம் பணத்தை இளைஞர்கள் வழிப்பறி செய்துள்ள் சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
source https://www.vikatan.com/news/crime/in-thiruchengode-robbery-case-police-arrested-few-and-in-search-for-others
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக